இன்றைய இறைமொழி
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறு
விடுதலைப் பயணம் 16:2-4, 12-15. எபேசியர் 4:17, 20-24. யோவான் 6:24-35
கீழானதை விடுத்தல்
‘உயரம் தாண்டுதல்’ விளையாட்டை நாம் விளையாடியிருப்போம், அல்லது பார்த்திருப்போம். ஒரு நீண்ட குச்சியை ஊன்றி உயரத்தைத் தாண்டுகிற ஒருவர் உயரத்துக்குச் சென்றவுடன் தான் சுமந்து சென்ற குச்சியை விட வேண்டும். அப்படி அவர் விடும்போதுதான் மற்ற பக்கத்திற்கு தாண்டிச் செல்ல முடியும். தான் பிடித்து ஏறிய குச்சியைப் பற்றிக்கொண்டே இருக்கிற நபர் தன் பக்கமே மீண்டும் விழுவார் அல்லது இலக்குக் குச்சியைத் தாண்டமாட்டார்.
‘நிறைவானது வரும்போது குறைவானது மறைந்துபோகும்’ என்கிறார் பவுல். குறைவானதை நாம் களையும்போதுதான் நிறைவானது நம்மை நிரப்பிக்கொள்ளும்.
தாழ்வானவற்றையும் கீழானவற்றையும் விடுத்து உயர்வானவற்றையும் மேலானவற்றையும் பற்றிக்கொள்ள இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
இன்றைய நற்செய்தி வாசகத்தின் சூழல் இயேசுவைத் தேடிய மக்கள் கூட்டம். கடந்த வார நற்செய்தி வாசகத்தில், இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்து கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக, ‘நானே வாழ்வுதரும் உணவு!’ என்னும் பேருரையை ஆற்றுகிறார் இயேசு. இந்தப் பேருரையின் தொடக்கப் பகுதியே இன்றைய நற்செய்தி வாசகம். திபேரியக் கடலின் கரையருகே உணவு உண்ட மக்கள் இயேசுவைத் தேடி கப்பர்நகூம் செல்கிறார்கள். தங்களுடைய உடலுக்கு உணவு தேடிச் சென்றவர்களுடைய உள்ளங்களைத் தம்மை நோக்கித் திருப்புகிறார் இயேசு.
‘ரபி, எப்போது இங்கு வந்தீர்?’ என்னும் கேள்வியோடு தொடங்குகிறது நிகழ்வு. ‘எப்போது’ என்பது நேரத்தைக் குறிப்பதாக இருந்தாலும், மனுவுருவான காலத்தைக் குறிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். ‘ரபி’ என்னும் அழைப்பு, இயேசுவை மக்கள் போதகர் என ஏற்றுக்கொண்டதைக் குறிக்கிறது. தொடர்ந்து, ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும்? நீர் காட்டும் அறிகுறி என்ன?’ எனக் கேட்கிறார்கள் மக்கள். அவர்களுடைய முன்னோர் பாலைவனத்தில் உண்ட மன்னா என்னும் உணவை எடுத்துக்காட்டு அறிகுறியாக முன்மொழிகிறார்கள். இறுதியாக, ‘வாழ்வுதரும் உணவு நானே’ எனத் தன்னையே வெளிப்படுத்துகிறார் இயேசு.
வயிற்றுக்கான உணவு என்னும் தாழ்வான தேடலை விடுத்து, நிலையான வாழ்வுக்கான உணவை மக்கள் தேட வேண்டும். மன்னா என்னும் உணவு பாலைவனப் பயணத்தில் மட்டுமே பசிபோக்கியது. இயேசு என்னும் உணவோ வாழ்க்கை முழுவதும் பசி போக்கும் அல்லது பசி போக்கி வாழ்வைத் தரும்.
மூன்று நிலைகளில் ‘தாழ்வானதை’ விட்டு அவர்கள் நீங்க வேண்டும்? (அ) ‘ரபி’ (‘போதகர்’) என்னும் தலைப்பை விடுத்து இயேசுவை ‘நானே’ (‘யாவே’) என ஏற்றுக்கொள்ள வேண்டும். (ஆ) ‘உடலுக்கு உணவு’ என்னும் நிலையிலிருந்து எழும்பி, ‘ஆன்மாவுக்கு வாழ்வு’ என்னும் நிலைக்கு உயர வேண்டும். (இ) ‘அறிகுறி தேடுதல்’ என்னும் நிலை விடுத்து, ‘நம்பிக்கை கொள்தல்’ நிலைக்குச் செல்ல வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வியத்தகு முறையில் மன்னாவும் காடையும் வழங்குகிறார். எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் தாங்கள் பெற்ற விடுதலை வாழ்வை மறந்துவிட்டு, தாங்கள் அடிமைத்தனத்தில் உண்ட உணவை நினைவில் ஏற்று கடவுளுக்கு எதிராக முணுமுணுக்கிறார்கள். உணவா? விடுதலை வாழ்வா? என்று தங்களுக்குள் கேள்வியைக் கேட்டு, ‘உணவு’ ஒன்றே அவசியம் என்று முடிவுசெய்துகொள்கிறார்கள். ஆண்டவராகிய கடவுளிடம் சரணாகதி அடைவதை விடுத்து, பாரவோனிடம் மீண்டும் திரும்ப முயற்சி செய்கிறார்கள்.
செங்கடலைக் கடந்து அவர்கள் தொடர்கின்ற பயணத்தில் இன்று இரண்டாம் முறையாக முணுமுணுக்கின்றனர். முதலில், தண்ணீருக்காக அவர்கள் முணுமுணுத்தனர் (காண். விப 15:22-27). இரண்டாவது முணுமுணுப்பு முன்னதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள், எகிப்தில் நைல் நதியின் கரைகளில் விளைச்சலைக் கண்டு, அதன் நிறைவை உண்டவர்கள், இப்போது பாலைவனத்தின் குறைவையும், வெறுமையையும், பாதுகாப்பின்மையையும் தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக மாறுகின்றனர். உணவுத் தேவை குறித்த அவர்களுடைய அங்கலாய்ப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும், எகிப்தின் உணவே தங்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கை – ‘இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து’ – ஏற்புடையது அல்ல.
தங்கள் கற்பனையில் மட்டுமே இருந்த இறைச்சிப் பாத்திரத்தின் நிறைவின்மேல் விருப்பம் கொள்வதும், கானல் நீர் போலிருந்த அப்பத்தை உண்டு நிறைவுகொள்வதில் நாட்டம் கொள்வதும் எகிப்தில் அவர்கள் பட்ட அடிமைத்தனத்தின் நினைவுகளை மறைத்துவிட்டது. எகிப்தின் உணவுக்காக, தங்கள் ஆண்டவராகிய கடவுள் தந்த விடுதலையை மறந்துவிட்டு, மீண்டும் பாரவோனுக்கு அடிமைகளாகிட அவர்கள் விரும்பினர். கடவுள் அவர்கள் செய்த அனைத்தையும் அப்படியே துடைத்து எடுத்து தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்துவிடுவது போல இருந்தது அவர்களுடைய செயல். கடவுள் அவர்களுக்கு விடுதலை தந்தார், அதை இலவசமாகத் தந்தார். ஆனால், இப்போது அவர்கள் மீண்டும் அடிமைகளாக இருந்தனர். அதற்காக தங்கள் இன்னுயிரையும் விலையாகத் தர முயன்றனர். பாலைவனத்தில் நிலவிய உணவுப் பற்றாக்குறை கடவுளுடைய அரும்பெரும் செயல்களை மறந்துவிட அவர்களைத் தூண்டியது. மேலும், கடவுள் தங்களைத் தொடர்ந்து பராமரிப்பாரா? என்ற அவநம்பிக்கைநிறை கேள்வியையும் அவர்கள் உள்ளத்தில் எழுப்பியது.
அவர்கள் தங்கள் மனத்தளவில் எகிப்து நாட்டையே விரும்பி ஆண்டவருக்குத் துரோகம் செய்தாலும், ஆண்டவர் தன் பிரமாணிக்கம் மற்றும் பற்றுறுதிநிலையில் தவறவில்லை. முணுமுணுக்கும் அந்த மக்களுக்கு மன்னாவும் காடையும் வழங்குகின்றார். எபிரேயத்தில், ‘மன்னா’ என்றால், ‘அது என்ன?’ என்பது பொருள். பாலைவன மரங்கள் சுரத்த பிசின் போன்ற உணவு வகையே மன்னா. அதிகாலையில் மரத்தில் வடியும் அது மதிய வெயிலில் மறைந்து போகும். காடைகள் பாலைவனத்தை ஒரே வேகத்தில் கடக்க முடியாமல், சோர்வடைந்து ஆங்காங்கே தரையிறங்கி நின்று ஓய்வெடுக்கக்கூடியவை. இவற்றை உணவாகத் தந்ததன் வழியாக, கடவுள் இயற்கையின் வழியாக அவர்களுக்கு ஊட்டம் தருகின்றார்.
‘விண்ணகத்தின் கொடையான’ மன்னா அவர்களுக்கு தினமும் கிடைக்கும். அதைச் சேகரித்து வைக்கவோ, சேமித்து வைக்கவோ வேண்டாம் என்று கடவுள் அவர்களை எச்சரித்தார். ஓய்வுநாளுக்கு முந்திய நாள் மட்டும் அவர்கள் ஓய்வுநாளுக்காகச் சேமித்துக்கொள்ளலாம். இப்படியாக, அவர்கள் ஆண்டவராகிய கடவுளின் பராமரிப்புச் செயலில் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அத்தகைய பற்றுறுதியும் கீழ்ப்படிதலும் கடவுளின் மக்கள் கொள்ள வேண்டிய அடிப்படைப் பண்புகளாக இருந்தன. இப்படியாக, தங்களுடைய கற்பனை உணவையும், திட்டமிடுதலையும் விட்டு இறைவனின் விரலைப் பிடித்துக்கொண்டு அவர்கள் பயணம் செய்ய வேண்டியதாக இருந்தது. தொடர்ந்து அவர்களுக்கு உணவு கொடுத்ததன் வழியாக கடவுள் தன் மக்களுக்குப் பிரமாணிக்கமாக இருந்தார். ஆனால், மக்களோ உள்ளத்தில் உறுதியற்றவர்களாக இருந்தனர் – ஒரு பக்கம் ஆண்டவர் தரும் உணவையும் உண்டனர், இன்னொரு பக்கம் கருணையற்ற தங்களுடைய எகிப்தியத் தலைவர்களின் உணவின்மேலும் நாட்டம் கொண்டவர். ஆண்டவருக்கும் பாரவோனுக்கும் இடையே ஆடிக்கொண்டிருந்த ஊசல் போல இருந்தது அவர்களுடைய வாழ்க்கை.
இரண்டாம் வாசகம் (காண். எபே 4:17,20-24), இரண்டு வகையான வாழ்க்கை முறைகளை வேறுபடுத்திக் காட்டுகிறது: கிறிஸ்தவ முறை மற்றும் புறவினத்தார் முறை. இந்த இரண்டு முறைகளுக்கும் இடையே இருக்கின்ற தெரிவை எபேசிய நகரத் திருஅவைக்கு முன்மொழிகின்றார் பவுல். சமரசமற்ற ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றார். ‘இது அல்லது அது. இடைப்பட்டது எதுவும் இல்லை’ என்று நேரிடையாக அவர்களுக்குச் சவால் விடுகின்றார். புறவினத்து முறைமேல் உள்ள ஈர்ப்பை வெல்வது அவர்களின் அன்றாடப் போராட்டமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார். பழைய வழிகளை விட்டுவிட்டு, தங்கள் மனப்பாங்கை அவர்கள் புதுப்பித்து, ‘கிறிஸ்துவை அணிந்துகொள்ள’ அழைக்கின்றார்.
நம் வாழ்வில் ஒவ்வொரு கட்டமும் கீழானதுக்கும் மேலானதுக்குமான இடையில் நின்று நாம் தெரிவை மேற்கொள்வது கட்டாயமாக இருக்கிறது. தள்ளிப்போடுதலுக்கும் வேலையைச் செய்வதற்குமான தெரிவு, உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுவதற்கும் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்குமான தெரிவு, அடிமைத்தனத்திற்கும் விடுதலை வாழ்வுக்குமான தெரிவு. ஒன்றைப் பற்றிக்கொண்டு மற்றதை விடுக்க வேண்டும். எப்படி?
(அ) தேர்ந்து தெளிதல். மேலானதைக் கீழானதலிருந்து வேறுபடுத்திப் பார்க்கும் முதிர்ச்சி.
(ஆ) பற்றிக்கொள்தல். எந்தவொரு சமரசமும் செய்யாமல் மேலானதைப் பற்றிக்கொள்தல்.
(இ) விடாமுயற்சி. மேலானதைப் பற்றிக்கொள்தலை ஒரு தொடர் செயல்பாடாகக் கொள்தல்.
‘ஆண்டவர் அவர்களுக்கு வானகத்து உணவை வழங்கினார்!’ எனப் பாடுகிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 78). மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லாலும் உயிர் வாழ்கிறார். அப்பம் நம் உடலுக்கு நிறைவு தருகிறது. ஆண்டவரின் சொல்லோ நம் ஆன்மாவுக்கு வாழ்வு தருகிறது. கீழானதை விடுத்து மேலானதைப் பற்றிக்கொள்தல் நலம்.
(ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி, அருள்பணியாளர்களின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னியின் திருநாளைக் கொண்டாடுகிறோம். கடவுளிடம் மட்டுமே வேரூன்றி, மேய்ப்புப் பணியில் அக்கறை காட்டும் அருள்பணியாளர்களாக வாழ நாம் தூண்டப்படுவோமாக!)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: