இன்றைய இறைமொழி
ஞாயிறு, 7 ஜூலை 2024
பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு
எசேக்கியேல் 2:2-5.2 கொரிந்தியர் 12:7-10. மாற்கு 6:1-6
வலுவின்மையில் வல்லமை
இந்தியத் திருஅவையில் ஆயர்கள் அறிவிக்கப்பட்ட செய்தி சமூக வலைத்தளங்களில் பரவும்போதெல்லாம் ஒருசேர இரண்டு வகையான பின்னூட்டங்களைப் பெறுகிறது. முதல் வகையான பின்னூட்டம், ஆயர் தெரிவுக்கான வாழ்த்துச் செய்தி. இரண்டாம் வகையான பின்னூட்டம், அவர்களைப் பற்றிய எதிர்மறையான விமர்சனம். அவர்களின் குடும்ப பின்புலம், சாதி, பழக்கம், நட்பு வட்டம் ஆகியவற்றை விமர்சித்து பல எழுதப்படுகின்றன. ஒருவருடைய குடும்பமோ, சாதியோ, உறவுகளோ அவருடைய தெரிவு அல்லவே! அவருடைய வாழ்வில் அவர் செய்த நற்காரியங்கள், மேய்ப்புப் பணி, கல்விப் பணி ஆகியவை அப்படியே வழித்தெடுத்து தூக்கி எறியப்பட்டு மேற்காணும் எதிர்மறையானவை மட்டும் அவர்கள்மேல் ஒட்டப்படுவது நமக்கு வேதனை அளிக்கிறது.
இது ஆயர் பெருமக்களின் தெரிவுகளின்போது மட்டுமல்ல, மாறாக, எல்லா நேரங்களிலும் நடக்கிறது. துறவற சபையில் ஒரு மாநிலத் தலைவி தெரிவுசெய்யப்பட்டவுடன், பங்குத் தந்தை ஒருவர் புதிதாகப் பங்கிற்கு நியமிக்கப்பட்டவுடன் என எல்லா நேரங்களிலும் நடக்கிறது. கத்தோலிக்கக் கிறிஸ்தவ உலகில் மட்டுமல்ல. வெளி உலகிலும் நடக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக நடராஜன் என்பவர் கிரிக்கெட்டில் சில சாதனைகள் நிகழ்த்தியவுடன், கூகுள் எந்திரமே வியக்கும் அளவுக்கு அவருடைய சாதி தேடப்பட்டது என்பது நிதர்சனமான உண்மை. அதாவது, ஒருவர் உலகில் அல்லது திருஅவையில் மின்னுகிறார் என்றால், அந்த வெளிச்சத்துக்காக அவர் விழித்திருந்த இரவுகளை அப்படியே கூட்டி வெளியே தள்ளிவிட்டு, அவரிடம் இருக்கும் ஓர் இருட்டுப் பகுதியை முதன்மையாக வைத்து அவரை ஒட்டுமொத்தமாக இருட்டடிக்க நினைப்பது மிகப்பெரிய வன்மம் என்று நாம் சொல்லலாம்.
இந்த வன்மம் நம் எல்லாருடைய உள்ளங்களிலும் ஏதோ ஓரிடத்தில் அமர்ந்துகொண்டே இருக்கிறது.
மனித இனத்தின் மனிதாபிமானமற்ற இந்த வன்மத்தை எதிர்கொண்ட மூன்று நபர்களை இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் நாம் சந்திக்கின்றோம்: எசேக்கியேல் (முதல் வாசகம்), பவுல் (இரண்டாம் வாசகம்), இயேசு (நற்செய்தி வாசகம்).
இரண்டாம் வாசகத்திலிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம். கொரிந்தியத் திருஅவை பவுலின் கண்களில் விழுந்த தூசியாக, அவருடைய செருப்புக்குள் சிக்கிய சின்னக் கல்லாக உறுத்திக்கொண்டும் அழுத்திக்கொண்டும் இருக்கிறது. ‘நீங்க எப்படியும் போங்கடா!’ என்று சொல்லிவிட்டு ஓய்ந்துவிடவும் அவருக்கு மனமில்லை! ‘உங்களுக்கு ஏதாச்சும் செய்யணுமே!’ என்ற ஏக்கம் எதிர்பார்ப்பும் அவருக்கு இல்லை! பாவம் பவுல்! துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறார்பவுல். அப்படி என்ன பிரச்சினை கொரிந்து நகரில்? கொரிந்து நகரம் ஒரு மெட்ரோபோலிடன். புதுமை விரும்பிகள். புதிதாக எது வந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். கிறிஸ்தவத்தை அப்படித்தான் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், தங்களின் ‘கொரிந்து’ வாழ்க்கை முறையை அவர்களால் விட முடியவில்லை. இது தொடர்பான முரண்களை பவுல் தன் முதல் திருமுகத்தில் கையாளுகின்றார். பவுல் கொரிந்து நகரை விட்டுச் சென்றவுடன், ‘சூப்பர் திருத்தூதர்கள்’ (இப்படித்தான் பவுல் அவர்களை அழைக்கின்றார்) என்னும் ஒரு குழுவினர் வந்து அவர்களின் மனத்தை மாற்றி, பவுல் அறிவித்த நற்செய்தியிலிருந்து அவர்களைத் திருப்புகின்றனர். அவர்களின் வாய்ஜாலம், சொற்பந்தல் அவர்களைக் கவர்ந்துவிடுகிறது. பவுலையும் அவர் அறிவித்த நற்செய்தியையும் தங்கள் புறங்கைகளால் தள்ளி விடுகின்றனர். தன் வாழ்க்கை முழுவதும் உண்மையாக, நேர்மையாக இருக்கின்ற பவுலால், அந்த மக்களின் நேர்மையற்ற இச்செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகவும் மனம் நொந்து போகிற அவர், ‘என் உடலில் தைத்த முள் போல ஒன்று என்னை வருத்திக்கொண்டே இருக்கிறது’ என்று மனம் திறக்கிறார்.
‘உடலில் தைத்த முள்’ என்பது பவுலின் உடல்நலக்குறைவு, பேச்சுத்திறமையின்மை, நிதிக்குறைபாடு, குழுமப் பிரச்சினை என பல பொருளில் புரிந்துகொள்ளப்பட்டாலும், பவுல் எதைச் சொல்ல வந்தார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், ‘உடலில்’ என்று அவர் சொல்வதால் இச்சொல்லாட்சி அவருடைய உடல்நலக்குறைவு அல்லது இயலாமையைக் குறிப்பதாக இருக்கலாம். ‘உடலில் தைத்த முள்’ என்பது பவுலால் மறைக்க இயலாத ஒன்று என்று நாம் புரிந்துகொள்வோம். பவுலின் உடலில் தைத்த முள்ளைக் கண்டவர்கள் எல்லாம் அவர்மேல் இரக்கப்படுவதற்குப் பதிலாக, அவருடைய வலுவின்மை கண்டு எள்ளி நகையாடினர்.
பவுல் தன் திருத்தூதுப் பணியால், தன் எழுத்துக்களால் மிக உயர்ந்து நின்றாலும், உடலில் தைத்த ஒற்றை முள்ளால் கூனிக் குருகி, செருப்புத் தூசி போல உணர்கின்றார். எந்த அளவுக்கு அது அவருக்குத் தாழ்வு மனப்பான்மையைக் கொடுத்திருக்கும்! தன் கண்களில் தான் வீழ்ந்துவிட்டது போல அல்லவா அவர் நினைத்திருப்பார்! அந்த முள்ளை, ‘சாத்தானால் அனுப்பப்பட்ட தூதன்’ எனப் பவுல் வரையறுக்கிறார். பவுல் அனுபவித்த வலுவின்மை அவருக்கு மிகப்பெரிய அவமானமாக இருந்தது. அதுவே அவருடைய திருத்தூதுப்பணிக்கான தடையாக மாறியது.
இந்த வலுவின்மை தன்னிடமிருந்து நீங்க வேண்டும் எனப் பவுல் கடவுளிடம் வேண்டுகின்றார். தன் முயற்சிகள் எல்லாம் பலன் தராதபோது இறைவனிடம் சரணடைகிறது மனித மனம். தன் வலுவின்மையே இறைவன் செயல்படும் தளம் என உணர்ந்தார் பவுல். அந்த வலுவின்மையில் இறைவன் செயல்பட்டதால் அதுவே தன் வல்லமை என அறிக்கையிடுகின்றார். மேலும், இந்த நேரத்தில்தான், ‘என் அருள் உனக்குப் போதும்!’ என்ற இறைவனின் மேலான உடனிருப்பை அவர் உணர்கின்றார்.
ஆக, வலுவின்மை பவுலைப் பொருத்தவரையில் வல்லமையாக, இறைவனின் இயங்குதளமாக மாறுகிறது.
நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் சொந்த ஊருக்கு வருகின்றார். தொழுகைக் கூடத்தில் கற்பிக்கின்றார். கேட்டவர்கள் வியக்கிறார்கள். ‘மரியாவின் மகன்தானே!’ என அவரை அழைக்கின்றனர். இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுப் பிறந்தார் என்ற பேச்சு நாசரேத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவியது. அதனால்தான், அதையே கேலி செய்யும் விதமாக, ‘யோசேப்பின் மகன்!’ (வழக்கமாகச் சொல்லப்படுவது) எனச் சொல்லாமல், ‘மரியாவின் மகன்!’ – ‘ஆணுறவு இல்லாமல் பிறந்த மகன்!’ – என அழைக்கின்றனர். மேலும், ‘தச்சர்!’ ‘நம்மில் ஒருவர்!’ எனச் சொல்லி அவரைப் போதகராக ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர்.
இயேசுவின் எளிமையான பிறப்பு அவருடைய உடலில் தைத்த முள்ளாக மற்றவர்களுக்குத் தெரிகிறது. இயேசுவின் இந்த எளிய பின்புலம் கண்டு அவர்மேல் இரங்காமல், அவரைப் பற்றி இடறல்படுகின்றனர். அவரைப் பற்றி அதிகம் தெரிந்தவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள் என்பதுதான் உச்சகட்ட முரண். அவர்களுடைய பொறாமை அல்லது குறுகிய மனப்பான்மையால் அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். அவர்களின் எதிர்ப்பும் நிராகரிப்பும் எந்த அளவுக்கு இருந்தது என்றால், ‘இயேசுவால் வேற வல்ல செயல்கள் செய்ய இயலவில்லை’ என்று எதார்த்தத்தை அப்படியே பதிவு செய்கின்றார் மாற்கு. அவர்களுடைய நம்பிக்கையின்மை கண்டு இயேசு வியப்புறுகின்றார். மற்ற ஊர்களுக்குப் புறப்படுகின்றார். தன் ஊராரின் மனநிலை கண்டு, அறியாமை கண்டு, இழிநிலை கண்டு இயேசு மனதிற்குள் சிரித்திருப்பார். அவர்கள்மேல் அவருக்குக் கோபம் இல்லை. மாறாக, அவர்களின் இயலாமை கண்டு இரக்கமே கொள்கின்றார்.
ஆக, இயேசுவின் குடும்பப் பின்புலம் மற்றும் அவருடைய தச்சுத் தொழில் அவருடைய வலுவின்மையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இயேசு சில வல்ல செயல்களைச் செய்துவிட்டு, தன் பணியைத் தொடர அங்கிருந்து புறப்படுகின்றார்.
இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் எசேக்கியேலின் அழைப்பு பற்றிய பகுதியாக இருக்கிறது. இறைவாக்கினரைக் கடவுள், ‘மானிடா’ என அழைக்கிறார். கடவுளின் திருவுளத்தை அறிவிக்கவும் கடவுளின் செயல்களைச் செய்யவும் ஏற்படுத்தப்பட்ட மிகச் சாதாரண மனிதரே இறைவாக்கினர் எனக் காட்டுவதற்காக, ‘மானிடா’ என்ற சொல்லாடல் இங்கே பயன்படுத்தப்படுகிறது. சிலைவழிபாடு செய்துகொண்டு, பிளவுபட்ட மனத்தினராய் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களுக்கு எசேக்கியேல் உரைத்த செய்தி அவர்களைத் தொடவில்லை. ஒலி கேட்காதவர்போல இருந்துகொள்கின்றனர். இறைவாக்கினர் அறிவிக்கும் தீங்கு எதுவும் தங்களுக்கு நேரிடாது என அவர்கள் நினைத்துக்கொள்கின்றனர். அவர்களின் எதிர்ப்பு மனநிலை இறைவாக்கினர் எசேக்கியேலுக்கு நெருடலாக இருந்திருக்கும். தன் பணி ஏற்றுக்கொள்ளப்படாதது பற்றி அவர் விரக்தியும் சோர்வும் அடையலாம். இந்த நேரத்தில்தான், ஆண்டவராகிய கடவுள் தன் உடனிருப்பை அவருக்கு உறுதி செய்கின்றார். இறைவனின் பிரதிநிதியாக அவர் அவர்கள் நடுவே இருக்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்று ஆறுதல் தருகின்றார் ஆண்டவர்.
ஆக, மக்களின் நிராகரிப்பை இறைவாக்கினர் தன் வலுவின்மையாக உணர்ந்தாலும், இறைவாக்குப் பணியின் வழியாக இறைவன் தரும் உடனிருப்பே எசேக்கியேலின் வல்லமையாக மாறுகிறது.
இவ்வாறாக,
‘உடலில் தைத்த முள்’ அதைச் சுமப்பவருக்கு வலியைத் தந்தாலும், அதைப் பார்ப்பவர்களுக்கு அது ஒரு குறையாகவே தெரிகிறது.
வலுவின்மையும் எதிர்ப்பும் நிராகரிப்பும் வெற்றிக்கான தடைகள் என நாம் பல நேரங்களில் எண்ணுகின்றோம். ஆனால், இவை மனித வாழ்வின், கிறிஸ்தவ வாழ்வின் எதார்த்தங்கள். இவையே நம் கடவுளின் இயங்குதளங்களாக மாறுகின்றன.
‘வலுவின்மையில் வல்லமை’ நம் வாழ்வில் செயல்படுவது எப்படி?
(அ) என் உடலில் தைத்த முள் எது?
நம் எல்லாருடைய உடலிலும் ஒரு முள் தைத்துள்ளது. உடல்சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த, பின்புலம் சார்ந்த, திறன்சார்ந்த என எவ்வளவோ முள்கள் நம்மைத் தைத்துக்கொண்டே இருக்கின்றன. சதை என்று இருந்தால் முள் குத்தத்தானே செய்யும்! எனக்கு அடுத்திருப்பவரின் உடலில் தைத்துள்ள முள்ளைக் காண்பதற்கு முன் நான் என் உடலில் தைத்த முள் எது என்பதை அறிய வேண்டும். அறிந்த நான் அதையே என் இறைவனின் வல்லமை செயலாற்றும் தளமாக உணர வேண்டும். எடுத்துக்காட்டாக, அகுஸ்தினார், ‘இச்சைநிறை பார்வையையும் தன் கடந்த காலத்தையும்’ ‘உடலில் தைத்த முள்’ எனக் காண்கிறார்.
(ஆ) நிறைய இரக்கம்
அடுத்தவர் உடலில் தைத்துள்ள முள்ளைச் சுட்டிக்காட்டி, அதை விமர்சிப்பதை விடுத்து, அதை எடுக்க முடியாவிட்டாலும் அவர் அனுபவிக்கின்ற துன்பம் கண்டு கொஞ்சம் இரக்கம் காட்டுதல் நலம். ஒருவர் 10 நல்ல விடயங்கள் செய்தாலும், அவருடைய 1 வலுவின்மையே நமக்குப் பெரிதாகத் தெரிகிறது. நல்ல விடயங்கள் செய்தால் வலுவின்மைகளை மறைத்துவிடலாம் என்று நான் சொல்லவில்லை. கொஞ்சம் இரக்கம் போதும் என்றே நான் சொல்கின்றேன்.
(இ) இறைவனிடம் எடுத்துச்செல்வது
பவுல் தன் வலுவின்மை பற்றி இறைவனிடம் முறையிடுகின்றார். அதை எடுத்துவிடுமாறு மூன்று முறை வேண்டுகின்றார். இறைவனின் பார்வையில் அனைத்தும் ஒரே நேரம்தான். நம்மை ஒற்றை நொடியில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என அளவிடக்கூடியவர் அவர். ‘ஆண்டவரே! இதுதான் நான்! இவ்வளவுதான் நான்!’ என எடுத்துச்செல்வது நலம். அவர்முன் இறுமாப்பும், ‘என்னால் முடியும்! நான் பார்த்துக்கொள்கிறேன்!’ என்ற தற்பெருமையும் தேவையில்லை.
இறுதியாக, எசேக்கியேல், இயேசு, பவுல் ஆகியோர் வரிசையில், நாம் அனைவரும் முள்களைத் தாங்கி நிற்கிறோம். முள் இருக்கும் இடத்தில் அருளும் இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். முள்ளும் அருளும் இணைந்தே நிற்பதுதான் நாம்.
திருப்பாடல் ஆசிரியர் கூறுவது போல (காண். திபா 123), ‘ஆண்டவரே, எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மை நோக்கியிருக்கும்!’ என்று இறைவேண்டல் செய்வோம். அவரின் இரக்கம் பெற்ற நாம், அதே கண்களை இரக்கத்தின் கண்களாக மற்றவர்கள்மேல் பதிய வைப்போம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: