• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. ஞாயிறு, 8 செப்டம்பர் ’24. பிறப்பின் நோக்கம்

Sunday, September 8, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 8 செப்டம்பர் 2024
அன்னை கன்னி மரியாவின் பிறப்பு
மீக்கா 5:1-4. உரோமையர் 8:28-30. மத்தேயு 1:1-16, 18-23

 

பிறப்பின் நோக்கம்

 

நம் தாய்த் திருஅவை மூன்று பேரின் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்கிறது. இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் (டிசம்பர் 25). அவருடைய முன்னோடி திருமுழுக்கு யோவானின் பிறந்தநாள் (ஜூன் 24). அவருடைய தாய் கன்னி மரியாவின் பிறந்தநாள் (செப் 8). நம் மண்ணில் இன்றைய நாளை ஆரோக்கிய அன்னையின் திருநாள் என்று கொண்டாடி மகிழ்கிறோம்.

 

ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் மகிழ்ச்சி தருகிறது. கன்னி மரியாவின் பிறப்பு நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. ஏனெனில், இவர் வழியாகவே நம் மீட்பரும் ஆண்டவருமாகிய இயேசு பிறக்குமாறு தந்தையாகிய கடவுள் திருவுளம் கொள்கிறார்.

 

இன்றைய இரண்டாம் வாசகம் (உரோ 8:28-30) கடவுளின் திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களுக்கு நிகழும் நன்மை பற்றிப் பவுல் எழுதுவதை நம் முன் கொண்டுவருகிறது. மரியா கடவுளின் திட்டத்திற்கு ஏற்ப அழைக்கப்பட்டவராக இருக்கிறார். அவருடைய நன்மைக்காகவே தூய ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார். முன்குறித்து வைத்த அவரை கடவுள் அழைத்தார். அழைத்த அவரைத் தமக்கு ஏற்புடையவராக்கி, அவருக்குத் தம் மாட்சியில் பங்குதந்தார்.

 

கன்னி மரியாவின் பிறப்பு அமல உற்பவத்துடன் தொடர்புடையது. அவர் பாவம் இல்லாதவராகப் பிறக்கிறார். இதுதான் கடவுளிடமிருந்து அவர் பெற்ற நன்மை. தூய ஆவியாரின் துணையால் கடவுளின் திருமகனை வயிற்றில் தாங்குகிறார். திருஅவையின் தாயாக பெந்தகோஸ்தே நிகழ்வில் நிற்கிறார். இறுதியில், விண்ணுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்.

 

இன்றைய நற்செய்தி வாசகம் இரு பிரிவுகளாக அமைந்துள்ளது. முதல் பிரிவில், இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணையை மத்தேயு பதிவு செய்கிறார். இரண்டாவது பிரிவில், இயேசுவின் பிறப்பு யோசேப்புக்கு முன்னறிவிக்கப்படுகிறது. இயேசுவைத் தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனும் என அழைக்கிறார் மத்தேயு. ‘மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு’ என்று எழுதுவதன் வழியாக மரியாவுக்கும் தலைமுறை அட்டவணையில் இடம் தருகிறார். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முன்னறிவிப்பு நிகழ்வில், ‘அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்’ என மரியா பெற்றிருக்கிற சிறப்பைப் பதிவு செய்கிறார்.

 

அன்னை கன்னி மரியாவின் பிறந்தநாள் நமக்குத் தருகிற செய்தி என்ன?

 

(அ) ஒவ்வொருவருடைய பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. மரியாவுடைய பிறப்பின் நோக்கம் அவருக்கு அறிவிக்கப்படுகிறது. ஆனால், நம் வாழ்வின் நோக்கத்தை நாமே தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாக இருக்கிறது.

 

(ஆ) நம் வாழ்வின் இலக்கை கடவுளின் நோக்கத்தோடு இணைத்து வழிநடக்கும்போது தூய ஆவியார் நம் நன்மைக்காகச் செயலாற்றுகிறார். கடவுளின் திருவுளமே நம்மை ஆண்டு நடத்துகிறது. நாம் தனி நபர் அல்லர். நமக்கு முன்னால் பெரிய தலைமுறை இருக்கிறது. நாம் வாழும் நேரம் மற்றும் இடத்திலும் நம்மைப் போன்ற மற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்களுடைய வாழ்வில் நோக்கம் மற்றும் இலக்கு இருக்கிறது. அவர்களை நாம் உள்ளடக்கி நம் வாழ்க்கையை நகர்த்த வேண்டும்.

 

(இ) மேலானவற்றுக்கான அழைப்பைத் தெரிவுகொள்ள கீழானவற்றை விட்டுவிட வேண்டும். இல்லை என்றால் நாம் கீழானவற்றிலேயே சிக்கிக்கொள்வோம்.

 

நாம் பெறுகிற வாழ்க்கைப் பாடங்கள்:

 

(அ) சாதாரணவற்றோடு தங்கிவிடக் கூடாது

 

மெசியாவைக் கருத்தாங்கும் வாய்ப்பு மரியாளுக்கு ஒரு கொடையாகக் கொடுக்கப்பட்டாலும், அவர் அந்தக் கொடைக்குத் தன்னையே தகுதியாக்கிக்கொள்கின்றார். மிகவும் அசாதாரணமான ஒன்றைச் செய்வதற்காக சாதாரணவற்றோடு தங்கியிருக்கவில்லை. இன்று நாம் பல நேரங்களில் மிகச் சாதாரணவற்றோடு தங்கிவிட நினைக்கிறோம். இந்த வேலை போதும், இந்தப் படிப்பு போதும் என நம்மையே வரையறுத்துக்கொள்கிறோம். ஆனால், இப்படி நாம் ஏற்படுத்தும் வரையறைகள் பிற்காலத்தில் நமக்குள் குற்றவுணர்வையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகின்றன.

 

(ஆ) நான் எப்படி இருக்கிறேன் என்பது அல்ல, நான் என்னை எப்படி ஏற்றுக்கொள்கிறேன் அல்லது நம்புகிறேன் என்பதே என்னை உந்தித் தள்ளும்.

 

மரியாள் ஒருவேளை தன்னை நாசரேத்தின் ஓர் இளவலாக மட்டுமே எண்ணியிருந்தால், கல்வாரி வரை இயேசுவோடு பயணம் செய்திருக்க மாட்டார். வீட்டிலேயே அமர்ந்திருப்பார். ஆனால், தன்னை ‘ஆண்டவரின் தாயாக’ அவர் எண்ணியதால்தான் துணிவோடு இயேசுவுடன் வழிநடக்கிறார். இன்று, நான் என்னை எப்படி பார்க்கிறேன்? என் வலிமையை நான் அறிந்துள்ளேனா? இதுதான் என் வலிமை என என்னைப் பற்றி நான் புதிதாக அறிவது என்ன?

 

(இ) மனத்தில் இருத்திச் சிந்தித்தல்

 

மனிதர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்: காதில் கேட்பதை வாயில் கொட்டுபவர்கள், காதில் கேட்பதை இதயத்தில் கொட்டுபவர்கள். முதல் வகையினர் தாங்கள் கேட்பதை மட்டுமல்ல, தாங்கள் உணர்வதை, எண்ணுவதை என அனைத்தையும் அடுத்தவரிடம் கொட்டி விடுவார். ஆனால், இரண்டாம் வகையினர், தாங்கள் கேட்பது, உணர்வது, எண்ணுவது என அனைத்தையும் தங்கள் உள்ளத்தில் பதித்துக்கொள்வர். ஏனெனில், அவர்கள் தங்களை மிகவும் மேன்மையாக மதிப்பார்கள். நம் வீட்டின் பண சேமிப்பு அறையை நாம் யாருக்காவது திறந்து காட்டுகிறோமா? இல்லை! ஏன்? மதிப்பானது எதுவும் மறைந்தே இருக்கும். அல்லது மறைந்தே இருந்தால்தான் மதிப்புடன் இருக்கும்.

 

நம் அன்னை கன்னி மரியாளின் பிறந்த நாளில் நம் பிறப்பையும் எண்ணிப் பார்த்தல் நலம்!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: