இன்றைய இறைமொழி
திங்கள், 1 ஜூலை 2024
பொதுக்காலம் 13-ஆம் வாரம் – திங்கள்
ஆமோஸ் 2:6-10,13-16. மத்தேயு 8:18-22
பின்பற்றுவதன் விலை
இயேசுவைப் பின்பற்ற முழுமையான அர்ப்பணம் அவசியம். இந்த அர்ப்பணம் உலக வசதிகளையும் உறவுப் பிணைப்புகளையும் கடந்ததாக இருக்க வேண்டும்.
‘இயேசுவைச் சுற்றி திரளான மக்கள் கூடியிருக்கிறார்கள்’ – இதைக் காண்கிற சிலர் ஈர்க்கப்பட்டு இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறார்கள். இயேசுவைப் பின்பற்றுதல் என்பது வெளிப்புறக் காரணிகளால் தூண்டப்படுவது அல்ல, மாறாக, ஒவ்வொருவரும் தன் உள்ளத்தில் எடுக்க வேண்டிய முடிவு.
‘நீர் எங்கு சென்றாலும் நான் உம்மைப் பின்பற்றுவேன்’ என்று இயேசுவிடம் சொல்கிறார் மறைநூல் அறிஞர் ஒருவர். இயேசுவின்மேல் கொண்ட ஈர்ப்பினாலும் ஆர்வத்தாலும் இவ்வாறு மொழிகிறார் அவர். அவரைத் தன்னாய்வுக்கு இட்டுச் செல்கிறார் இயேசு. ‘மானிட மகனுக்குத் தலைசாய்க்க இடமில்லை’ என்று சொல்வதன் வழியாக, உலக வசதிகள் இல்லாத நிலைக்கு அவரை அழைக்கிறார். ‘காலம் கடவுளுக்கு உரியது. இடம் மனிதருக்கு உரியது’ என்பது உலக வழக்கு. மனிதர்களாகிய நாம் இடத்தைச் சார்ந்து நிற்கவும் வேரூன்றவும் விரும்புகிறோம். இடம் ஒரு பக்கம் நமக்கு அடையாளம் தந்தாலும், இன்னொரு பக்கம் நம்மைக் கட்டிவைக்கிறது. ‘மானிட மகனுக்கு தலைசாய்க்க இடமில்லை’ என்னும் வாக்கியம், மானிட மகன் அனுபவிக்கிற உறுதியற்ற நிலையை உணர்த்துவதோடு, அவர் கொண்டிருக்கிற உள்மனச் சுதந்திரத்தையும் (கட்டின்மை) வெளிப்படுத்துகிறது.
இயேசுவைப் பின்பற்ற விரும்பும் சீடர் வாழ்வின் உறுதியற்ற தன்மையைத் தழுவிக் கொண்டாடுபவராகவும், உள்ளத்தில் சுதந்திரத்துடன் செயல்படுபவராகவும் இருக்க வேண்டும்.
இரண்டாவதாக வருகிற நபர் இயேசுவின் சீடர் என அறிமுகம் செய்யப்படுகிறார். தன் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர இயேசுவிடம் அனுமதி வேண்டுகிறார். இறையாட்சியின் முதன்மையை அவருக்கு எடுத்துச் சொல்கிற இயேசு, ‘இறந்தோர் அடக்கம் செய்யப்படுவர்!’ என்கிறார். அதாவது, சீடர் எதிர்காலத்தைப் பற்றியும் எதிர்காலத்தின் நிகழ்வுகள் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.
நாம் கற்கிற பாடங்கள் எவை?
(அ) இயேசுவைப் பின்பற்றுவதற்கு முழுமையான அர்ப்பணம் தேவை. இந்த அர்ப்பணத்திற்காக ஒருவர் தன் சுகங்களையும் வசதிகளையும் (சௌகரியங்களையும்) இழக்க வேண்டிய நிலை ஏற்படும். உலகம்சார்ந்த உறவுப் பொறுப்புகளையும் துறக்க வேண்டும்.
(ஆ) கடவுளை அனைத்திற்கும் மேலாகப் பற்றிக்கொள்கிற சீடர் கவலையற்றவராகவும், வாழ்வின் உறுதியற்ற தன்மையைக் கொண்டாடுபவராகவும், சுதந்திரம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
(இ) தன் இருப்பிடம் பற்றியும் தன் தந்தை பற்றியும் அக்கறை கொள்கிற ஒருவர் பிளவுபட்ட ஒருவராக இருக்கிறார். ‘இரு மான்களை விரட்டுபவர் ஒரு மானையும் பிடிக்க மாட்டார்’ என்பது பழமொழி. பிளவுபட்ட உள்ளம் நம் கவனத்தைச் சிதைக்கிறது, மனக் குழப்பத்தைம் சோர்வையும் ஏற்படுத்துகிறது.
இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் ஆமோஸ் வழியாக ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் நடுவில் விளங்கிய அநீதியைச் சுட்டிக்காட்டுகிறார். ஆண்டவராகிய கடவுளை முதன்மைப்படுத்த அவர்கள் தவறியதோடு, சக மனிதர்களுடைய உறவு நிலையிலும் பிறழ்வுபட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள்.
நிற்க.
‘நான் எதை நோக்கி ஓடுகிறேன்? என் இலக்கு எது? எனக்கு வாழ்வில் என்ன வேண்டும்?’ என்னும் கேள்விகளுக்கு விடை தெளிவாக இருந்தால் போதும். பல நேரங்களில் இக்கேள்விகளுக்கான விடைகள் தெரியாமல் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் இலக்கு கடவுளாக இருத்தல் நலம்! (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 137).
இந்தப் புதிய மாதம் நமக்கு அருளின் மாதமாக அமைவதாக!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: