• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. திங்கள், 10 ஜூன் 2024. அனைவரும் பேறுபெற்றோர்!

Monday, June 10, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
திங்கள், 10 ஜூன் 2024
பொதுக்காலம் 10-ஆம் வாரம் – திங்கள்
1 அரசர்கள் 17:1-6. மத்தேயு 5:1-12



அனைவரும் பேறுபெற்றோர்!
 

நாம் மற்றவர்களின் செல்வம், வெற்றி, வளமை ஆகியவற்றைப் பார்க்கும்போது, ‘நீர் பேறுபெற்றவர்!’ என வாழ்த்துகிறோம். பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள், அரசர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள் பேறுபெற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்கள் பேறுபெற்றவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். மரியா பேறுபெற்றவர் என வாழ்த்துகிறார் எலிசபெத்து. மரியாவின் பேறுபெற்ற நிலையை கூட்டத்திலிருக்கிற பெண் எடுத்துரைக்கிறார்.
 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘பேறுபெற்றோர் யார்?’ என்னும் கேள்விக்கு விடையளிக்கிறார் இயேசு. மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் ‘பேறுபெற்றோர் பாடம்’ பழைய ஏற்பாட்டுப் புரிதலை விட மூன்று நிலைகளில் மாறுபடுகிறது:

 

(அ) அனைவரும் பேறுபெற்றோர்!

 

தனிப்பட்ட இனத்தையோ, தனிநபர்களையோ அல்ல, மாறாக, அனைவரையும் பேறுபெற்றோர் என அழைக்கிறார் இயேசு. ஆக, பேறுபெற்ற நிலைக்கு நாம் அனைவரும் உயர முடியும். இன்னும் கூர்மையாகச் சொல்ல வேண்டுமெனில், வலுவற்றவர்களும் நொறுங்குநிலையில் உள்ளவர்களும் பேறுபெற்றோர் எனக் கருதப்படுகிறார்கள்.

 

(ஆ) நம் செயல்பாடும் வெகுமதியும்
 

பேறுபெற்ற நிலை என்பது வெளியிலிருந்து நமக்கு வருவது அல்ல, மாறாக, நாமே நம் செயல்பாடுகள் வழியாக நம்மைத் தகுதியாக்கிக்கொள்ள முடியும் – ஏழையரின் உள்ளம் கொண்டிருத்தல், துயரம் ஏற்றல், கனிவு கொண்டிருத்தல், நீதி நிலைநாட்டுதல், இரக்கம் காட்டுதல், தூய்மையான உள்ளம் கொண்டிருத்தல், அமைதியை ஏற்படுத்துதல், நீதிக்காக துன்பம் ஏற்றல். இச்செயல்பாடுகளுக்கு வெகுமதியாக அமைகிறது பேறுபெற்ற நிலை.

 

(இ) மதிப்பீடுகளை மையப்படுத்தியது
 

சீடர்களின் வாழ்க்கை மதிப்பீடுகளை மையப்படுத்தியதாக இருக்கிறது. பக்தியை மையப்படுத்தி அல்ல, மாறாக, ஞானத்தையும் ஞானத்தால் வரும் மதிப்பீடுகளையும் மையப்படுத்தியதாக இருக்கிறது இயேசு முன்மொழிகிற பேறுபெற்ற நிலை. ஆன்மிக வளமை, தாழ்ச்சி, அமைதி போன்றவை முதன்மைப்படுத்தப்படுகின்றன.

 

நாம் கற்கிற பாடங்கள் எவை?
 

(அ) அன்றாட பேறுபெற்றோர் நிலைக்கு முயற்சி செய்தல் – தாழ்ச்சி, இரக்கம், தூய்மை, அமைதியைத் தழுவிக்கொள்தல்.
 

(ஆ) மகிழ்ச்சிக்கான வழி – பேறுபெற்ற நிலை மகிழ்ச்சிக்கும் நிறைவுக்கும் நம்மை இட்டுச் செல்கிறது.
 

(இ) சான்று பகர்தல் – இப்படிப்பட்ட வாழ்க்கைநிலை வழியாக சீடர்கள் குழுமம் ஒரு மாற்றுச் சமூகத்தை உருவாக்க முடியும்.
 

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவரின் வாக்கு இறைவாக்கினர் எலியாவுக்கு அருளப்படுகிறது. எலியா ஆண்டவருடைய வாக்கின்படி செயல்படுகிறார். நாம் கடவுளின் வார்த்தையைச் செயல்படுத்தும்போது, நம் சொற்கள் கீழே விழாமல் பார்த்துக்கொள்கிறார் நம் ஆண்டவராகிய கடவுள்.
 

நிற்க.
 

நம் சின்னஞ்சிறிய செயல்களும், நம் அரிய மதிப்பீடுகளும் கடவுளின் பார்வையில் நம்மைப் பேறுபெற்றவர்கள் என்ற நிலைக்கு உயர்த்துகின்றன. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 120).
 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: