இன்றைய இறைமொழி
திங்கள், 12 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 19-ஆம் வாரம் – திங்கள்
எசேக்கியேல் 1:2-5, 24-28. மத்தேயு 17:22-27
ஸ்தாத்தேர் நாணயம்
வரி செலுத்துதல் நெருடலான ஒரு கருத்துரு. வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி, சாலை வரி, சுங்கக் கட்டணம் என வரி செலுத்தும்போதெல்லாம் நம் உழைப்பின் ஒரு பகுதியை அரசுக்கு நாம் கொடுக்கிறோம். வரிச்சுமை ஏறிக்கொண்டே போகிறது. வரி என்பது ஒரு வகையில் அடையாளம் அல்லது தான்மையைக் குறிப்பதாகவும் இருக்கிறது. நமது பங்குகளிலும் கோவில்களிலும் திருவிழா வரி வசூலிக்கப்படுகிறது. ஒரே விதமான வரி விதிக்கப்பட்டு எளியவர்கள் நசுக்கப்படுகிறார்கள். அரசு ஊதியம் பெறுகிற ஓர் ஆசிரியரும் தன் வேலையை இழந்து நிற்கும் தினக்கூலியும் ஒரே வரி செலுத்த வேண்டிய கட்டாயம். இந்த வரிப்பணம் வீணான ஆடம்பரங்களுக்கு – வெடி வெடித்தல், தேர் உயரத்தைக் கூட்டுதல் போன்றவை – செலவிடப்படுகின்றன. சில கோவில்களில் திருவிழா சமயத்தில் ஒரு சிலரிடமிருந்து வரி வாங்குவதில்லை என்னும் அரசியலும் இருக்கிறது. வரி செலுத்துபவர் மட்டுமே உரிமையுடன் அங்கே உள்ளே செல்ல முடியும். வரி என்பது ஒரு கடமையாக இருந்தாலும், அது சில உரிமைகளை நமக்கு வழங்குகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தமக்கும் பேதுருவுக்கும் வரி செலுத்தும் நிகழ்வை வாசிக்கிறோம். ‘உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா?’ என்ற கேள்வி பேதுருவிடம் கேட்கப்படுகிறது.
உரோமை அரசுக்குக் கீழிருந்து யூதர்கள் எருசலேமின் கோவில் பராமரிப்புக்காக இந்த ஆண்டு வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. பேரரசர் ஜூலியஸ் சீசர் இதைத் தொடங்கினாலும் கோவிலுக்கு வரி என்பது மோசேயின் சட்டத்திலும் இருந்தது. ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒருமுறை அரை செக்கேல் கோவிலுக்கு வரியாக – பாவம் போக்கும் கழுவாய்க்கான தண்டமாக – செலுத்த வேண்டும் (காண். விப 30:11-16).
இயேசுவின் காலத்தில் அரை செக்கேல் என்பது இரண்டு திராக்மா (கிரேக்க நாணயம்) அல்லது இரண்டு தெனாரியம் அல்லது வெள்ளி (உரோமை நாணயம்) என வழங்கப்பட்டது. இரண்டு தெனாரியம் என்பது ஒருவருடைய இரண்டு நாள் கூலியாகும்.
பேதுரு வீட்டிற்குள் நுழைந்து வரி பற்றிப் பேசு முன்பே, இயேசு அவரிடம் பேசுகிறார். ‘நாம் அவர்களுக்குத் தடையாய் இருக்கக் கூடாது’ என முடிவெடுக்கிற இயேசு வல்ல செயல் ஒன்றை நிகழ்த்துகிறார். தூண்டிலில் சிக்குகிற முதல் மீன் ‘ஸ்தாத்தேர்’ (‘நான்கு திராக்மா’) நாணயத்தை தன் வாயில் வைத்திருக்கிறது. இயேசு தமக்காக நிகழ்த்துகிற வல்ல செயல் இது மட்டுமே. மீனின் வாயிலிருந்து எடுக்கப்பட்ட நாணயம் அல்ல, மாறாக, மீன்பிடித்தொழில் வழியாக வரி செலுத்தப்பட வேண்டும் என்று இயேசு சொல்வதாகவும் சிலர் புரிந்துகொள்வர்.
‘உன் சார்பாகவும் என் சார்பாகவும் வரி செலுத்து’ எனக் கற்பிக்கிறார் இயேசு.
நாம் இருக்கும் இடம் அல்லது அமைப்புக்கு கட்டுப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும், நம் உழைப்பின் வழியாக நமக்குத் தேவையானவற்றைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என இயேசு நமக்கு மொழிவதாக எடுத்துக்கொள்ளலாம்.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுளின் மாட்சி இறைவாக்கினர் எசேக்கியேலுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. இக்காட்சி நமக்குச் சொல்வது என்ன? கடவுளுக்கும் நமக்கும் உள்ள தூரம் குறைகிறது.
தம்மையே கோவில் என முன்மொழிந்த இயேசு தாம் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் தாம் சென்ற கோவிலுக்கு வரி செலுத்தினார். கடவுள் நம் நடுவே இறங்கி வந்ததோடல்லாமல், கடவுள் நம் வரியையும் செலுத்தினார் என்னும் செய்தி நமக்கும் அவருக்குமான நெருக்கத்தை அதிகமாக்குகிறது. இன்னொரு பக்கம், மனிதர்கள் கடவுளிடமும் வரி வசூலிப்பவர்கள் என்னும் அரசியலையும் புரிந்துகொள்ள முடிகிறது.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள் இவ்வுலக வாழ்வின் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுகிறார்கள்’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 171).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: