இன்றைய இறைமொழி
திங்கள், 17 ஜூன் 2024
பொதுக்காலம் 11-ஆம் வாரம் – திங்கள்
1 அரசர்கள் 21:1-16. மத்தேயு 5:38-42
தீமையை வெற்றிகொள்தல்
மனித இயல்புணர்வில் ஒன்று வன்முறை அல்லது வன்மம். இந்த வன்மத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அரசமைப்புகள் நிறைய சட்டங்களை வகுக்கின்றன. அந்த வரிசையில், தோரா முன்மொழிந்த சட்டத்தின்படி, ‘கண்ணுக்குக் கண்,’ ‘பல்லுக்குப் பல்’ என்ற சட்டம் இருந்தது. தீங்கு செய்பவர் அச்சம் கொள்ளவும், தீங்கு செய்யப்படுபவர் பதிலுக்குப் பதில் எதிர்வினை ஆற்றவும் இச்சட்டம் தூண்டுதலாக இருந்தது.
வன்முறையை அனுபவிக்கும் ஒருவரின் பதிலிறுப்பு வழக்கமாக இரு நிலைகளில் இருக்கும்: ஒன்று, வன்முறை அனுபவிக்கும் ஒருவர் அதை வருவித்த மற்றவர்மேல் பதில்வன்முறை தொடுத்தல். இரண்டு, வன்முறையை எதிர்க்கும் திறன் இல்லாமல் தப்பி ஓடுதல். இவ்விரண்டு பதிலிறுப்புகளையும் தாண்டி மூன்றாவது ஒன்றை முன்மொழிகிறார் இயேசு: ‘தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். ஆனால், தீமையை நிறுத்த வேண்டும்!’
ஒரு கன்னத்தோடு இன்னொரு கன்னம், அங்கியோடு மேலுடை, ஒரு கல் தொலைவுடன் இன்னொரு கல் தொலைவு எனச் செயல்களை நீட்டுமாறு கற்பிக்கிறார் இயேசு. இவற்றின் வழியாக வன்முறையாளர் அவமானத்திற்கு உட்படுத்தப்படுகிறார். அவருடைய செயல் மாற்றம் பெறுகிறது. இவ்வாறாக, நன்மை வழியாக தீமையை வெல்ல முடியும் என்பது பாடம்.
ஆக, தீமையை எதிர்ப்பது அல்ல, மாறாக, தீமையை வெற்றிகொள்வதே நம் இலக்காக இருக்க வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை வன்முறையுடன் பறித்துக்கொள்கிறார்கள் ஆகாபும் ஈசபேலும். ஆண்டவராகிய கடவுள் நாபோத்தின் சார்பாகச் செயல்பட்டு ஈசபேலைப் பழிதீர்க்கிறார்.
இவ்வாறாக, நாபோத்தின்மேல் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைக்கு – கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல், உயிருக்கு உயிர் – என பழிதீர்க்கிறார் கடவுள்.
இன்னொரு பக்கம், தலைமைக்குருவின் இல்லத்தில் இயேசு கன்னத்தில் அறையப்படுகிறார். உடனடியாக இயேசு, ‘நான் செய்த தவறு என்ன என்பதைக் காட்டு! இல்லை என்றால் என்னை ஏன் அறைந்தாய்?’ எனக் கேட்கிறார்.
சில இடங்களில் நாம் கடவுள்போல செயல்பட வேண்டியிருக்கிறது.
நிற்க.
‘தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம் என்பது இயேசுவின் பாடம். தீமை அழியும் என்பது நம் எதிர்நோக்கு’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 126).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: