இன்றைய இறைமொழி
திங்கள், 19 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 20-ஆம் வாரம் – திங்கள்
எசேக்கியேல் 24:15-24. மத்தேயு 19:16-22
இருவகை நிலைவாழ்வு
இயேசுவைத் தேடி இளைஞர் ஒருவர் வருகிறார். ‘நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?’ என இயேசுவிடம் கேட்கிறார். இளைஞரின் இந்தக் கேள்வி நமக்கு வியப்பளிக்கிறது. இவருடைய எண்ணம் நிலைவாழ்வை நோக்கியதாக இருந்தது. தனக்கு எது வேண்டும் என்பதை அறிந்தவராக இருந்தார். தனக்குத் தேவையானதை எங்கே தேட வேண்டும் என்றும் அறிந்திருந்தார்.
இரண்டு வகையான நிலைவாழ்வை இயேசு முன்மொழிகிறார்:
(அ) கட்டளைகளைக் கடைப்பிடிப்பதால் வரும் நிலைவாழ்வு
ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்த பத்து கட்டளைகளை – குறிப்பாக, பிறரன்பு சார்ந்தவற்றைக் கடைப்பிடிப்பதன் வழியாக ஒருவர் நிலைவாழ்வு பெற முடியும். நிலைவாழ்வு என்பது இறப்புக்குப் பின் வரக்கூடிய முடிவற்ற வாழ்வு என்பது அல்ல, மாறாக, நிறைவும் அமைதியும் மகிழ்ச்சியும் கொண்ட இவ்வுலக வாழ்வு என்று பொருள்கொள்ள முடியும். நம் வாழ்வை நெறிப்படுத்திக்கொள்ள ஆண்டவராகிய கடவுள் கொடுத்துள்ள கட்டளைகள் துணைநிற்கின்றன.
(ஆ) இழப்பதால் வரக்கூடிய நிலைவாழ்வு
‘இன்னும் என்னிடம் குறைவுபடுவது என்ன?’ என்று கேட்ட இளவலின் திசையை மாற்றுகிறார் இயேசு: ‘நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய் உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது நீர் விண்ணகத்தில் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்!’ நிறைவு என்பது தன்னைக் குறைவாக்கிக்கொள்வதில் வருகிறது என்பதும், நிறைவு என்பது சீடத்துவத்தின் வழியாகவே சாத்தியம் என்பதும் இயேசுவின் போதனையாக இருக்கிறது.
‘வருத்தத்தோடு’ வழி நடக்கிறார் இளைஞர். பாதி வழி வந்த இவரால் மீதி வழி செல்ல இயலவில்லை. எளிதானவற்றைக் கடைப்பிடிக்க – கட்டளைகளைக் கடைப்பிடித்தல் – முடிந்த இவரால், சரியானதைச் செய்ய – செல்வத்தை இழக்க – இயலவில்லை.
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் அடையாளம் ஒன்றின் வழியாக பாபிலோனிய அடிமைத்தளையை இஸ்ரயேல் மக்களுக்கு முன்னுரைக்கிறார். இறைவாக்கினர் எசேக்கியேலின் மனைவி இறக்கிறார். ஆனால், இந்த இறப்பு இறைவாக்கினர் எசேக்கியேலை எந்த நிலையிலும் பாதிக்கக்கூடாது என்பது ஆண்டவரின் அறிவுரை. அதாவது, இறப்பவர்களுக்குத் துக்கம் கொண்டாடக்கூட நேரம் இல்லாமல், ஏன் அவர்களைப் புதைப்பதற்காகக் கூட நேரம் இல்லாமல் மக்கள் அடிமைகளாக நாடுகடத்தப்படுவர் என்பது ஆண்டவர் தருகிற பாடம்.
‘உன் கண்களுக்கு இன்பம் தருவதை உன்னிடமிருந்து ஒரே நொடியில் எடுத்துவிடப் போகிறேன்!’ என்பது ஆண்டவரின் எச்சரிக்கை. நம் கண்களுக்கு இன்பம் தருவது அனைத்தும் ஒரு நாள் நம்மைவிட்டுப் போய்விடும் என்ற எண்ணத்தோடு வாழும்போது நாம் பற்றுகளை விடுக்கத் தொடங்குகிறோம்.
நிற்க.
பற்றுகள் அற்ற வாழ்வே சீடத்துவம் என அறிந்துகொள்வர் எதிர்நோக்கின் திருப்பயணிகள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 176).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: