இன்றைய இறைமொழி
திங்கள், 19 பிப்ரவரி 2024
தவக்காலம் முதல் வாரத்தின் திங்கள்
லேவியர் 19:1-2, 11-18. மத்தேயு 25:31-46
அடுத்திருக்கும் சிறியவர்
‘பெரிதினும் பெரிது கேள்’ எனப் பெரியவற்றை நாடிச் செல்லும் நம் திசையைத் திருப்பி, ‘சிறிதினும் சிறிது பார்’ என சின்னச்சிறியோர்களை நோக்கி நம்மை அனுப்புகிறார் இயேசு.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கிய பிறரன்புக் கட்டளையை வாசிக்கிறோம். ‘திருச்சட்டத்தில் முதன்மையான கட்டளை எது?’ என்று தம்மிடம் கேட்ட மறைநூல் அறிஞருக்கு விளக்கம் சொல்கிற இயேசு, இறையன்பு (இச 6:4), பிறரன்பு (லேவி 19:18) என்னும் இரு கட்டளைகளை முதன்மையான கட்டளைகளாக முன்மொழிகிறார்.
‘தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்’ என மொழிகிற ஆண்டவர், தூய்மைக்கான வழியாக, ‘பிறரன்புக் கட்டளையை’ – ‘உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக!’ அறிவறுத்துகிறார்.
இங்கே ‘அன்பு’ என்பது வெறும் உணர்வு அல்ல, மாறாக, செயல் – களவு செய்யாமை, பொய் சொல்லாமை, மற்றவரை வஞ்சிக்காமை, பொய்யாணை இடாமை, கொள்ளையிடாமை, சபிக்காமை, அநீதி இழைக்காமை, நேர்மையுடன் நீதி வழங்குதல், காழ்ப்புணர்ச்சி கொள்ளாமை. மேற்காணும் செயல்கள் யாவும் அன்பின் வெளிப்பாடு என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.
நற்செய்தி வாசகத்தில், நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்வோர் யார்? என்னும் கேள்விக்கு விடையாக அமைகிற உருவகத்தில், ‘மிகச் சிறியோராக இருப்பவர்கள்மேல்’ – பசித்திருப்பவர், தாகமாக இருப்பவர், அந்நியர், ஆடையின்றி இருப்பவர், நோயுற்றவர், சிறையிலிருப்பவர் ஆகியோர்மேல் – அக்கறை காட்டி தொண்டு செய்பவர்களே என மொழிகிறார் இயேசு.
அடுத்திருப்பவர்களுக்கு அன்பு என்றல்ல, மாறாக, அடுத்திருப்பவர்களிலும் சிறியவர்களாக இருப்பவர்களுக்குத் தொண்டாற்ற இயேசு அழைக்கிறார். ‘சின்னஞ்சிறியோர்களுக்குச் செய்ததைத் தமக்குச் செய்தது’ என்று சொல்வதன் வழியாக, சின்னஞ்சிறியோர்களோடு தம்மையே ஒன்றிணைத்துக்கொள்வதோடு, பிறரன்புக் கட்டளை என்பது இறையன்புக் கட்டளையின் நீட்சியே என்னும் புதிய புரிதலையும் தருகிறார்.
இன்றைய வாசகங்கள் நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன?
(அ) அன்பு என்னும் செயல்
அன்பு என்பதை வெறும் உணர்வு அல்லது எண்ணம் என நிறுத்திக்கொள்ளாமல், செயல்களாக மாற்றக் கற்றுக்கொள்ள வேண்டும்.
(ஆ) அடுத்திருப்பவர்களும் சிறியவர்களும்
அடுத்திருப்பவர் என்பவர் நொறுங்குநிலையில் இருப்பவர், தேவையில் இருப்பவர் என்னும் புரிதலை லூக்கா நற்செய்தியில் (காண். அலகு 10) காண்கிறோம். பசி, தாகம், வீடின்மை, நிர்வாணம், நோய், சிறைவாசம் என்னும் நிலையில் நிற்பவர்கள் உடைந்துபோனவர்களாக இருக்கிறார்கள். இவர்களைத் தேடிச் செல்ல முயற்சி செய்ய வேண்டும்.
(இ) பிறரன்பின் வழி இறையன்பு
மற்றவர்களை அன்பு செய்வதன் வழியாக இறைவனை அன்பு செய்ய முடியும் என்றாலும், மற்றவர்களை அன்பு செய்தல் என்பதை இறைவனை அடைவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் நாம் மனிதர்களைப் பயன்படுத்துபவர்கள் என ஆகிவிடுவோம். எந்த நிலையிலும் மனிதர்கள் பயன்பாட்டுப் பொருள்கள் அல்லர் என்பதை மனத்தில் நிறுத்த வேண்டும். தனிமனிதரின் மாண்பையும் அவருக்கான நீதியையும் மையப்படுத்தியே நம் பிறரன்புச் செயல்கள் இருக்க வேண்டுமே தவிர, இரக்கம் சார்ந்த நிலையில் நின்றுவிடக் கூடாது.
நிற்க.
‘கூட்டியக்கத் திருஅவை அனைவரையும் உள்ளடக்கிய, குறிப்பாக விளிம்புநிலையில், நொறுங்குநிலையில் இருக்கிறவர்களை – வறியோர், அடைக்கலம் நாடுவோர், புலம்பெயர்ந்தோர், முதியோர், குழந்தைகள், மாற்றுத்திறனுடையோர், பாலின அடையாளம் தேடுவோர் – வரவேற்று ஏற்றுக்கொள்கிற திருஅவையாக இருக்க வேண்டும்’ என நம்மை அழைக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 34).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: