இன்றைய இறைமொழி
திங்கள், 2 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 22-ஆம் வாரம், திங்கள்
1 கொரிந்தியர் 2:1-5. லூக்கா 4:16-30
வலுவற்றவனாய் உங்கள் நடுவில்
இன்றைய முதல் வாசகத்தில், கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகிற பவுல், ‘வலுவற்றவனாய் நான் உங்கள் நடுவே நின்றேன்’ என்று தன் நொறுங்குநிலையை ஏற்றுக்கொள்கிறார். நற்செய்தி வாசகத்தில், இயேசு தம் பணியை நாசரேத்தூரில் தொடங்குகிறார். வலுவற்ற மக்களோடு தாம் உடன் நிற்பதாக அவர் முன்மொழிகிறார். ஆனால், மக்கள், இயேசுவின் செய்தியை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவருடைய எளிய பின்புலத்தைச் சுட்டிக்காட்டி அவரைக் குறித்து இடறல்படுகிறார்கள். இயேசு வலுவற்ற நிலையில் அவருடைய ஊரார் முன்பாக நிற்கிறார்.
(அ) தாழ்ச்சி மற்றும் வலுவின்மையின் வலிமை
பவுல், கொரிந்தியருக்கு எழுதுகிற தன் முதல் திருமுகத்தில், ஒப்புகை ஒன்றைச் செய்கிறார். பேச்சாற்றலோடும் மேன்மையான ஞானத்தோடும் அவர்கள்முன் அவர் வரவில்லை. மாறாக, அச்சத்தோடும் நடுக்கத்தோடும் வந்தார். அவர்கள் பெற வேண்டிய நம்பிக்கை மனித ஞானத்தின் அடிப்படையில் அல்ல, மாறாக, கடவுளின் வல்லமையில் கட்டப்பட வேண்டும் என்பதற்காகவே பவுல் அவ்வாறு செய்தார். கிறிஸ்தவ வாழ்வில் வல்லமை என்பது நம் திறன்களில் அல்ல, மாறாக, நம்மில் செயலாற்றும் கடவுளை நோக்கி நாம் கொண்டிருக்க வேண்டிய திறந்த உள்ளத்தில்தான் வெளிப்படுகிறது.
நம் குழுமங்களில் நம் வலுவின்மைகளையும் மற்றவர்களின் வலுவின்மைகளையும் ஏற்றுக்கொள்வதையும் மதிப்பதையும் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். வலுவற்றவர்கள் வழியாகவே கடவுளின் வல்லமை வெளிப்படுகிறது. மனிதப் பார்வையில் வல்லமையாக இருப்பது அல்ல, மாறாக, கடவுளின் திருமுன்னிலையில் வலுவற்றவராய் இருப்பதே மேன்மையானது.
(ஆ) வலுவற்றவர்களுக்குத் துணைநிற்கும் இறைவாக்கினர் அழைப்பு
இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள் காட்டி தம் பணியைத் தொழுகைக்கூடத்தில் தொடங்குகிறார் இயேசு. அவருடைய அருள்பொழிவு நிலை வலுவற்றவர்களுக்குத் துணைநிற்க அவரைத் தூண்டுகிறது. உடல், உள்ளம், ஆன்மிக நிலைகளில் வலுவற்றவர்களோடு தம்மை இணைத்துக்கொள்கிறார் இயேசு. ஆனால், நாசரேத்து மக்களோ, அவரில் இறைவாக்கினரை அல்ல, மாறாக, தச்சரின் மகனையே கண்டார்கள். விளைவு, அவரை ஏற்றுக்கொள்வதில் இடறல் பட்டார்கள்.
வலுவற்றவர்களோடு நாம் துணைநிற்கும்போது நமக்கு எதிர்ப்புகள் வரும் என்பதை இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இயேசு தம் நிலைப்பாட்டில் சமரசம் செய்துகொள்ளாமல் இருந்ததுபோல, நாமும் இருக்க வேண்டும். மற்றவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், எதிர்த்தாலும் வலுவற்றவர்களுக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும்.
(இ) வலுவற்றவர்களை அரவணைப்பதே நற்செய்தியின் இதயம்
வலுவற்றவர்கள் நற்செய்தியின் விளிம்பில் அல்ல, மாறாக, மையத்தில் இருக்கிறார்கள் என்பதே பவுல் மற்றும் இயேசு முன்மொழியும் போதனை. நாம் வலுவற்றவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதைப் பொருத்தே நம் நம்பிக்கையின் இயக்கம் இருக்கிறது.
வலுவற்றவர்களுக்கு நாம் காட்ட வேண்டியது இரக்கம் அல்ல, மாறாக, ஒன்றிணைப்பு. அவர்களுடைய மாண்பைப் போற்றும் வண்ணம் அவர்களோடு நாம் கொண்டுள்ள தொடர் உடனிருப்பு. இவ்வாறாக நாம் செயல்படுவதன் வழியாக, நம் நம்பிக்கை இவ்வுலகின் வல்லமையில் அல்ல, மாறாக, கடவுளுடைய அன்பின் வல்லமையில் நிலைகொண்டுள்ளது என்பதை மற்றவர்களுக்குக் காட்ட இயலும்.
நிற்க.
வலுவற்றவர்களில் கிறிஸ்துவின் முகத்தைக் காண்கிற எதிர்நோக்கின் திருப்பயணிகள், அவர்களோடு உடன்நிற்பதே நற்செய்தி என்பதை உணர்ந்து செயல்படுகிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 188).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: