இன்றைய இறைமொழி
திங்கள், 22 ஜூலை 2024
புனித மகதலா மரியா, விழா
இனிமைமிகு பாடல் 3:1-4. 2 கொரிந்தியர் 5:14-17. யோவான் 20:1, 11-18
என் ஆண்டவரைக் கண்டேன்!
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2016-ஆம் ஆண்டில், ‘புனித மகதலா மரியா நினைவு’ என்னும் திருவழிபாட்டு நிகழ்வை, ‘புனித மகதலா மரியா விழா‘ என மாற்றினார். மேலும், ஆண்டவர் இயேசுவின் சீடர் அவர் என அழைத்து மகிழ்ந்த திருத்தந்தை, 2017-ஆம் ஆண்டு தான் ஆற்றிய மறையுரையில், ‘மகதலா நாட்டு மரியா திருத்தூதர்களின் திருத்தூதர் என்றும், எதிர்நோக்கின் திருத்தூதர்’ என்றும் அழைத்தார். மேலும், 2019-ஆம் ஆண்டு தான் வெளியிட்ட திருத்தூது ஊக்கவுரையின் தலைப்பாக, ‘கிறிஸ்து வாழ்கிறார்’ என்னும் மகதலா மரியாவின் சொற்களையே பயன்படுத்துகிறார்.
இயேசுவின் சமகாலத்தில் பெண்கள் அவர்களுடைய தந்தை அல்லது கணவர் அல்லது மகன் ஆகியோரின் பெயராலேயே அறிமுகம் செய்யப்பட்டார்கள். எ.கா. ‘கூசாவின் மனைவி யோவன்னா’ (லூக் 8:3), ‘இயேசுவின் தாய் மரியா'(காண். யோவா 2:1). ஆனால், மகதலா மரியா, அவருடைய ஊர் அல்லது நாட்டின் (கிராமம்) பெயரைக் கொண்டு அறிமுகம் செய்யப்படுகிறார்.இவரைப் பற்றி நற்செய்தி நூல்களும் ஏற்றுக்கொள்ளப்படாத நூல்களும் உரைத்தாலும் இவர் யார் என்பது மறைபொருளாகவே உள்ளது. பெத்தானியாவின் மரியா, இயேசுவின் காலடிகளைத் நறுமணத் தைலத்தால் பூசிய பெண், விபசாரத்தில் பிடிபட்ட பெண், ஏழு பேய்கள் நீங்கப்பெற்றவர் என அவர் ஊகம் செய்யப்பட்டாலும் அவருடைய தான்மையும் அடையாளமும் மறைபொருளாகவே உள்ளது.
மகதலா மரியா என்னும் கதைமாந்தர் முதல் ஏற்பாட்டு ஆகார் என்னும் கதைமாந்தரோடு சில விடயங்களில் நெருக்கமாகத் தெரிகிறார்:
ஆகார் எகிப்திய அடிமைப்பெண் என அழைக்கப்படுகிறார். மகதலா மரியாவும் அவருடைய ஊர்ப்பெயரைக் கொண்டே அழைக்கப்படுகிறார்.
தன் தலைவி சாராவிடமிருந்து தப்பி ஓடுகிறார் ஆகார். தான் சார்ந்த நண்பர்கள் குழுவிலிருந்து விடியற்காலையில் கல்லறையை நோக்கி ஓடுகிறார் மகதலா மரியா.
ஆகாரை எதிர்கொள்கிற வானதூதர், ‘நீ எங்கிருந்து வருகிறாய்? எங்கே செல்கிறாய்?’ என இரண்டு கேள்விகள் கேட்கிறார். மகதலா மரியாவை எதிர்கொள்கிற இயேசு, ‘ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?’ எனக் கேட்கிறார்.
‘நீ உன் தலைவி சாராவிடம் திரும்பிச் செல்!’ என ஆகாரைப் பணிக்கிறார் வானதூதர். ‘நீ என் சகோதரர்களிடம் திரும்பிச் செல்’ என மரியாவைப் பணிக்கிறார் இயேசு.
நிகழ்வின் இறுதியில், ‘என்னைக் காண்பவரை நானும் இங்கு கண்டேன்’ என உரைக்கிறார் ஆகார். நிகழ்வின் இறுதியில், ‘நான் ஆண்டவரைக் கண்டேன்’ என உரைக்கிறார் மரியா.
‘என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்’ என உரைக்கிற மரியா, இறுதியில், ‘என் ஆண்டவரைக் கண்டேன்’ என உரைக்கிறார். ஏறக்குறைய, தோமா உரைக்கும், ‘என் ஆண்டவரே, என் கடவுளே’ என்னும் நம்பிக்கை அறிக்கை போல இருக்கின்றன மரியாவின் சொற்கள்.
மரியாவின் நம்பிக்கை அனுபவம் மூன்று படிகளாக நகர்கிறது:
(அ) ஆண்டவரைக் காணவில்லை
மரியா விடியற்காலையில் எழுந்து கல்லறைக்குச் செல்கிறார். ஆக, இருள் என்பது முதல் தடையாக இருக்கிறது. கல்லறையின் முன் நிற்கிற மரியா அழுதுகொண்டிருக்கிறார். அவருடைய கண்ணீர்த்துளிகளே அவருடைய பார்வையை மறைக்கின்றன. ஆக, தனக்கு வெளியே இருள், தனக்கு உள்ளே சோகம்நிறை கண்ணீர் என்னும் இரண்டு தடைகளால் அவரால் ஆண்டவரைக் காண இயலவில்லை. அவருடைய கண்களுக்கு இரு தூதர்கள் தெரிகிறார்கள். ‘உன் கண்ணீரின் வழியாகவே வானதூதரைக் காணமுடியும்’ என்பது ரபிக்களின் சொலவடை. ஆகாரும் மகதலா மரியாவும் தங்கள் கண்ணீர் வழியாகவே கடவுளின் தூதரைக் கண்டுகொள்கிறார்கள்.
(ஆ) ஆண்டவர் தோட்டக்காரர்போலத் தெரிகிறார்
கல்லறையை நோக்கி நின்று அழுதுகொண்டிருக்கிறார் மரியா. சற்று நேரம் கழித்துத் திரும்பிப் பார்க்கிறார். அங்கே அவருக்குப் பின்னால் இயேசு நின்றாலும், அவரை அடையாளம் காண இயலவில்லை. மரியா அங்கே இயேசுவை ஒரு தோட்டக்காரர் எனப் பார்க்கிறார்.
(இ) என் ஆண்டவரைக் கண்டேன்
தோட்டக்காரர்போல நின்ற இயேசு, ‘மரியா’ என்றழைத்ததும், அந்தக் குரலில் இயேசுவை அடையாளம் காண்கிறார் மரியா. ‘ரபூனி’ எனத் திரும்புகிறார். அவர் ஏற்கெனவே திரும்பித்தானே இருக்கிறார்? மறுபடியும் ஏன் அவர் திரும்புகிறார்? ‘முதலில் அவருடைய உடல் திரும்பியிருந்தது, இப்போதுதான் அவருடைய உள்ளம் திரும்புகிறது’ என நிகழ்வுக்கு விளக்கம் தருகிறார் புனித அகுஸ்தினார். மரியா இயேசுவைக் கண்டவுடன் அவரைப் பற்றிக்கொள்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில், இனிமைமிகு பாடல் நூலின் தலைவி, தன் தலைவன்மேல் கொண்ட ஏக்கத்தால் அவனைத் தேடி நகரின் தெருக்களில் நள்ளிரவில் சுற்றி வருகிறார்கள். சாமக் காவலர்கள் அவளைக் கண்டு கடிந்துகொள்கிறார்கள். ஆனால், அவளால் தலைவனைக் காண இயலவில்லை.
‘கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது’ என எழுதுகிறார் பவுல் (இரண்டாம் வாசகம்). பேரன்பால் ஆட்கொள்ளப்பட்ட மகதலா நாட்டு மரியா தன் தலைவராகிய இயேசுவைத் தேடி வைகறையில் வருகிறார். இயேசுவைக் கண்டும்கொள்கிறார். ‘
இம்மாபெரும் புனிதர் நமக்குத் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?
(அ) நம்பிக்கைப் படிநிலைகளில் இன்று நாம் எங்கே நிற்கிறோம்? இயேசுவை நம்மால் காண முடியவில்லையா? அல்லது அவர் நம் கண்களுக்குத் தோட்டக்காரர்போலத் தெரிகிறாரா? அல்லது ஆண்டவர்போலத் தெரிகிறாரா? அவரை நோக்கி நம் உடல் மட்டுமல்ல, நம் உள்ளமும் திரும்ப வேண்டும்.
(ஆ) ஓர் ஆன்மா கடவுளைத் தேடுகிற நிகழ்வை இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 63) ஆசிரியர் உருவகமாகப் பதிவு செய்கிறார்: ‘என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது – நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல!’ இன்று நம் ஆன்மா வறண்டு போயிருக்கிறதா? அல்லது ஈரப்பதத்துடன் இருக்கிறதா? இறைவனை நாம் பொழுதுபோக்கிற்காகத் தேடுகிறோமா? அல்லது உள்ளார்ந்த ஏக்கத்துடன் தேடுகிறோமா?
(இ) மகதலா நாட்டு மரியா, ‘கிறிஸ்து வாழ்கிறார்’ எனத் திருத்தூதர்களுக்கும் மற்றவர்களுக்கும் அறிவிக்கிறார். இயேசுவை எதிர்கொண்டு அவரைப் பற்றிக்கொண்ட ஒருவர், அவரைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவித்தல் அவசியம். நம் அறிவித்தல் பணி எப்படி இருக்கிறது? நாம் பெற்ற ஒளியை நமக்குள் மூடிவைத்துக்கொள்கிறோமா? அல்லது அதை மற்றவர்களுக்கு வழங்குகிறோமா?
மகதலா நாட்டு மரியாவை, ‘நறுமணத் தையல்’ என முன்மொழிகிறார் மாற்கு (காண். மாற் 14). இயேசுவின்மேல் அன்புகூர்கிறார், முடிவெடுக்கிறார், செயல்படுகிறார் – இம்மூன்று செயல்களால் மகதலா நாட்டு மரியா கொண்டு இன்றும் நம் முன்பாக நிற்கிறார் நறுமணத் தைலத்தோடு!
நிற்க.
தன் தலைவரைக் காண எதிர்நோக்கியிருந்த மகதலா மரியா அவரைக் கண்டுகொள்கிறார் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 153).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: