இன்றைய இறைமொழி
திங்கள், 23 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 25-ஆம் வாரம், திங்கள்
நீதிமொழிகள் 3:27-35. லூக்கா 8:16-18
நிறைவு மனப்பான்மை
கடவுளுடைய பராமரிப்பில் நம்பிக்கை கொள்கிற இதயம் நிறைவு மனப்பான்மை கொண்டிருக்கிறது. அந்த இதயம் கடவுளின் ஆசீரைத் தொடர்ந்து பெற்றுக்கொள்கிறது. அப்படிப் பெற்றுக்கொண்டாலும் தாழ்ச்சியுடன் கடவுள்முன் நிற்கிறது. தாராள உள்ளத்தோடும் பரந்த மனத்தோடும் வாழ்பவர்கள் தங்களுடைய ஒளியை மற்றவர்கள்முன் ஒளிரச் செய்கிறார்கள்.
(அ) நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்தல்
‘உன்னால் நன்மை செய்யக்கூடுமாயின் தேவைப்படுவோருக்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே’ என்ற அறிவுரையுடன் தொடங்குகிறது முதல் வாசகம். நாம் கொண்டிருப்பது அனைத்தும் கடவுளுடைய கொடை என உணர்வதே நிறைவு மனப்பான்மை. நம் நேரம், தினற்கள், மனித வளம் ஆகியவற்றை மற்றவர்களோடு பகிரும்போது நாம் கடவுளின் தாராள உள்ளத்தைப் பிரதிபலிக்கிறோம். பயம், தயக்கம், தன்னலத்தால் நாம் நம்முடைய கைகளை மூடிக்கொள்ளும்போது நம் கொடைகளின் நோக்கத்தை மறந்தவர்களாக இருக்கிறோம்.
(ஆ) ஒளிர்விப்பதே ஒளியின் நோக்கம்
ஒளியின் நோக்கம் மற்ற பொருள்களை ஒளிர்விப்பதே. இந்த நோக்கத்தைத் தடுக்கும் பொருட்டு அதை மூடி வைப்பது ஒளியின் நோக்கத்தை இழக்கச் செய்வதோடு, மூடுகிற பொருளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. நாம் பெற்றுள்ள ஆன்மிகக் கொடைகள் என்னும் ஒளி நம்மைச் சுற்றி ஒளிர வேண்டும்.
(இ) பனிப்பந்து விளைவு: உள்ளவர்க்குக் கொடுக்கப்படும்
நிறைவு நிறைவை ஈர்க்கிறது. குறைவு குறைவை ஈர்க்கிறது. நிறைவாக வைத்திருப்பவர் தொடர்ந்து நிறைவைப் பெறக் காரணம் அவர் நிறைவைப் பகிர்வதற்குத் தயாராக இருக்கிறார். நிறைவை அடைவதன் வழியை அறிந்தவராக இருக்கிறார்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ நிறைவு மனப்பான்மை கொண்டுள்ளார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 206)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: