இன்றைய இறைமொழி
திங்கள், 26 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 21-ஆம் வாரம் – திங்கள்
2 தெசலோனிக்கர் 1:1-5, 11-12. மத்தேயு 23:13-22
சமயம்சார் வெளிவேடம்
இன்றைய நற்செய்தி வாசகத்தில், மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களோடு நேரடியாக உரையாடுகிற இயேசு, சமயப் பின்பற்றுதலில் அவர்கள் காட்டுகிற வெளிவேடத்தை எடுத்துரைப்பதோடு, அவர்களுடைய செயல்கள் ஏற்படுத்துகிற எதிர்மறை விளைவுகளை எடுத்துரைக்கிறார். இவ்வாசகத்தின் பின்புலத்தில் நம் வாழ்வையும், கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவையும் எண்ணிப் பார்ப்போம்.
மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும் நோக்கி ‘ஐயோ கேடு!’ வாக்கியங்களை உரைக்கிறார் இயேசு. இவர்கள் மக்களை நம்பிக்கையில் வழிநடத்தும் பொறுப்பைப் பெற்றவர்கள். ஆனால், மக்களுடைய நம்பிக்கைப் பயணத்தை எளிதாக்குவதற்குப் பதிலாக, சட்டம்சார் செயல்பாடுகளையும் வெற்றுச் சடங்குகளையும் முன்நிறுத்தி மக்களுக்குச் சுமைகளை அதிகமாக்கினார்கள். விண்ணகத்துக்குள் தாங்களும் நுழையவில்லை, மற்றவர்கள் நுழைவதையும் அனுமதிக்கவில்லை. நம்பிக்கை என்பது மற்றவர்களுக்குத் தடையாக அல்ல, மாறாக, மற்றவர்களைக் கடவுளின் இரக்கத்துக்கு நெருக்கமாக்குவதாக அமைய வேண்டும்.
தொடர்ந்து, ஆணையிடுதல் பற்றிப் பேசுகிறார் இயேசு. ஆணையிடுதல் பற்றிய நெறிமுறைகளை வகுத்த மறைநூல் அறிஞர்கள் தாங்கள் தப்பித்துக்கொள்வதற்காக நிறைய ஓட்டைகளை ஏற்படுத்திக்கொண்டார்கள். ஆணையிடுதலின் வெளிப்புறக் காரணிகள் பற்றி அக்கறை கொண்ட அவர்கள் அது குறித்துக்காட்டும் தூய்மை, நேர்மை பற்றி அக்கறை கொள்ளவில்லை. அவர்களுடைய தவறான முதன்மைகளைச் சுட்டிக்காட்டுகிற இயேசு, நேர்மையான வாழ்வுக்கு அவர்களை அழைக்கிறார்.
நம் சமயம்சார் வெளிவேடத்தை ஆய்ந்து பார்க்க அழைக்கிறது நற்செய்தி வாசகம். வெளிப்புற அடையாளங்களைப் பற்றிக்கொண்டிருக்கிறோமா? அல்லது வாழ்வின் ஆழமான பொருள்நோக்கி நாம் கடந்து செல்கிறோமா?
நம்பிக்கை வாழ்வு நன்னயம் நிறைந்த வாழ்வு என்பது இயேசு தருகிற பாடம். நம்பிக்கை என்பது வெறுமனே விதிமுறைகளையும் பாரம்பரியங்களையும் கடைப்பிடிப்பதில் அல்ல, மாறாக, கடவுளோடு நாம் ஏற்படுத்துகிற தனிப்பட்ட உறவில் வெளிப்படுகிறது என்பதை உணர வேண்டும்.
முதல் வாசகத்தில், தெசலோனிக்கத் திருஅவைக்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறார் பவுல். அவர்களுடைய நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகியவற்றைப் பாராட்டுகிறார். உண்மையான சமயநெறி இவற்றில்தான் அடங்கியுள்ளது.
நிற்க.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் தாங்கள் சந்திக்கும் அனைவரையும் கிறிஸ்துவின் இதயம் நோக்கி நகர்த்துகிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 182).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: