• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. திங்கள், 27 மே 2024. நிலைவாழ்வு

Monday, May 27, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
திங்கள், 27 மே 2024
பொதுக்காலம் 8-ஆம் வாரம் – திங்கள்
1 பேதுரு 1:3-9. மாற்கு 10:17-27

 

நிலைவாழ்வு

 

(அ) மையக்கருத்து (நற்செய்தி வாசகம்)

 

இயேசுவைப் பின்பற்றுதலே, அதாவது சீடத்துவமே, நிலைவாழ்வு. இதை அடைவதற்கு செல்வம் தடையாக இருக்கிறது.

 

(ஆ) பாட அமைப்பும் அலையும்

 

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது. முதல் பிரிவில் இளவல் ஒருவர் இயேசுவுடன் உரையாடுகிறார். இரண்டாம் பிரிவில் இயேசு தம் சீடர்களோடு உரையாடுகிறார். முதல் பிரிவில் நிலைவாழ்வை அடைவதற்கான வழியைத் தேடி இயேசுவிடம் வருகிறார் இளவல் ஒருவர். பாதி வழி வந்த அவரால் மீதி வழி செல்ல இயலவில்லை. சொத்து அவருக்குத் தடையாக இருக்கிறது. இரண்டாம் பிரிவில் தம்மைப் பின்பற்றுதல் பற்றியும் செல்வத்தின் இயலாமை பற்றியும் தம் சீடர்களுக்கு எடுத்துரைக்கிறார் இயேசு.

 

(இ) சொல்லும் பொருளும்

 

‘நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?’ (வ. 17) – நிகழ்வில் காணும் இளவலின் தேடல் நமக்கு ஆச்சர்யம் தருகிறது. இளமையின்போது தேட வேண்டிய பொருள், இன்பம் ஆகியவற்றை விடுத்து, இவர் நிலைவாழ்வைத் தேடி வருகிறார். நம் தேடலின் வரையறையையும், இவ்வுலகத் தேடலையும் கடந்த நிலைவாழ்வையும் உணர்ந்துகொள்ளத் தூண்டுகிறார் இளவல். நாம் தேடுகிற பொருளும் இன்பமும் நமக்குள்ளே ஒரு வெற்றிடத்தை உருவாக்குகின்றனவே தவிர, மானுட வெற்றிடத்தை அவற்றால் நிரப்ப இயலாது. நிலைவாழ்வுக்கான தேடல் நம் அனைவருக்கும் பொதுவாக இருக்கிறது.

 

‘இளவல் வருத்தத்தோடு சென்றார்’ – பற்றுகளை விடுவதன் வலியை நாம் இங்கே உணர்ந்துகொள்ள முடிகிறது.

 

‘உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்’ (வ. 21) – ‘பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் கொடுக்க வேண்டும்,’ ‘நிறைவுபெற வேண்டுமெனில் குறைவுபட வேண்டும்,’ ‘வளர வேண்டுமெனில் குழந்தையாக வேண்டும்’ என்பவை இயேசுவின் மாற்றுப் பாடங்கள். நிறைவு பெறுகிற ஒருவர் தன்னையே குறைவுநிலைக்குத் தள்ள வேண்டும். ‘ஏழைகள் எந்நாளும் உங்களோடு இருக்கிறார்கள்!’ என்று பின்நாளில் யூதாசிடம் கூறுகிற இயேசு, இங்கே ஏழைகளுக்குக் கொடுப்பதை வலியுறுத்துகிறார்.

 

‘ஊசியின் காதில் ஒட்டகம்’ – செல்வர் இறையாட்சிக்குள் நுழைய முடியாது என்பதை உருவகமாக உரைக்கிறார் இயேசு. ‘ஊசியின் காது’ என்பது எருசலேமைச் சுற்றியுள்ள பன்னிரு வாயில்களில் ஒன்று. குறுகலான இந்த வாயிலுக்குள் ஒட்டகம் நுழைய வேண்டுமெனில், அதன் மேலிருக்கிற சுமைகள் அகற்றப்பட வேண்டும். ஒட்டகம் மண்டியிட்டுக் கடக்க வேண்டும். இறையாட்சிக்குள் நுழைய விரும்புகிற ஒருவர் செல்வம் என்னும் தன் சுமையை இறக்கி வைக்க வேண்டும்.

 

‘கடவுளால் எல்லாம் இயலும்’ – இறைவனைப் பற்றிக்கொண்டு மற்ற பற்றுகளை விட்டுவிட வேண்டும். இறைவனைப் பற்றிக்கொண்ட ஒருவர் அவருடைய துணையால் அனைத்தையும் செய்ய முடியும்.

 

(ஈ) முதல் வாசகம்

 

துன்புறும் தன் திருஅவைக்கு நம்பிக்கை ஊட்டுகிற சொற்களைப் பகிர்கிற பேதுரு, சோதனைகள், துன்பங்கள் வழியாகவே நாம் மகிழ்ச்சிக்குக் கடந்து செல்ல முடியும் என அறிவுறுத்துகிறார். ‘பொன்னைப் புடமிடுதல்’ என்னும் உருவகத்தைப் பயன்படுத்துகிறார் பேதுரு. நிலத்திலிருந்து எடுக்கப்படுகிற பொன் தன்னோடு அழுக்கையும் மண்ணையும் ஒட்டிக்கொண்டு வருகிறது. நெருப்பிலிடப்பட்டு புடமிடப்படுதல் பொன்னுக்குத் துன்பம் தரக் கூடிய அனுபவமாக இருந்தாலும், அதன் இறுதியில் பொன் மின்னுகிறது, அழுக்குகள் அகன்றுவிடுகின்றன. அவ்வாறே, இவ்வுலக வாழ்வில் நம்மேல் ஒட்டிக்கொண்டுள்ள மாயை என்னும் அழுக்குகளை நாம் அகற்றுவதற்கு துன்பமும் சோதனையும் துணை செய்கின்றன.

 

(உ) இறுதியாக

 

நம் வாழ்வின் இன்றைய தேடல் எது? பொருள், இன்பம் என நம் தேடல் சுருங்கிக்கொள்கிறதா? அல்லது நிலைவாழ்வு, நிறைவாழ்வு என விரிவடைகிறதா?

 

அனைத்தையும் விற்றுவிட வேண்டும் என்னும் அழைப்பு நாம் ஏழைகளாக மாற வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, நம் பற்றுகளை விட வேண்டும் என்பதற்காகவே. செல்வம் நம் வாழ்வுக்கு அவசியமானது. ஆனால், செல்வத்தின் இயலாமை, நிலையாமை ஆகியவற்றைப் புரிந்துகொண்டவர்களாக, அவற்றைப் பயன்படுத்தி நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும்.

 

இயேசுவைப் பின்பற்றுதல் அல்லது சீடத்துவம் தியாகத்தையும், தன்மறுப்பையும், முதன்மைகளைச் சரி செய்வதையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

 

நிற்க.

 

இயேசுவைப் பின்பற்றுதலே நிலைவாழ்வு, அதுவே ஒப்பற்ற செல்வம் என்னும் எதிர்நோக்கை இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு வழங்குகிறது (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 108).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: