இன்றைய இறைமொழி
திங்கள், 29 ஏப்ரல் 2024
பாஸ்கா காலம் 5-ஆம் வாரம் – திங்கள்
திப 14:5-18. யோவா 14:21-26
துணையாளர்
இயேசுவின் இறுதி இராவுணவுப் பேருரை தொடர்கிறது. பேருரை சில இடங்களில் புரிந்துகொள்வதற்குக் கடினமாக இருக்கிறது. ‘நான் போய் உங்களுக்கு உறைவிடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்’ என்று சொல்கிற இயேசு, சற்று நேரத்தில், ‘நானும் தந்தையும் வந்து உங்களிடம் குடிகொள்வோம்’ என்கிறார். இயேசு நம்மைவிட்டுப் போகப் போகிறாரா? அல்லது நம்மிடம் வரப் போகிறாரா? என்று சீடர்களுடன் சேர்ந்து நாமும் சற்றே குழப்பம் அடைகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் யூதாவின் கேள்விக்கு விடை தருகிற இயேசு, தம்மேல் அன்புகொண்டுள்ள சீடர்களிடம் தாமும் தம் தந்தையும் வருவதாக மொழிகிறார்.
நற்செய்தி வாசகத்தின் இறுதிப் பகுதியை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
‘என் பெயரால் தந்தை அனுப்பப் போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார். நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்’ என்கிறார் இயேசு.
உயிர்ப்புக் காலத்தின் பாதியை நாம் கடந்த நிலையில் தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு நம்மையே தயாரிக்கத் தொடங்குகிறது இறைவார்த்தை வழிபாடு.
இயேசுவின் சொற்களில் இரண்டு விடயங்கள் தெளிவாக இருக்கின்றன: ஒன்று, தூய ஆவியாருடைய பெயர் ‘துணையாளர்’ என்பதாகும். இரண்டு, தூய ஆவியாரின் பணிகள் நமக்குக் கற்றுத் தருவதும், நினைவூட்டுவதும் ஆகும். இவ்வாறாக, தூய ஆவியார் நம் அறிவுக்கு வெளிச்சம் தருகிறவராக முன்மொழியப்படுகிறார்.
‘பாராகிளித்தோஸ்’ என்னும் கிரேக்கச் சொல்லை ‘வழக்காடுபவர்,’ ‘துணையாக இருப்பவர்,’ ‘ஆறுதல் தருபவர்’ என்றும் புரிந்துகொள்ளலாம். நம் சார்பாக அல்லது நம் பதிலியாகச் செயல்படுகிறார் தூய ஆவியார்.
‘துணையாளர்’ என்னும் சொல் நமக்கு ஆறுதலாக இருக்கிறது. இயேசு இன்னும் சற்று நேரத்தில் தம் சீடர்களை விட்டுப் பிரியப் போகிறார். இந்த நேரத்தில் தூய ஆவியார் பற்றிய அறிவிப்பு அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.
தந்தை-இயேசு-தூய ஆவியார் என்னும் மூவொரு கடவுள் மறைபொருளும் இங்கே மிளிர்கிறது. நம் வாழ்வின் அன்றாட எதார்த்தங்கள் புரியாத நிலையில் இருக்கும்போது, குறிப்பாக, இயேசுவின் சொற்களை புரிய இயலாத நிலையில் இருக்கின்ற வேளையில் தூய ஆவியாரின் துணையை வேண்டுவோம். அவர்தாமே நமக்குக் கற்றுத் தருவார்.
மூவொரு இறைவனில் நாம் அதிகமாக மறந்துவிடுகிற நபர் தூய ஆவியார். அவருடைய உடனிருப்பை நாம் எப்போதும் உணர்ந்துகொள்தல் அவசியம். நம் உள்ளத்தில் எழும் குரலாக, நம் எண்ணத்தில் உதிக்கும் சிந்தனையாக, நம் அறிவுக்கு வழிகாட்டும் வெளிச்சமாக உடன் வருகிறார் தூய ஆவியார்.
இன்றைய முதல் வாசகத்தில் லிஸ்திராவில் கால் ஊனமுற்றவருக்கு நலம் தருகிற நிகழ்வில், பவுல் மற்றும் பர்னபாவைக் காண்கிற மக்கள் கூட்டம், ‘தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன’ என்று கூறுகின்றனர். அவர்களுக்குக் கடவுள் பற்றிய மறையுண்மையை அறிவிக்கிறார் பவுல். திருத்தூதர்கள் ஆற்றிய வல்ல செயல் கடவுளின் உடனிருப்பை அவர்களுக்கு முன்மொழிகிறது.
கடவுளின் உடனிருப்பை நமக்கு உறுதிசெய்கிறார் தூய ஆவியார். அதே உடனிருப்பை நாம் ஒருவர் மற்றவருக்கு வழங்க அழைக்கப்படுகிறோம்.
நிற்க.
‘எதிர்நோக்கு இல்லாமல் அன்பு இல்லை. அன்பு இல்லாமல் எதிர்நோக்கு இல்லை. நம்பிக்கை இல்லாமல் அன்பும் எதிர்நோக்கும் இல்லை,’ என்கிறார் புனித அகுஸ்தினார். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 84)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: