இன்றைய இறைமொழி
திங்கள், 29 ஜூலை 2024
பொதுக்காலம் 17-ஆம் வாரம் – திங்கள்
புனிதர்கள் மார்த்தா, மரியா, இலாசர், நினைவு
1 யோவான் 4:7-16. யோவான் 11:19-27
மூவகை விருந்தோம்பல்
1749-ஆம் ஆண்டு திருவழிபாட்டு மறைசாட்சியர் பட்டியலின்படி மார்த்தா, மரியா, இலாசர் என்னும் மூவரும் புனிதர்களாகக் கருதப்பட்டு வணங்கப்பட்டனர். 1916-க்குப் பின்னர் 2021 வரை புனித மார்த்தா மட்டுமே திருவழிபாட்டில் நினைவுகூரப்பட்டார். ஏனெனில், மார்த்தாவும் மகதலா நாட்டு மரியாவும் சகோதரிகள் எனக் கருதப்பட்டு, ‘மரியா’ 22-ஆம் தேதியும், ஒரு வாரம் கழித்து, ‘மார்த்தா’ 29-ஆம் தேதியும் நினைவுகூரப்பட்டார்கள். ஆனால், மகதலா மரியாவும் பெத்தானியாவின் மரியாவும் ஒன்றல்ல என மொழிகிற திருத்தந்தை பிரான்சிஸ், இன்றைய நாளில் (ஜூலை 29), ‘மார்த்தா, மரியா, இலாசர்’ என்னும் புனிதர்களை நாம் நினைவுகூர அழைப்புவிடுக்கிறார்.
இன்று நாம் கொண்டாடி மகிழும் புனிதர்களை யோவான் நற்செய்தியாளர் இவ்வாறு அறிமுகம் செய்கிறார்: ‘மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்புகொண்டிருந்தார்’ (யோவா 11:5).
லூக்கா நற்செய்தியில், இயேசு தம் பணியை கலிலேயாவில் (வடக்கு) தொடங்குகிறார். தம் சீடர்களோடு பயணம் தொடங்குகிற இயேசு (காண். லூக் 9), எருசலேம் நோக்கி (தெற்கு) செல்கிறார். இயேசு எருசலேம் செல்லும் வழியில் மார்த்தா-மரியா என்னும் இளவல்களை அறிமுகம் செய்கிறார் லூக்கா. பாடச் சூழலின் பின்புலத்தில் பார்க்கும்போது, முதன்மையான கட்டளை எது என்னும் பகுதியில் இந்நிகழ்வைப் பதிவு செய்கிறார் லூக்கா. இறையன்பு, பிறரன்பு ஆகிய கட்டளைகளை முதன்மையான கட்டளைகளை வரையறுக்கிற இயேசு, பிறரன்புக் கட்டளைக்கு எடுத்துக்காட்டாக நல்ல சமாரியன் எடுத்துக்காட்டை வழங்குவதாகவும், இறையன்புக்கு (‘ஆனால் தேவையானது ஒன்றே!) எடுத்துக்காட்டாக மார்த்தா-மரியா நிகழ்வு வழங்குவதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
யோவான் நற்செய்தியில் ‘இலாசர்’ என்னும் கதைமாந்தர் மார்த்தா-மரியாவின் சகோதரர் என அறிமுகம் செய்யப்படுகிறார். இறந்த அவரை உயிருடன் எழுப்புகிறார் இயேசு. பின்நாளில் இயேசு விருந்தில் அமர்ந்திருக்கும்போது இலாசரும் அவரோடு அமர்ந்திருக்கிறார். வாழ்க்கையை இரண்டாம் முறையாக வாழும் பேறு பெற்றவராக இருக்கிறார் இலாசர்.
விருந்தோம்பல் என்னும் கருத்துருவின் அடிப்படையில் இம்மூன்று புனிதர்களையும் நாம் கொண்டாடுவோம். விவிலிய மரபிலும் நம் மரபிலும் (உலகின் பல மரபுகளில்) மேன்மையாகப் போற்றப்படுகிற ஒரு பண்பு ‘விருந்தோம்பல்.’ நம் உறவினர்கள், நண்பர்களையும் தாண்டி அனைவருக்கும் விருந்தோம்பல் என்பது நம் அடிப்படையான பண்பாக இருக்கிறது. நம் நேரத்தை, ஆற்றலை, உணவை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் அடையாளமே விருந்தோம்பல். ‘விரும்பி அருந்து!’ என்னும் சொற்களின் சுருக்கமே ‘விருந்து’ என்பது என் புரிதல். ‘நான் விரும்பிக் கொடுப்பதால் நீ அருந்து!’ என நமக்கு முன்நிற்பவரோடு நம் உணவைப் பகிர்ந்துகொள்கிறோம். நாம் அனைவருமே இந்த உலகிற்கு வந்த விருந்தினர்கள் என்ற உணர்வையும் இப்பண்பு நமக்கு உணர்த்துகிறது. மேலும், விருந்தில் கைம்மாறு, கொடுக்கல்-வாங்கல், வியாபாரம் இல்லை!
மூவகை விருந்தோம்பலின் அடையாளமாகத் திகழ்கிறார்கள் இன்றைய புனிதர்கள்:
(அ) மார்த்தா: பணிகள் புரியும் விருந்தோம்பல்
இயேசுவைத் தன் இல்லத்திற்கு வரவேற்கிற மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகிறார். இயேசுவுக்கு பணிவிடை செய்வதில் தான் தனியாக விடப்பட்டதாக உணர்கிறார். உணவு தயாரிக்கும் பணி, விருந்தினரின் தேவைகளை நிறைவேற்றும் பணி, இல்லத் தூய்மைப் பணி என பணிகள் புரிகிறார் மார்த்தா. இது முதல் வகை விருந்தோம்பல். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான தயார்நிலையும் பணிநிலையும் நாம் மேற்கொள்ள வேண்டிய விருந்தோம்பல். மேலும், மற்றவர்கள் நம் இல்லம் வரட்டும் என்று அவர்களுக்காகக் கதவுகள் திறப்பதும் விருந்தோம்பலே.
(ஆ) மரியா: செவிமடுக்கும் விருந்தோம்பல்
‘மரியா ஆண்டவருடைய காலடிகளில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்’ என எழுதுகிறார் லூக்கா. மரியாவின் விருந்தோம்பல் அறிவுசார்ந்ததாகவும் ஆன்மிகம் சார்ந்ததாகவும் இருக்கிறது. மற்றவருக்குச் செவிமடுப்பதற்கான முதல் படி அவருடைய காலடிகளில் அமர்வது. அதாவது, எந்தவொரு பரபரப்பு, முற்சார்பு எண்ணம், தீர்ப்பிடுதல் இல்லாமல் அடுத்தவரின் குரலுக்குச் செவிமடுப்பது. மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதற்குத் திறந்த உள்ளம் தேவை.
(இ) இலாசர்: நட்புபாராட்டும் விருந்தோம்பல்
‘நம் நண்பன் இலாசர் தூங்குகிறான். நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்’ என்று தம் சீடர்களிடம் கூறுகிறார் இயேசு (காண். யோவா 11:11). மேலும், இலாசரின் கல்லறைக்கு அருகே நின்று கண்ணீர் விடுகிற இயேசுவைச் சுட்டிக்காட்டி யூதர்கள், ‘பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!’ என்று தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள் (காண். யோவா 11:35-36). நட்பு, அன்பு என்று இரண்டு நிலைகளில் உறவுசார்ந்த விருந்தோம்பலை இங்கே காண்கிறோம்.
விருந்தோம்பல் என்னும் பண்பை, மதிப்பீட்டை நாம் மீண்டும் கொண்டாடுவோம். நம் வீடுகளில் விருந்தினர்களுக்காகவும் வழிப்போக்கர்களுக்காகவும் திண்ணை வைத்து வீடு கட்டிய காலம் போய், இன்று வீதியையும் நமதாக்கிக்கொள்ளும் அளவுக்கு வாசற்படிகளை இழுத்துக்கட்டி, சுவர்களையும் உயர்த்திக்கொண்டோம். நம் இதயங்களையும் இல்லங்களையும் சற்றே திறந்து விருந்தோம்பல் செய்வோம். ‘அந்நியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வானதூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு’ என்கிறது விவிலியம் (காண். எபி 13:2).
‘அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்’ என எழுதுகிறார் யோவான் (முதல் வாசகம்). அன்பின் வெளிப்பாடு விருந்தோம்பல். மார்த்தா, மரியா, இலாசர் விருந்தோம்பலின் மாதிரிகள்!
நிற்க.
மற்றவரைப் பார்க்கும்போது நாம் உதிர்க்கும் புன்னகையும் விருந்தோம்பல் என்பார்கள் எதிர்நோக்கின் திருப்பயணிகள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 159).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: