இன்றைய இறைமொழி
திங்கள், 3 ஜூன் 2024
பொதுக்காலம் 9-ஆம் வாரம் – திங்கள்
2 பேதுரு 1:2-7. மாற்கு 12:1-12
ஆற்றலும் பொறுப்புணர்வும்
‘ஆற்றல் (அதிகாரம்) அதிகம் வரும்போது பொறுப்புணர்வு அதிகம் வரும்’ (‘with great power comes great responsibility’) என்று வழக்கமாகச் சொல்லப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக, ஒரு பள்ளியில் பணியாற்றுகிற ஆசிரியர் ஒருவர் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுகிறார். ஒரு வகுப்பறையில் இருந்த அவருடைய அதிகாரம் இப்போது ஒரு பள்ளி முழுவதற்குமானதாகிறது. அவருடைய ஆற்றலும் அதிகாரமும் இப்போது அதிகரித்துவிட்டது. அதோடு சேர்த்து அவருடைய பொறுப்புணர்வு கூடிவிடுமா?
திருவிவிலியத்தின் பார்வை சற்றே மாறுபட்டதாக இருக்கிறது: ‘பொறுப்புணர்வு அதிகம் வரும்போது ஆற்றல் (அதிகாரம்) அதிகம் வரும்’ (‘with great responsibility comes great power’) இக்கூற்றை இன்றைய நற்செய்தி வாசகத்தின் துணையோடு புரிந்துகொள்வோம்.
கொடிய குத்தகைதாரர் உவமையை முன்மொழிகிறார் இயேசு. அவர்கள் கொடியவர்கள் ஏனெனில், உரிமையாளருக்கு உரியதைத் தர மறுப்பதோடு அவருடைய சொத்துகளுக்கும் உறவுகளுக்கும் சேதம் ஏற்படுத்துகிறார்கள்.
உவமையில் நாம் காணும் குத்தகைதாரர்கள்ஆற்றல் (அதிகாரம்) கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கென்று திராட்சைத் தோட்டம் இருந்தது. திராட்சைத்தோட்டம் நல்ல பலன் தந்தது. திராட்சைத் தோட்டம் பாதுகாப்பானதாக இருந்தது. வேலியிடப்பட்டு, கண்காணிப்புக்கோபுரம் மற்றும் பிழிவுக்குழி (திராட்சை இரசம் எடுப்பதற்கு) கொண்டதாக இருந்தது. அவர்கள் நிறைய பணியாளர்களைக் கொண்டிருந்தார்கள். அப்பணியாளர்கள் திராட்சைத் தோட்ட வேலையோடு சேர்த்து அடியாள் வேலையும் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருந்தார்கள். பொருளாதார அளவில் நிறைவாக இருந்தார்கள் – பணியாளர்கள் வைத்து வேலை செய்யும் அளவுக்குப் பணம் வைத்திருந்தார்கள். இவ்வளவு ஆற்றல்கள் அவர்களுக்கு இருந்தாலும், அவர்களிடம் பொறுப்புணர்வு இல்லை. உரிமையாளருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவர்கள் உரிமையாளரையும் அவருடைய மகனையும் பணியாளர்களையும் மதிக்கவில்லை. தம் சக மனிதர்களுக்கு அநீதி இழைப்பது குறித்த எந்த குற்றவுணர்வும் இல்லை. எனவே, ஆற்றல் அதிகம் வருவதால் பொறுப்புணர்வு அதிகம் வரும் என்று கூற இயலாது.
உரிமையாளர் உடனடியாக களத்தில் இறங்குகிறார். கொடியவர்களிடமிருந்து தோட்டத்தைப் பிடுங்கி ‘வேறு ஆள்களிடம்’ அதை ஒப்படைக்கிறார். இந்த ‘வேறு ஆள்கள்’ உரிமையாளரின் நம்பிக்கைக்கு உரியவர்கள். நம்பிக்கைக்குரிய நிலையில் அவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார்கள். அவர்கள் பொறுப்புடன் செயல்படுவதால் திராட்சைத் தோட்டத்தின்மேல் ஆற்றல் (அதிகாரம்) பெறுகிறார்கள்.
இன்னொரு சொலவடை வழியாக இயேசு உவமையின் பொருளை எளிதாக்குகிறார்: ‘கட்டுவோர் விலக்கிய, புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று’ (காண். திபா 118:22, மேற்கோள்).
மூலைக்கல் மற்ற கற்களைவிட முதன்மையானது. ஏனெனில், இரண்டு திசைகளின் சுவர்களை ஒருங்கிணைப்பதும், தாங்கிப்பிடிப்பதும், மேல்கீழ் உள்ள கற்களோடு பொருந்தி நிற்பதும் இதன் பணி. கட்டுவோர் இக்கல்லை முதலில் புறக்கணிக்கிறார்கள் அல்லது விலக்கி வைக்கிறார்கள். ஏனெனில், அது வலுவற்ற, சிறிய கல்லாக இருந்திருக்கலாம். ஆனாலும், கட்டுபவர் அதை எடுத்துப் பயன்படுத்துகிறார். மற்றவர்களின் கண்களுக்கு வியப்பாகும் வண்ணம் அதன் ஆற்றல் கூடுகிறது.
மூலைக்கல்லுக்கு ஆற்றல் தந்தது தலைவரின் அருள்.
சில பாடங்கள்:
(அ) ‘பொறுப்புணர்வு கூடக்கூட ஆற்றல் (அதிகாரம்) கூடுகிறது’ என்பதால் நாம் பொறுப்புணர்விலும் மேற்பார்வைத் தலைமைத்துவத்திலும் வளர்வோம். மரியாவும் யோசேப்பும் மீட்பு வரலாற்றில் முதன்மையான இடத்தைப் பெறக் காரணம் அவர்களுடைய பிரமாணிக்கம், நம்பகத்தன்மை. அவர்களுடைய பொறுப்புணர்வால் ஆற்றல் பெறுகிறார்கள்.
(ஆ) கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு திராட்சைத் தோட்டத்தைக் கொடுத்துள்ளார் – வாழ்க்கை, குடும்பம், வேலை, அழைப்பு, பணி, தொழில். அவரே உரிமையாளர். நாம் குத்தகைதாரர்கள் (எனவே, நிரந்தரமல்ல), மேற்பார்வையாளர்கள் (எனவே, பொறுப்புணர்வு அவசியம்). எனவே, நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள நேரம், பணம், வளங்கள், உறவுகள் ஆகியவற்றைக் குறித்து அக்கறையுடனும், மேற்பார்வைத் தலைமைத்துவத்துடனும் செயல்படுவோம்.
(இ) சில நேரங்களில் நம் வாழ்வில் நாம் புறக்கணிக்கப்பட்ட, விலக்கப்பட்ட கற்கள்போல உணர்கிறோம். நம் வாழ்வின் நோக்கம் நமக்குத் தெரியாதபோது, நம் நிராகரிக்கப்படும்போது, நம் வேலை கண்டுகொள்ளப்படாதபோது, நாம் மிதிக்கப்படும்போது நாம் ஏறக்குறைய உடைந்துபோகிறோம். ஆனால், எதிர்நோக்கை இழக்க வேண்டாம். ஏனெனில், கட்டுபவர் (கடவுள்) நமக்கு அருகில் நிற்கிறார். அவருடைய பார்வை சீக்கிரம் நம்மேல் படும். அப்போது, அவர், ‘வாடா ராஜா! வாடா ராஜாத்தி!’ என நம்மை அப்படியே அள்ளிக்கொள்வார். கட்டடத்தின் மூலைக்கல்லாக நம்மை வைத்து அழகு பார்ப்பார். நம் வாழ்வின் நோக்கத்தை உயர்த்துவார். அவர் நம்மை எடுத்துப் பயன்படுத்துமாறு அவருடைய கரங்களுக்குக் கீழ் நம்மைத் தாழ்த்துவோம்.
நிற்க.
‘ஆகையால் நீங்கள் உங்கள் நம்பிக்கையோடு நற்பண்பும், நற்பண்போடு அறிவும், அறிவோடு தன்னடக்கமும், தன்னடக்கத்தோடு மன உறுதியும், மன உறுதியோடு இறைப்பற்றும், இறைப்பற்றோடு சகோதர நேயமும், சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள்’ (2 பேதுரு 1:5-7) (முதல்வாசகம்). எதிர்நோக்கு வழியாகவே நம்பிக்கை அன்பை நோக்கி நகர்கிறது (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 114).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: