இன்றைய இறைமொழி
திங்கள், 5 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 18-ஆம் வாரம் – திங்கள்
புனித பனிமய அன்னை, விருப்ப நினைவு
திருவெளிப்பாடு 21:1-5அ. லூக்கா 11:27-28
புதியது ஆக்குகிறேன்
உரோமை நகரில் உள்ள புனித கன்னி மரியாவின் பேராலய நேர்ந்தளிப்பு விழாவை (விருப்ப நினைவு) இன்று கொண்டாடுகிறோம். பனிமய அன்னை திருநாள் என்றும் இந்த நாள் சிறப்பிக்கப்படுகிறது. எபேசு பொதுச்சங்கம் 431-இல் அன்னை கன்னி மரியா இறைவனின் தாய் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இறைவனின் அன்னையாம் கன்னி மரியாவுக்கு உரோமையில் ஓர் ஆலயத்தை எழுப்புகிறார் திருத்தந்தை 3-ஆம் சிக்ஸ்துஸ்.
மரபுக் கதையாடல் ஒன்றின்படி, ஏறக்குறைய 352-இல் திருத்தந்தை லிபேரியுஸ் அவர்கள் ஆட்சிக்காலத்தில் உரோமை மேட்டுக்குடி தம்பதி யோவான் மற்றும் மனைவி குழந்தைப்பேறு வேண்டி அன்னை கன்னி மரியாவிடம் இறைவேண்டல் செய்தனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் கன்னி மரியாவுக்கு ஆலயம் கட்டுவதாகப் பொருத்தனை செய்தனர். வேண்டுதல் நிறைவேறிவிடுகிறது. எங்கே ஆலயம் கட்டுவது என்று யோசித்துக்கொண்டிருந்தவர்களுக்கு, உரோமையின் வெயில் காலத்தில் ஓரிடத்தில் பனி பெய்யச் செய்து அடையாளம் காட்டுகிறார் மரியா. அந்த இடத்தில் ஆலயம் கட்டப்படுகிறது.
இன்றைய முதல் வாசகத்தில், யோவான் புதிய எருசலேம் இறங்கி வருவதைக் காட்சியில் காண்கிறார். மானிடர் நடுவில் இறங்கி வருகிற விண்ணக எருசலேம் மாந்தர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுகிறது. நற்செய்தி வாசகத்தில், இயேசுவைப் பெற்றெடுத்த தாயின் பேறுபெற்ற நிலையை அறிக்கையிடுகிறார் ஒரு பெண். இறைவார்த்தை வழியாக நிகழும் ஆன்மிகப் பெற்றெடுத்தலே மேன்மையானது எனச் சொல்கிறார் இயேசு.
இத்திருநாளும் இன்றைய வாசகங்களும் நமக்குச் சொல்வது என்ன?
(அ) ஆலயம் இறைவனின் அடையாளமாக நம் நடுவில் திகழ்கிறது. இறைவனுக்கும் நமக்கும் உள்ள நெருக்கத்தை அது குறிக்கிறது. புதிய ஏற்பாட்டில் ஆலயம் என்பது ஆள்சார்ந்த பிரசன்னத்தைக் குறிக்கிறது. ஆகையால்தான், நாம் எல்லாரும் ஆலயம் என்கிறார் பவுல். நாம் இன்று இறைவனின் பிரசன்னத்தின் அடையாளமாகத் திகழ்கிறோமா?
(ஆ) அன்னை கன்னி மரியா கடவுளின் அன்னையாகத் திகழ்கிறார். கடவுளின் அன்னை என்னும் நிலை, உடல் அளவில் நிகழ்ந்ததை விட, ஆன்மிக அளவில் – இறைவார்த்தைக்குச் செவிமடுத்ததால் – நிகழ்கிறது. இறைவார்த்தையை நாம் எப்படி ஏற்று வாழ்கிறோம்?
(இ) இறைப்பராமரிப்பின்மேல் பற்றுறுதி. இறைவன் தம் பிள்ளைகளைப் பராமரித்துப் பாதுகாக்கிறார் என்னும் நம்பிக்கையையும், நம் வாழ்வில் நாம் கொண்டிருக்க வேண்டிய தாராள உள்ளம் மற்றும் சரணாகதியையும் நமக்குக் கற்பிக்கிறது இன்றைய திருநாள்.
நிற்க.
இறைவனின் உடனிருப்பு நம் வாழ்வு அனைத்தையும் புதியது ஆக்குகிறது என்னும் எதிர்நோக்கு நம் வாழ்வை முன்னால் உந்தித் தள்ளுகிறது. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 165).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: