இன்றைய இறைமொழி
திங்கள், 8 ஜூலை 2024
பொதுக்காலம் 14-ஆம் வாரம் – திங்கள்
ஓசேயா 2:14-16, 19-20. மத்தேயு 9:18-26
செயல்படும் நம்பிக்கை!
இயேசு நிகழ்த்திய இரண்டு வல்ல செயல்களை இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம்: தொழுகைக்கூடத் தலைவரின் மகள் உயிர்பெறுதல், இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதல்! இயேசு இறப்பின்மீதும் நோயின்மீதும் கொண்டிருந்த ஆற்றலை இவை வெளிப்படுத்துவதோடு, அவருடைய இறைஅதிகாரத்தையும் இறைஇரக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன.
தொழுகைக்கூடத் தலைவர் மற்றும் இரத்தப் போக்குடைய பெண் – இவ்விருவருக்கும் பொதுவாக இருந்தவை இரண்டு: ஒன்று, உயிர்தரவும் நலம்தரவும் இயேசுவால் இயலும் என்னும் நம்பிக்கை. இரண்டு, இயேசுவை நோக்கிய அவர்களுடைய பயணம் என்னும் செயல்பாடு.
வல்ல செயல்கள் நம் வாழ்வில் நடந்தேறுகிறதோ இல்லையோ, நல்ல செயல்கள் எதுவும் நடக்க வேண்டுமெனில், நமக்கு இவ்விரண்டும் – நம்பிக்கையும் செயல்பாடும் – தேவை.
‘நம்பிக்கை’ மட்டும் வைத்திருந்து ‘செயல்பாடு’ குறைந்தால் நாம் தேக்கநிலையில் இருப்போம். ‘நம்பிக்கையில்’ புறப்படாத செயல்பாடு மேலோட்டமானதாகவும் பயனற்றதாகவும் இருக்கும்.
இன்று நாம் எச்செயலைச் செய்வதாக இருந்தாலும் அச்செயல்பாடு நன்மையில் முடியும் என்னும் நம்பிக்கையும், நன்மையை நோக்கி அன்றாடச் செயல்பாடும் அவசியம்.
இன்றைய முதல் வாசகத்தில், கணவன்-மனைவி உருவகம் வழியாக உரையாடுகிற ஆண்டவராகிய கடவுள், ‘உன்னோடு மணஒப்பந்தம் செய்துகொள்வேன் … நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும் உன்னோடு மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்’ என்கிறார். இடம் சார்ந்த மண ஒப்பந்தம் மதிப்பீடுகள் சார்ந்த ஒப்பந்தமாகக் கனிகிறது.
நிற்க.
வாழ்க்கை முடிந்துவிட்டது என நினைப்பவர்கள், ‘இனி விடியும்!’ எனப் புறப்பட்டால், வல்ல செயல்கள் நடக்கும் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 142).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: