இன்றைய இறைமொழி
திங்கள், 9 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 23-ஆம் வாரம், திங்கள்
1 கொரிந்தியர் 5:1-8. லூக்கா 6:6-11
இதயத்தின் புளிப்புமாவு
புளிப்புமாவு என்னும் உருவகத்தைப் பயன்படுத்தி நேர்முகமாக விண்ணரசின் தன்மையை விளக்குகிறார் இயேசு (காண். மத் 13:33, லூக் 13:20-21). இன்றைய முதல் வாசகத்தில், ‘புளிப்பு மாவு’ அல்லது புளிக்காரம் என்னும் உருவகத்தைப் பயன்படுத்துகிற பவுல், எதிர்மறையான நிலையில் இதைக் கையாள்கிறார். புளிப்பு மாவை நாம் எடுக்காமல் விட்டால் அது நல்ல மாவில் ஏற்படுத்துகிற எதிர்மறையான விளைவை – புளிப்பை – சுட்டிக்காட்டுகிறார் பவுல். சட்டநெறிவாதம் என்னும் புளிப்புமாவை தங்கள் இதயத்தில் கொண்டிருக்கிற பரிசேயர்கள் இயேசு நிகழ்த்தும் வல்ல செயல் குறித்து இடறல்படுகிறார்கள்.
(அ) உள்ளத்தைக் கறைப்படுத்தும் பாவம் என்னும் புளிக்காரம்
முதல் வாசகத்தில், கொரிந்து நகரத் திருஅவையில் நிகழ்கிற பரத்தைமை அல்லது தகாத பாலியல் உறவைக் கடிந்துகொள்கிற பவுல், பாவம் செய்கிறவரையும் பாவத்தையும் நாம் நீக்காவிடில் அது ஒட்டுமொத்த குழுமத்தையும் பாதிக்கும் என எச்சரிக்கிறார். பாலியல் பிறழ்வு, பரத்தைமை, இறுமாப்பு, ஆணவம் மற்றும் எந்தப் பாவமும் கட்டுக்குள் வைக்காவிட்டால் அது தனிநபரில் வளர்வதோடு, அவர் வாழ்கிற குழுமத்திலும் தவறான முன்மாதிரியை உருவாக்கி மற்றவர்களையும் அச்செயல் நோக்கி இழுக்கிறது. பாவத்தையும் பிறழ்வுபட்ட வாழ்வையும் புளிப்புமாவுக்கு ஒப்பிடுகிற பவுல், அதை நம் வாழ்விலிருந்து களைய அழைக்கிறார்.
சிறிய குற்றம் நாம் கண்டுகொள்ளாமல் இருக்கும்போது பெரிய பாவமாக மாறத் தொடங்குகிறது. பாவமாக மாறியவுடன் நம் இதயம் கடினப்படுகிறது. கடவுளிடமிருந்தும் ஒருவர் மற்றவரிடமிருந்தும் நம்மைத் தூரமாக்குகிறது. தொடர்ந்து நாம் நம் இதயங்களை ஆய்ந்து செய்வதாலும், ஒப்புரவு (பாவசங்கீர்த்தனம்) அருளடையாளம் வழியாகக் கடவுளின் அருளை நாடுவதாலும் நாம் பாவம் என்னும் புளிப்புமாவை நம்மிடமிருந்து அகற்றி ‘நல்ல மாவை’ தக்கவைத்துக்கொள்ள முடியும்.
(ஆ) சட்டநெறிவாதம் என்னும் பரிசேயர்களின் புளிப்புமாவு
நற்செய்தி வாசகத்தில், இயேசு சூம்பிய கை உடைய ஒருவருக்கு ஓய்வுநாளில் நலம் தருகிறார். நிகழ்வு நடக்கிற தொழுகைக்கூடத்தில் உள்ள மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் நடந்த புதுமை குறித்து மகிழ்வதற்குப் பதிலாக இயேசு இச்செயலை ஓய்வுநாளில் ஆற்றியதால் அது பற்றி இடறல்படுகிறார்கள். சட்டநெறிவாதத்தில் அவர்களுடைய இதயம் கடினமாக இருந்தது. இரக்கத்தையும் பேரன்பையும்விட சட்டமே அவர்களுக்கு மேன்மையாகத் தெரிந்தது. ஓய்வுநாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா? என்று அவர்களைக் கேட்பதன் வழியாக, கடவுள் எந்நாளும் நன்மை செய்பவர் என்பதை எடுத்துரைக்கிறார்.
பரிசேயர்களின் சட்டநெறிவாதம் என்னும் புளிப்புமாவு அவர்களுடைய இதயத்தை இருளடையச் செய்கிறது. கடவுளின் இரக்கத்தையும் அருளையும் அன்பையும் அவர்களால் காண இயலவில்லை. சட்டதிட்டங்கள், விதிமுறைகள் இவை யாவும் சில நேரங்களில் மற்றவர்களுக்கு நாம் ஆற்றுகிற பணிகளிலிருந்து நம்மைத் தூரமாக்கிவிடலாம்.
(இ) இரக்கம், மாற்றம் என்னும் புளிப்புமாவு
பவுலும், இயேசுவும் மற்றொரு புளிப்புமாவு நோக்கி நம்மைத் திருப்புகிறார்கள்: கடவுளின் இரக்கம், மனமாற்றம் என்னும் புளிப்புமாவு. ‘நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும்’ என எழுதுகிற பவுல், ‘தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக, நேர்மை, உண்மை என்னும் புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமா!’ என அழைக்கிறார். கடவுளின் இரக்கமே சட்டத்தின் இதயம் என எடுத்துரைக்கிறார் இயேசு. நற்செயல் செய்வதற்கு உள்ளத்தில் இரக்கமும் நன்மைத்தனமும் இருந்தால் போதுமானது, இடமும் நேரமும் தடையல்ல என்பது இயேசுவின் போதனை.
பாவம், சட்டநெறிவாதம் என்னும் புளிப்புமாவு நம் இதயத்தைக் கெடுக்கிறது. ஆனால், அருள், மனமாற்றம் என்னும் புளிப்புமாவு நமக்கு வாழ்வையும், வளர்ச்சியையும், புத்தாக்கத்தையும் தருகிறது. நம்மை இயக்குகிற ஆற்றல் இதுவே. நம் இதயங்கள் கடவுளின் இதயங்களைப் போல மாற வேண்டுமெனில், கிறிஸ்துவின் அன்பு என்னும் புளிக்காரம் நேர்முகமாக நம்மில் பரவ வேண்டும்.
நிற்க.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் தங்களைக் கடவுளிடமிருந்து தூய்மையாக்கும் பாவம், கடின உள்ளம் என்னும் புளிப்பு மாவை விலக்கிவிட்டு, இரக்கம் என்னும் புளிப்பு மாவால் தங்கள் இதயங்களை நிரப்பி வாழ்வும் வளர்ச்சியும் பெறுகிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 194).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: