இன்றைய இறைமொழி
புதன், 10 ஜூலை 2024
பொதுக்காலம் 14-ஆம் வாரம் – புதன்
ஓசேயா 10:1-3, 7-8, 12. மத்தேயு 10:1-7
ஆற்றல்படுத்தலும் அனுப்புதலும்
‘தனியாய் எவரும் சாதிக்க முடியாது’ என்றும், ‘நம்மிடம் நேரமும் ஆற்றலும் குறைவாகவே உள்ளது’ என்றும் அறிகிற தலைவர் தன் பணிகளை தன் உடனுழைப்பாளர்களோடு பகிர்ந்துகொடுக்கிறார், அவர்களை அந்தப் பணிக்கு ஏற்றவாறு ஆற்றல்படுத்துகிறார். ஆற்றல்படுத்திய பின்னர் அவர்களைப் பணிகளில் ஈடுபடச் செய்கிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று விடயங்கள் நிகழ்கின்றன: (அ) தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் இயேசு தம் சீடர்களுக்கு அதிகாரம் வழங்குகிறார். (ஆ) பன்னிருவருடைய பெயர்கள் வழங்கப்படுகின்றன. பெயர்கள் மொழியப்படுவது என்பது அவர்கள் பெறுகிற அடையாளத்தையும் சிறப்பையும் குறிக்கின்றன. (இ) பணியின் இலக்கைக் கூர்மைப்படுத்தி – இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுமாறு – அனுப்புகிறார். அழைக்கப்படுபவர்கள் எல்லாரும் அனுப்பப்படுகிறார்கள். அனுப்பப்படுதலில்தான் சீடத்துவம் நிறைவுக்கு வருகிறது.
இயேசுவின் சீடத்துவத்தில் பங்கேற்கும் நாமும் இயேசுவின் அதிகாரத்தைப் பெற்றுள்ளோம் – தீமையை வெற்றிகொள்ளும் அதிகாரம் நமக்கும் இருக்கிறது. அவருடைய பார்வையில் நாம் பெயர்கொண்டவர்களாக – அடையாளம் பெற்றவர்களாக – இருக்கிறோம். ‘இதுதான் நான் செய்ய வேண்டிய பணி!’ என்னும் தெளிவு நமக்கு இருக்கிறது.
இறையாட்சி நெருங்கிவந்துவிட்டது என்னும் செய்தியை நாம் இன்று எப்படி அறிவிக்கிறோம்? நம் அதிகாரம் கடவுளிடமிருந்து ஊற்றெடுக்கிறது எனில், தீமையை எதிர்த்து நிற்கும் துணிவு நமக்கு இருக்கிறதா? ஒருவர் மற்றவரோடு இணைந்த பயணத்தில் நாம் மற்றவருடைய உடனிருப்பைக் கொண்டாடுகிறோமா? அறிமுகமான ஒன்றில் தொடங்கி அறிமுகமில்லாதவர்களை நோக்கி நாம் நற்செய்தி அறிவிக்கச் செல்ல வேண்டும் என்பது இயேசுவின் எண்ணமாக இருப்பதால், நம்மையும் நமக்கு அருகில் உள்ளவர்களையும் மேம்படுத்துவது எப்படி?
இன்றைய முதல் வாசகத்தில், ‘நீதியை நீங்கள் விதைத்துக்கொள்ளுங்கள். அன்பின் கனியை அறுவடை செய்யுங்கள்’ என இறைவாக்கினர் ஓசேயா வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு அறிவுறுத்துகிறார் ஆண்டவராகிய கடவுள். நீதி என்பது மற்றவருக்கு உரியதை மற்றவருக்குக் கொடுப்பது. நீதியில் நிலைத்திருக்கும்போது ஆண்டவராகிய கடவுள் அன்பின் கனிகளை விளைவிக்கிறார்.
நிற்க.
ஆற்றல் இழந்தவர்களுக்கு ஆற்றல் தருவது எதிர்நோக்குநிறை திருப்பயணிகளின் பணி ஆகும் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 144).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: