இன்றைய இறைமொழி
புதன், 11 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 23-ஆம் வாரம், புதன்
1 கொரிந்தியர் 7:25-31. லூக்கா 6:20-26
பற்றற்ற பற்றுகள்
நம் வாழ்வில் நாம் கொண்டிருக்கிற பற்றுகளை – செல்வம், குடும்பம், உறவுநிலைகள் – ஆய்ந்து பார்க்க அழைக்கின்றன இன்றைய வாசகங்கள். பற்றுகளில் நாம் கொள்ள வேண்டிய பற்றற்ற நிலைகள் என்றால், இந்த உலகையும் அதன் உறவுகளையும் விடுவது அல்ல, மாறாக, நம் முதன்மைகள் சிதறாமல் கவனித்துக்கொள்வது ஆகும். நம் பற்றுகள் கடவுளோடு ஒருங்கிணைக்கப்பட்டால் அவை நமக்கு கட்டின்மை (விடுதலை உணர்வு) தருகின்றன. இல்லையெனில், அவை நம்மை அடிமையாக்குகின்றன.
(அ) உலகில் வாழ்தல் ஆனால் தள்ளி நிற்றல்
கொரிந்து நகரத் திருஅவையில் நிகழ்ந்த பாலியல் பிறழ்வுகளைச் சுட்டிக்காட்டுகிற பவுல், தன் அறிவுரையை மணஉறவிலும் மணத்துறவிலும் நிறைவு செய்கிறார். ‘மணஉறவில்’ இருந்தாலும் ‘மணத்துறவில்’ – திருமணம் முடிக்காமல் – இருந்தாலும் அவரவர் இருக்கிற நிலையில் பற்றற்று இருக்க வேண்டும் என்பது பவுலுடைய அறிவுரை. மணஉறவின் பொறுப்புகளைத் துறப்பது அல்ல, மணஉறவின் பற்றுகளை விடுத்தல் நலம். நம் உடைமைகள், உறவுகள், தன்னார்வங்கள் ஆகியவற்றை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இவ்வுலகில் நாம் வாழும் காலம் மிகவும் குறுகியது. இவ்வுலகின் பற்றுகள் நம் வாழ்வின் முதன்மையான கடவுளிடமிருந்து நம்மைத் தள்ளிவிடாவண்ணம் தற்காத்துக்கொள்ள வேண்டும். பற்றுகளை விடுத்தல் வழியாக நாம் கடவுளின் திருவுளத்துக்கு மனம் திறப்பதோடு, எந்தவொரு அக மற்றும் புற அழுத்தங்களின்றி நாம் வாழ்கிறோம்.
நம் பணிகள், உறவுகள், உடைமைகள் ஆகிய நமக்கு அவசியமே, ஆனால், அவசியங்கள் நம் வாழ்வின் இலக்கிலிருந்து நம் பார்வையை மறைத்துவிடலாகாது.
(ஆ) பேறுபெற்றநிலைகள்: பற்றற்றோரே ஆசீர் பெற்றோர்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சமவெளிப் பொழிவை வாசிக்கிறோம். இவ்வுலகம் முதன்மைகள் எனக் கருதுபவற்றை – செல்வம், இன்பம், திருப்தி, புகழ்ச்சி – கடிந்துகொள்கிற இயேசு, ஏழ்மை, பட்டினி, குறைவு, அவமானம் ஆகியவற்றை அனுபவிப்பவர்கள் ஆசீர் பெற்றவர்கள் என மொழிகிறார். செல்வம், இன்பம், திருப்தி, புகழ்ச்சி ஆகியவை நமக்கு தன்நிறைவையும், தன்னம்பிக்கையையும் தந்தாலும் அவை நம்மை நோக்கியே நம்மைத் திருப்பிவிடுகின்றன. கடவுளிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் நம்மை அந்நியப்படுத்துகின்றன. மேற்காணும் பற்றுகளிலிருந்து நம் உள்ளத்தை நாம் திருப்பாவிடில் அவை நம்மை நெருக்கி அழித்துவிடுகின்றன.
நம் பற்றுறுதியை நாம் எங்கே வைக்கிறோம் என்று நம்மிடம் கேட்கிறார் இயேசு. செல்வம், புகழ்ச்சி தருகிற பாதுகாப்பு வெளியிலிருந்து நமக்கு வருகிறது. கடவுள்மேல் நாம் கொண்டிருக்கும் சார்புநிலை உள்ளார்ந்த பாதுகாப்பையும் கட்டின்மையையும் வழங்குகிறது.
(இ) பற்றற்றநிலை வழியாக அன்புக்கான சுதந்திரம்
பவுலும் இயேசுவும் நம் வாழ்வின் பற்றுகளை பற்றற்ற நிலையில் பற்றிக்கொள்ள அழைக்கிறார்கள். கடவுளையும் அவருடைய ஆட்சிக்குரியவற்றையும் பற்றிக்கொள்ள வேண்டுமெனில் பற்றுகள் விடுத்தல் நலம். பற்றுகள் விடுக்கும்போது நம் கைகளை நாம் விரித்துக்கொடுக்கிறோம். பற்றற்ற நிலையே சுதந்திரம். இச்சுதந்திரம் (கட்டின்மை) நாம் பிளவுபடா உள்ளத்தோடு கடவுளைப் பற்றிக்கொள்ள உதவுகிறது.
நிற்க.
பற்றற்ற நிலை என்றால் கண்டுகொள்ளாத்தன்மை அல்லது புறக்கணிப்பு அல்ல, மாறாக, நம் உள்மனச் சுதந்திரம் என அறிந்தவர்கள் எதிர்நோக்கின் திருப்பயணிகள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 196)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: