இன்றைய இறைமொழி
புதன், 14 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 19-ஆம் வாரம் – புதன்
எசேக்கியேல் 9:1-7. 10:18-22. மத்தேயு 18:15-20
திருச்சபையிடம் கூறுங்கள்
இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் குழுமப் பொழிவு பிரிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ‘திருச்சபை’ (‘எக்லேசியா’) என்னும் சொல் நற்செய்தி நூல்களில் இங்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘கலேயோ’ (‘அழைக்கப்படுதல்’) என்னும் கிரேக்க வினைச்சொல்லிலிருந்து வருகிற பெயர்ச்சொல்லே ‘எக்லேசியா’ (‘அழைக்கப்பட்டவர்கள்’ அல்லது ‘ஒன்றிணைக்கப்பட்டவர்கள்’).
குழும வாழ்வில் ஒருவர் மற்றவருக்கு இடையே நிகழும் மனத்தாங்கல்களையும் தவறான புரிதல்களையும் சரிசெய்வதற்கு இயேசு மூன்று படிநிலைகளை முன்மொழிகிறார்: முதலில், அந்த நபர் தனித்திருக்கும்போது அவரிடம் பேசுவது. இரண்டு, சாட்சிகளைக் கொண்டு சென்று உரையாடுவது. மூன்று, திருச்சபையிடம் அறிவிப்பது. திருச்சபை அந்த நபருக்கும் நமக்கும் இடையே பாலமாக நிற்கிறது. நமக்கு எதிராகப் பாவம் செய்யும் நபர் நம்மை விட்டுத் துண்டித்து விடப்பட வேண்டியவர் அல்லர். மாறாக, எந்நிலையிலும் வெற்றிகொள்ளப்பட்டு நம்மோடு சேர்த்துக்கொள்ளப்பட வேண்டியவர். திருச்சபையில் அனைவரும் முதன்மையானவர், முக்கியமானவர் என்னும் செய்தியை இப்பகுதி எடுத்துரைக்கிறது.
திருச்சபை இந்த மண்ணுலகில் ஆற்றும் செயல் விண்ணுலகிலும் பிரதிபலிக்கிறது. மேலும், மனம் ஒத்து வாழ்கிற நபர்களால் உருவாகிற குழுமத்தில், திருச்சபையில் கிறிஸ்து வீற்றிருக்கிறார்.
ஆக,
திருச்சபை என்பது உறவுப் பாலமாகவும், விண்ணகத்தின் வினை ஊக்கியாகவும், கடவுளின் திருமுன்னிலையை மானிடர் நடுவில் கொண்டு வந்து நிறுத்துவதாகவும் அமைந்துள்ளது.
திருச்சபை பற்றிய புரிதல் நமக்கு மற்றவர்கள்மேல் இருக்க வேண்டிய பொறுப்புணர்வை எடுத்துரைப்பதாகவும் அமைகிறது. குழம வாழ்வு வழியாகவே நம் இயல்பையும், இருத்தலையும், இயக்கத்தையும் நிர்ணயிக்கும் நாம் அனைவரும் குழுமத்தின்மேல் நாம் கொண்டிருக்கிற சார்புநிலையில், அனைவரையும் வெற்றிகொள்ள வேண்டும்.
இன்று நாம் நினைவுகூறும் புனித மாக்ஸிமிலியன் மரிய கோல்பே தன் உயிரைக் கொடுக்க முன்வருகிறார். தன் உயிரைப் பொருட்படுத்தாமல் இருந்த நிலையில் அதை நிலைவாழ்வுக்குக் காத்துக்கொள்கிறார். இவருடைய துணிச்சலும் மனஉறுதியும் தியாகமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை.
நம் உறவு வட்டங்களில் உள்ள அனைவரையும் இன்று எண்ணிப்பார்ப்போம். நமக்கு எதிராகப் பாவம் செய்யும் ஒருவரை நாம் வெற்றிகொள்ள முயற்சி செய்வோம்.
நிற்க.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் மேற்கொள்ளும் பயணம் குழுமப் பயணமாகவே இருக்கிறது. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 173).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: