• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. புதன், 14 பிப்ரவரி 2024. திரும்புக – ஒப்புரவாகுக – திருப்புக

Tuesday, February 13, 2024   Fr Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Lenten Season Reconciliation Daily Catholic Lectio

இன்றைய இறைமொழி
புதன், 14 பிப்ரவரி 2024
திருநீற்றுப் புதன்
யோவேல் 2:12-18. 2 கொரிந்தியர் 5:20-6:2. மத்தேயு 6:1-6, 16-18.

 

திரும்புக – ஒப்புரவாகுக – திருப்புக

திருநீறு அல்லது சாம்பல் அணிந்து இன்று நாம் தவக்காலத்திற்குள் நுழைகின்றோம்.

 

(1) தவக்காலம் என்றால் என்ன?

(அ) தவக்காலம் என்பது ஒரு நேரம் அல்லது காலம். இது வெறும் நாள்காட்டி நேரமாக – அதாவது, 14 பிப்ரவரி தொடங்கி 31 மார்ச் 2024 அன்று நிறைவுக்கு வருகின்ற நேரமாக – நின்றுவிடக் கூடாது. மாறாக, நம் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய காலமாக இது இருந்தால் நலம்.

 

(ஆ) தவக்காலம் என்பது தயாரிப்புக் காலம். கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவைப் பொருளுள்ள விதத்தில் கொண்டாடுவதற்கான தயாரிப்புக் காலமாக இது இருக்கிறது.

 

(இ) வாழ்வின் மறுபக்கத்தைக் கொண்டாடும் காலம். நிறைய உணவு உண்ணுதலை விடுத்து பசித்திருத்தல், சேர்த்து வைத்தலை விடுத்து பகிர்ந்து கொடுத்தல், கடவுளிடமிருந்து தள்ளி வந்ததை விடுத்து அவரிடம் திரும்பிச் செல்தல் என வாழ்வின் மறுபக்கத்தை அறியவும் கொண்டாடவும் நம்மை அழைக்கிறது இக்காலம்.

 

(2) இன்றைய வாசகங்களுக்கான விளக்கம்

‘உள்ளே இருப்பவர்கள் வெளியே வரட்டும்’ என்று இன்றைய முதல் வாசகமும் (காண். யோவே 2:12-18), ‘வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்லட்டும்’ என்று இன்றைய நற்செய்தி வாசகமும் (காண். மத் 6:1-6, 16-18) தவத்தின் இரண்டு பரிமாணங்களை நமக்கு எடுத்துரைக்கின்றன. தவக்காலம் என்றால் சோகம், அது பாவம் பற்றிய நினைவூட்டல், அல்லது வழிபாட்டுக் காலத்தின் ஒரு பாகம் என்ற பழைய புரிதல்களை விடுத்து, தவக்காலம் என்பது பாஸ்கா மகிழ்ச்சியின் முன்சுவை, நம் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி என்ற புதிய புரிதல்களோடு தவக்காலத்திற்குள் நுழைவோம்.

 

நாம் மேற்கொள்ளும் பயணங்களை, ‘பாதை மாறும் பயணங்கள்,’ ‘பாதை விலகும் பயணங்கள்’ என்று இரண்டாகப் பிரிக்கலாம். பாதை மாறும் பயணங்கள் இலக்கை அடைய, பாதை விலகும் பயணங்கள் இலக்கையும் அடையாமல், பயணத்தின் நேரத்தையும், பயணம் செய்பவரின் ஆற்றலையும் வீணடிக்கும். குருத்து ஞாயிறு அன்று நாம் ஆலயத்திற்குள் நுழைகையில் கைகளில் ஏந்தி, ‘ஓசன்னா’ என்று வெற்றி ஆர்ப்பரிப்பு செய்த குருத்தோலைகள் இன்று தங்கள் பாதையை மாற்றி சாம்பலாக, திருநீறாக நம் நெற்றியை அலங்கரிக்கின்றன. இனி சாம்பல் ஒருபோதும் குருத்தாக மாற முடியாது. எல்லாப் பயணங்களின் இறுதியும், இலக்கும் இதுவே என்று நம் வாழ்வின் இறுதியை நினைவூட்டுகின்றது குருத்தோலைகளின் இந்தப் பயணம்.

 

இன்றைய இறைவார்த்தை வழிபாடு இரண்டு வகைப் பயணங்கள் பற்றிப் பேசுகின்றது. இன்றைய முதல் வாசகத்தில், ‘நான், எனது, என் வீடு, என் வயல், என் கட்டில், என் இன்பம்’ என வீட்டிற்குள் இருக்கும் பெரியவர்கள், சிறியவர்கள், முதியவர்கள், குழந்தைகள், மணமக்கள், இளம்பெண்கள் என அனைவரையும் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே வருமாறு அழைக்கின்றார் ஆண்டவராகிய கடவுள். பாலும் தேனும் பொழியும் நாட்டில் குடியிருந்த இஸ்ரயேல் மக்கள் காலப்போக்கில் தங்கள் அண்டை நாடுகள் போல தங்களுக்கென்று அரசர்களை ஏற்படுத்திக் கொண்டதோடல்லாமல், தாங்கள் இறைவனின் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்பதை மறந்து, தங்கள் கடவுளையும் மறக்க ஆரம்பிக்கின்றனர். மேலும், தங்கள் கடவுளாகிய ஆண்டவர், ‘அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர், செய்யவிரும்பும் தீங்கை மறப்பவர்’ என்பதையும் மறக்கின்றனர். இந்தப் பின்புலத்தில், யோவேல் வழியாக ‘உண்ணா நோன்பை’ அறிவிக்கின்ற கடவுள், இந்நோண்பில் பங்கு பெறுபவர்கள் தங்கள் ‘இதயங்களைக் கிழித்துக் கொள்ள’ அறிவுறுத்தப்படுகின்றனர். வெறும் உடைகளைக் கிழித்துக் கொண்டு நிர்வாணமாக நோன்பு இருப்பவர்கள் வெளிப்புற சடங்காக அதை மாற்றிவிட வாய்ப்பு உண்டு. ஆனால், இதயத்தைக் கிழிக்கும் நோன்பு ஒரு பக்கம் நோன்பு இருப்பவரைக் கடவுளிடம் தன்னை விரித்துக் காட்டுவதையும், மறு பக்கம் கடவுளைத் தன்னகத்தே அனுமதிப்பதையும் குறித்துக் காட்டுகிறது.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இந்தப் பாதையைத் திருப்பிப் போடுகின்றார். அறச்செயல்கள் செய்வதற்காக ‘வெளியில்’ – வீதிகளில் – நின்றவர்களை ‘உள்ளே’ – உள்ளறைக்குள் – அனுப்புகின்றார். ‘எனக்கும் பிறருக்குமான அன்பைக் காட்டும்’ ‘தர்மம் செய்தல்’ என்னை மற்றவர்கள் முன் அடையாளப்படுத்தினால் நான் அந்தச் செயலிலிருந்து அந்நியப்படுகிறேன். அதுபோலவே, ‘எனக்கும் இறைவனுக்குமான அன்பைக் காட்டும்’ என் ‘இறைவேண்டலும்,’ ‘எனக்கும் எனக்குமான அன்பைக் காட்டும்’ என் ‘நோன்பும்’ மற்றவர்களின் பார்வையால் என்னை என் செயல்களிலிருந்து அந்நியப்படுத்திவிடுகின்றன. அச்செயல்கள் மற்றவர்களின் பார்வையால் கைம்மாற்றை உடனே பெற்றுவிடுகின்றன. உடனே கைம்மாறு கிடைக்கும் எந்த உடனடிச் செயல்களாலும் பயனில்லை. ஆனால், நான் என் உள்ளறைக்குள் செல்லும்போது அது எனக்கும் என் இறைவனுக்குமே மட்டும் தெரிகிறது. இவ்வகைத் தெரிதலில் கைம்மாறு கிடைக்கக் காலதாமதம் ஆகலாம். ஆனால், இக்கைம்மாறு நிலையானது. நம்மைக் கட்டியிருக்கும் சில தீய பழக்கங்கள் உடனடி கைம்மாற்றைத் தருவதால் நாம் அவற்றைத் தொடர்ந்து நாடுகிறோம். ஆனால், உடனடியான அவை அனைத்தும் மிகச் சில மணித்துளிகளே நம்மில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், ‘மறைவாய் உள்ளது’ என இறைவனுக்கும் எனக்கும் தெரியும் என் உள்ளம் நீண்ட கைம்மாறு பெற உதவுகிறது. ஆக, உடனடிக் கைம்மாறுகளைக் கைவிட நாம் வெளியிலிருந்து உள்ளே பயணம் செய்வது அவசியம்.

 

இந்த அகநோக்குப் பயணத்தில்தான், நம் இதயம் கிழிகிறது. அந்தக் கிழிந்த உள்ளம் கடவுள் நம்மில் நுழையும் வாயிலாக மாறுகிறது. உள்நுழையும் அவர், இன்றைய திருப்பாடல் (திபா 51) ஆசிரியர் வேண்டுவது போல, நமக்கு, ‘தூயதோர் உள்ளம், உறுதிதரும் ஆவி, புதுப்பிக்கும் ஆவி, மீட்பின் மகிழ்ச்சி, தன்னார்வ மனம், திறந்த இதழ்’ ஆகியவற்றை வழங்குகின்றார். இந்தப் பயணத்திற்கான நாள் எது? ‘இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்’ என்கிறது இரண்டாம் வாசகம் (காண். 2 கொரி 5:20-6:2). உள்ளிருக்கும் நாம் வெளியே, வெளியிலிருக்கும் நாம் உள்ளே என்று நம் பாதைகள் மாறட்டும் – இன்றும் என்றும்!

 

(3) தவக்காலத்திற்கான வாழ்வியல் நிலை

(அ) கடவுளிடம் திரும்பி வருதல். ஏனெனில், கடவுள் நம்மிடம் திரும்பி வருகின்றார். இன்றைய முதல் வாசகத்தில் (காண். யோவே 2:12-18), ‘உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்’ என்று மக்களை அழைக்கின்றார். ஆடைகளைக் கிழித்துக் கொண்டு அழுவதை நிறுத்தி விட்டு இதயத்தைக் கிழித்துக் கொள்ளுமாறு அழைக்கின்றார்.

 

(ஆ) நோன்பு மற்றும் ஒறுத்தல் வழியாக நம் வாழ்வை ஒழுங்கு செய்வது. நோன்பு என்பது பசியை வலிந்து ஏற்கும் நிலை. ஒறுத்தல் என்பது இன்பத்தை விரும்பி விடும் நிலை. இப்படி ஏற்பதன் வழியாக நம் மானுட நிலையின் நொறுங்குநிலையை, உறுதியற்ற நிலையை அனுபவிக்கின்றோம்.

 

(இ) மற்றவர்களை நோக்கிச் செல்தல். பிறரன்புச் செயல்கள் வழியாக தேவையில் இருப்பவர்களை நாடிச் செல்லத் தவக்காலம் நம்மை அழைக்கிறது. இரக்கம் என்பது மற்றவர்களின் இருத்தலை உணர்ந்து நாம் அளிக்கும் பதிலிறுப்பு.

 

தவக்காலத்தின் மூன்று தூண்கள் என அழைக்கப்படுகிற இறைவேண்டல், நோன்பு, பிறரன்புச் செயல் ஆகியவை முறையே கடவுளை நோக்கியும், நம்மை நோக்கியும், மற்றவர்களை நோக்கியும் நகர்த்துகின்றன.

 

(4) திருநீற்றுப் புதன் முன்மொழியும் சவால்கள்

(அ) இந்நாளைப் பற்றிக்கொள்வோம். ‘இதுவே தகுந்த காலம். இதுவே மீட்பின் நேரம்’ என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் சொல்லக் கேட்கின்றோம். ‘நாளை’ என்பது இல்லை. இன்றே, இப்போதே நம்மை மாற்றும்போதுதான் வாழ்க்கை மாறுகிறது.

 

(ஆ) வெளிப்புற அடையாளங்களை விடுத்து, நம் உள்ளறைக்குச் செல்தல். வாழ்வின் முதன்மையானவை அனைத்தும் நம் உள்ளறையில் உள்ளன. கதவுகளை அடைத்து உள்ளறைக்குச் செல்வது அவசியம்.

 

(இ) கடின இதயம் விடுத்தல். ‘உங்கள் இதயங்களைக் கடினப்படுத்திக்கொள்ள வேண்டாம். அவரது குரலுக்குச் செவிகொடுங்கள்’ என்கிறது நற்செய்திக்கு முன் வசனம். கடினப்படும் உள்ளம் மாற்றத்திற்குத் தயாராவதில்லை. உறைந்த உள்ளம் உயிரற்றதாகி விடுகின்றது. நம் உறைநிலையை விடுப்போம்.

 

இத்தவக்காலம் அருளின் காலமாக நமக்கு அமைவதாக!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: