இன்றைய இறைமொழி
புதன், 15 மே 2024
பாஸ்கா காலம் 7-ஆம் வாரம் – புதன்
திப 20:28-38. யோவா 17:11அ-19
நிரந்தரமாக்குதல்
புனித அகுஸ்தினார் தன்னுடைய ‘ஒப்புகைகள்‘ நூலில், தன் இளவயது நண்பன் நெப்ரிடியுவின் இறப்பை நினைத்து வருந்துகிற பகுதியில், ‘நிரந்தரமற்ற உன்னை நிரந்தரமான இறைவனில் அன்பு செய்திருந்தால், நீயும் நிரந்தரமாக என்னோடு இருந்திருப்பாய் அல்லவா!’ என உருகுகிறார்.
நாம் மேற்கொள்கிற அனைத்துச் சந்திப்புகளுமே பிரியாவிடையோடு இணைந்தே இருக்கின்றன என்பதே எதார்த்தமான உண்மை. தற்காலிகமாக நடக்கும் சந்திப்புகளை நிரந்தரமாக்குகிற இருவரை இன்றைய வாசகங்கள் நமக்குக் காட்டுகின்றன.
முதல் வாசகத்தில், பவுல் எபேசு நகர மூப்பர்களிடமிருந்து விடைபெறுகிறார். பவுல் தான் பணி செய்த எந்த இடத்திலும் ஒட்டிக்கொள்ளவில்லை. திருஅவை அல்லது குழுமத்தை ஏற்படுத்தியபின், அவர்களிடமிருந்து ஒரு தலைவரை நியமித்துவிட்டு, அங்கிருந்து இடம் நகர்கிறார். இதையே மேலாண்மையியலில் ‘ஆட்டோமேஷன்’ என்கிறார்கள். அதாவது, நாம் இல்லாமலேயே நம் செயல்கள் நடந்தேறுமாறு நிகழ்வுகளையும் நபர்களையும் கருவிகளையும் நமக்கேற்றாற்போல மாற்றிக்கொள்தல். இனி பவுலுடைய பணியை மூப்பர்கள் செய்யத் தொடங்குவார்கள். பவுல் மற்ற பணிகள் நோக்கி நகர முடியும். இத்தகைய கட்டின்மையை நாம் ஒவ்வொருவரும் அனுபவித்தால் எத்துணை நலம்!
‘எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை. என்னுடைய தேவைகளுக்காகவும் என்னோடு இருந்தவர்களுடைய தேவைகளுக்காகவும் இந்த என் கைகளே உழைத்தன’ என்னும் சொற்கள் ஒரே நேரத்தில் பவுலுடைய நாணயத்தையும், நேர்மையையும், எளிமையையும், கடின உழைப்பையும் காட்டுகின்றன.
‘நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்!’ எனச் சொல்லி விடைபெறுகிறார் பவுல். இன்றைய சொல்லாடலில் குறிப்பிட வேண்டுமெனில், ஓரிடத்தில், ஒரு நேரத்தில் இருக்கும் மனிதர்களோடு எப்போதும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுமாறு, அவர்களை அப்படியே ‘க்ளவுடில்’ (‘மேகத்தில்’) சேமிக்கிறார். அதாவது, கடவுளிடம் அவர்களை ஒப்படைக்கிறார். கடவுளிடம் ஒப்படைப்பதன் வழியாக அவர் அவர்களை எந்நேரமும் எவ்விடத்திலும் கடவுள் வழியாகத் தொடர்புகொள்ள முடியும்.
இயேசுவின் பிரியாவிடைப் பகுதியின் இறுதியாக வருகிற இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தம் சீடர்களைத் தந்தையிடம் அர்ப்பணமாக்குகிறார்: ‘உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும் … அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்.’ தம் சீடர்கள் அழிந்துபோகாவண்ணம் அவர்களைத் தந்தையிடம் ஒப்படைக்கிறார் இயேசு. ‘நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்!’ என மொழிகிற இயேசு, தம் தந்தையிடம் திருத்தூதர்களை ஒப்படைப்பதன் வழியாக அவர்களைத் தம்மோடு நிரந்தரத்திற்கு உரிமையாக்குகிறார்.
இவ்வாறாக, பவுலும் இயேசுவும் தற்காலிகமான உறவுகளை கடவுளிடம் ஒப்படைப்பதன், அர்ப்பணிப்பதன் வழியாக அவற்றை நிரந்தரமாக்குகிறார்கள்.
ஒப்படைத்தல், அல்லது அர்ப்பணித்தலின் பொருள் என்ன?
(அ) ஒப்படைக்கப்படுகிற எதுவும் பாதுகாப்பு பெறுகிறது.
(ஆ) அர்ப்பணிக்கப்படுகிற எதுவும் தனிப்பட்ட மதிப்பைப் பெறுகிறது.
(இ) ஒப்படைக்கப்படுபவர்கள், அர்ப்பணிக்கப்படுபவர்கள் தூய்மையாகவும் மேன்மையாகவும் கருதப்படுகின்றன.
நம்மையும் நம் அன்புக்குரியவர்களையும் நம் செயல்களையும் கடவுளிடம் ஒப்படைத்து, அவருக்கு அர்ப்பணிப்பதன் வழியாக நாமும் அவர்களையும் அவற்றையும் நிரந்தரமாக்குகிறோம்.
நிரந்தரமான இறைவனின் கரத்தைச் சேரும் அனைத்தும் நிரந்தரம் ஆகின்றன! நம் கைகளை விரித்துக் கடவுளிடம் ஒப்படைக்க நமக்கு நிறைய துணிவு தேவை.
நிற்க.
‘எதிர்நோக்குடன் நெருக்கமான, நாம் பின்பற்ற வேண்டிய மதிப்பீடு பொறுமை. வேகமாக ஓடுகிற நம் உலகில், அனைத்தும் நமக்கு இப்போதே கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம். மற்றவர்களோடு இருப்பதற்கு நமக்கு நேரம் இல்லை. குடும்ப உறுப்பினர்களும் ஒருவர் மற்றவருடைய உடனிருப்பைக் கொண்டாட முடிவதில்லை. ஓட்டமும் நடையுமான வாழ்க்கை முறை பொறுமையை வேகமாக விரட்டி அடிக்கிறது. விளைவாக, பொறுமையின்மை, கலக்கம், வன்முறை நம்மைப் பற்றிக்கொள்கின்றன. மகிழ்ச்சியை இழந்தவர்களாக, நாம் நம்மையே மையமாக்கிக்கொள்ளத் தொடங்குகிறோம்.’ திருத்தந்தை பிரான்சிஸ், யூபிலி அறிவிப்பு ஆணை, 9 மே 2024, எண். 4 (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 98)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: