இன்றைய இறைமொழி
புதன், 17 ஜூலை 2024
பொதுக்காலம் 15-ஆம் வாரம் – புதன்
எசாயா 10:5-7, 13-16. மத்தேயு 11:25-27
தாழ்ச்சியும் வெளிப்பாடும்
புனித இஞ்ஞாசியார் தன்னுடைய ஆன்மீகப் பயிற்சிகள் நூலின் ஒரு பகுதியில், ‘கருவி பயன்படுத்தும் மருத்துவர் கத்தி 11: என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். மருத்துவரின் கத்தி அடுத்தவரை வெட்டிக் காயப்படுத்தும். ஆனால், அப்படி அந்தக் கத்தி வெட்டிக் காயத்தை ஏற்படுத்தினால்தான் மற்றவர் நலம் பெறுவார். ஆக, மருத்துவரின் கத்தி தரும் வலி எப்போதுமே நலமானது. சிறிது நேர துன்பத்தை அது தந்தாலும், நீண்ட நலனை அது பின்நாளில் ஒருவருக்குத் தரும்.
இன்றைய முதல் வாசகத்தில், கடவுளின் மருத்துவர் கத்தியாக அசீரியா நாடு இருக்கிறது. தன்னுடைய சொந்த இஸ்ரயேல் மக்களின் தவறுகளைக் கண்டிக்க, ஆண்டவராகிய கடவுள், அசீரியாவை மருத்துவர் கத்தியாகப் பயன்படுத்துகின்றார். ஆண்டவர் கொடுக்கும் மருந்து நோயைவிடக் கசப்பானதாக அவர்களுக்குத் தோன்றுகிறது.
ஆனால், அதே மருத்துவர் கத்தி, கொலை செய்யும் கத்தியாக மாறியபோது, ஆண்டவர் தன் மக்களைக் காப்பாற்ற இறங்கி வருகின்றார்.
இவ்வாறாக, ‘கொல்வதும் நானே, உயிர்தருவதும் நானே’ என்று தன்னை எல்லாம் வல்ல இறைவனாகக் காட்டுகின்றார்.
இதுவே மறைபொருள்.
எல்லாம் இறைவனிடமிருந்தே அனைத்தும் வருகின்றன.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 11:25-27), விண்ணரசின் மறைபொருள் குழந்தைகளுக்கு (சீடர்களுக்கு) வெளிப்படுத்தப்பட்டது பற்றி மகிழ்கின்றார் இயேசு. வாழ்வில் நமக்கு நடப்பவை அனைத்திற்குமான பொருளை அறிந்திருப்பவர் இறைவனே. அவற்றை நாம் நம் அறிவால் அல்ல, அவருடைய வெளிப்பாட்டலே அறிந்துகொள்ள முடியும்.
முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் பெருமையுணர்வையும் இறுமாப்பையும் கடிந்துகொள்கிறார். நற்செய்தி வாசகத்தில் தாழ்ச்சியையும் குழந்தை உள்ளத்தையும் இயேசு பாராட்டி மகிழ்கிறார்.
நிற்க.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் குழந்தைகளைப் போல, நம் கைகளை விரித்துக் கடவுளிடம் கொடுப்பர் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 150).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: