இன்றைய இறைமொழி
புதன், 18 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 24-ஆம் வாரம், புதன்
1 கொரிந்தியர் 12:31-13:13. லூக்கா 7:31-35
அன்பு தன்னலம் நாடாது!
அன்பின் முதன்மையான இயல்பு அது தன்னலம் நாடாது என்பதில்தான் அடங்கியுள்ளது என நமக்குத் தெரிவிக்கின்றன இன்றைய வாசகங்கள். முதல் வாசகத்தில் பவுல் மொழிகிற ‘அன்புக்குப் பாடல்’ பகுதியும், நற்செய்தி வாசகத்தில் இயேசு தம் சமகாலத்தவரைப் பற்றி முன்மொழிகிற உருவகங்கள் பகுதியும், நாம் நமக்குரியதை மட்டும் நாடாமல், பிறரை மையப்படுத்தி வாழ அழைக்கின்றன.
(அ) அன்பின் இயல்பு – தன்னலமற்றது, தியாகம் நிறைந்தது
முதல் வாசகத்தில், ‘அன்பு’ என்னும் சொல்லாடலின் ஆழ்ந்த பொருளை பாடல் வழியாக விளக்குகிறார் பவுல். ‘அன்பு’ என்னும் சொல் கிரேக்க மொழியில் நான்கு பதங்களில் வழங்கப்பட்டது: ‘ஏரோஸ்’ (உடல்சார் அன்பு), ‘ஃபிலெயா’ (நட்பு), ‘ஸ்டார்கே’ (குடும்ப உறவு, பாசம்), ‘அகாபே’ (‘தன்னலமற்ற அன்பு’). கொரிந்து நகரத் திருஅவையில் காணப்படும் பிரச்சினைகள் அனைத்தையும் – பிரிவினை, பரத்தைமை, கூடாஒழுக்கம், சிலைவழிபாடு, பாகுபாடு பாராட்டுதல், அருள்வரங்களை மையப்படுத்திய வேறுபாடு – ஆய்ந்து பார்க்கிற பவுல், இவற்றுக்கெல்லாம் அடிப்படையான மனப்பாங்கு ‘தன்னலம் நாடுதல்’ எனக் கண்டறிகிறார். தன்னலம் மற்றும் தன்விருப்பத்தால் ஈர்க்கப்படுகிறவர்கள் மற்றவர்களிடமிருந்து தள்ளி நிற்கிறார்கள் என அறிகிற பவுல், அன்பு கொண்டிருப்பதன் வழியாக தன்னலத்திலிருந்து அவர்கள் விடுபட அழைக்கிறார். ஆக, அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல, மாறாக, ஒரு செயல்.
நம் குடும்பங்களில், குழுமங்களில், பணித்தளங்களில் நாம் இத்தகைய அன்பு கொண்டிருக்க வேண்டும். நம் விருப்பங்கள், சௌகரியங்களை விடுத்து சற்றே மற்றவர் நோக்கி நகர வேண்டும். நமக்குள் மேலோங்கி நிற்கும் தன்னல உணர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
(ஆ) தன்னலம் நாடாத அன்பு – இயேசுவின் எடுத்துக்காட்டு
இயேசுவின் சமகாலத்தவர் அவரை ஏற்றுக்கொள்வது பற்றி இடறல்படுகிறார்கள். ஆளுக்கு ஏற்றாற்போல அளவையை மாற்றுகிறார்கள். திருமுழுக்கு யோவானை ஓர் அளவை கொண்டு அளந்தவர்கள், இயேசு வந்தவுடன் அளவையை மாற்றிக்கொள்கிறார்கள். சந்தைவெளியில் விளையாடுகிற சிறுவர்களையும் அவர்களுடைய விளையாட்டையும் உருவகமாக மொழிகிற இயேசு, மக்கள், கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் கண்டுகொள்வதற்குப் பதிலாக, ஒவ்வொருவரும் தங்களுடைய விருப்பங்களையே முன்மொழிகிறார்கள் எனக் குறிப்பிடுகிறார்.
இயேசு தம் விருப்பத்தை அல்ல, மாறாக, இறைவிருப்பத்தை நிறைவேற்றவே வருகிறார். தமக்கேற்றாற் போல அளவைகளை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.
(இ) அன்பு என்னும் மாபெரும் கொடை – முழுமையான நிறைவுக்கான வழி
‘ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு மூன்றும் நிலையாய் உள்ளன. இவற்றில் அன்பே தலைசிறந்தது’ எனப் பாடலை நிறைவு செய்கிறார் பவுல். பாடலின் தொடக்கத்திலும் ‘மேன்மையான நெறியை உங்களுக்கு அறிவிக்கிறேன்’ என மொழிகிறார். நம் கொடைகள், திறன்கள், வெற்றிகள் அனைத்தும் அன்பால் மட்டுமே நிறைவடைகின்றன. அன்பே அனைத்தையும் நிறைவுக்குக் கொண்டுவருகிறது.
இன்றைய நம் உலகம், பணம், அதிகாரம், சமூக மேன்மை ஆகியவற்றை நாடுமாறு நம்மைத் தூண்டுகிறது. ஆனால், நல்ல வாழ்க்கையின் அளவுகோல் அன்பே. ஏனெனில், அன்பில் தன்னலம் இல்லை. அன்பின் வழியாக நாம் இந்த உலகை மாற்ற இயலும்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தன்னலம் நாடுவதில்லை. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 202)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: