இன்றைய இறைமொழி
புதன், 19 ஜூன் 2024
பொதுக்காலம் 11-ஆம் வாரம் – புதன்
2 அரசர்கள் 2:1, 6-14. மத்தேயு 6:1-6, 16-18.
மறைவாய் உள்ளதை
இன்று சமூக தகவல்பரிமாற்ற உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் சொல்லாடல், ‘சோஷியல் மீடியா வேலிடேஷன்’ (‘சரிபார்த்தல்’ அல்லது ‘ஏற்றுக்கொள்ளப்படுதல்’). அதாவது, நாம் செய்கிற ஒன்றைப் பற்றிய ‘விஸிபிலிட்டி’ (‘கண்களுக்குத் தெரிதல்’) உருவாக்கி, பார்வையாளர்களிடமிருந்து விருப்பங்களைப் பெற்றுக்கொள்வது. நாம் செய்கிற செயல் நற்செயலாக இருந்தால்கூட, மற்றவர்களின் விருப்பங்களை அது பெறவில்லை என்றால், நாம் ஏதோ சரிவரச் செயல்படவில்லை என்பது போன்ற உணர்வை இது உருவாக்குகிறது. இன்னொரு பக்கம், நாம் ‘லைக்’ வாங்க வேண்டும் என்பதற்காக, நம் வீட்டில் உள்ள அனைத்தையும் நாம் செய்கிற செயல்கள் அனைத்தையும் அப்படியே ‘ரீல்’ ஆக்கி அவற்றைப் பதிவிட்டு, ‘மறைவாக’ எதுவும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவும் துணிகிறோம்.
‘மறைவாக உள்ளது மதிப்புக்கு உரியது’ என்பதே நம் மரபுவழிப் புரிதல். ஆகையால்தான், மதிப்புக்குரியவை அனைத்தும் மறைத்தே வைக்கப்படுகின்றன. சைவ மற்றும் வைணவ மரபில் கருவறையின் கடவுள் மறைவாக இருக்கிறார். கணவன்-மனைவி உறவில் மதிப்புக்குரியவை மறைந்தே இருக்கின்றன.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், யூத சமயத்தின் மூன்றுநிலை அடித்தளங்களை எடுத்து அவற்றைப் பற்றிய புதிய புரிதலைத் தருகிறார் இயேசு. நோன்பிருத்தல், இறைவேண்டல் செய்தல், தர்மம் செய்தல் என்னும் மூன்றும் யூத சமயத்தின் அடித்தளங்களாக இருந்தன. இவற்றின் வழியாக கடவுளுக்கும் மனிதர்களுக்குமான உறவு சரி செய்யப்பட்டதுடன், ஒருவர் மற்றவர்மேல் உள்ள அக்கறை, பரிவு ஆகியவை வளர்ந்தன. காலப்போக்கில் இச்செயல்கள் மற்றவர்களிடமிருந்து நன்மதிப்பைப் பெறுவதற்கான வெறும் சடங்குகளாக மாறின. அதாவது, மறைவாய் இருக்க வேண்டியவை மற்றவர்களின் பார்வையில் படுமாறு செய்யப்பட்டன.
இவை மூன்றும் மீண்டும் மறைவாகச் செல்ல வேண்டும் என்பது இயேசுவின் பாடம்.
ஆன்மிகத் தளத்தில் நாம் கடவுளோடு உறவுநிலையில் இருக்கிறோம். அல்லது புனித அகுஸ்தினாரின் சொற்களில் சொல்ல வேண்டுமெனில், படைக்கப்பட்ட பொருள்களாகிய நாம் படைத்தவருடன் உறவில் இருக்கிறோம். இப்படிப்பட்ட உறவில் நம் இலக்கு படைத்தவரே அன்றி, படைப்புப் பொருள்கள் அல்ல. நாம் படைத்தவருக்கு ஏற்புடையவர் ஆகவேண்டுமே தவிர, படைப்புப் பொருள்களுக்கு அல்ல!
மிகவும் எளிதான கேள்வியாக மாற்றினால், ‘நான் ஏன் திருப்பலிக்குச் செல்கிறேன்?’
எனக்கும் கடவுளுக்குமான உறவை வலுப்படுத்தவும், அவருடைய ஆசியைப் பெறவும் நான் திருப்பலிக்குச் சென்றால் நலம். அதை விடுத்து, திருப்பலிக்குச் சென்றால் மற்றவர்கள்முன் நாம் பக்தியாளராகத் தெரியலாம், அல்லது மற்றவர்கள் நம்மைப் பாராட்டுவார்கள் என்ற நிலையில் சென்றால் அது நலமன்று.
தர்மம் செய்யும்போது நாம் அச்செயலை மறைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், நம்மிடமிருந்து தர்மம் பெறுபவர் மாண்புக்கு உரியவர். அவருக்கு நான் ஒன்றைக் கொடுப்பதை விளம்பரப்படுத்தி நான் மகிழ்ச்சி அடைய முற்படும்போது, அவருடைய மாண்பை நான் சீர்குலைக்கிறேன்.
இறைவேண்டல் செய்யும்போது நான் மறைவாக செபிப்பதோடு, குறைவான சொற்களைக் கொண்டு செபிக்க வேண்டும். வெளிப்புற அறைகள் ஒவ்வொன்றாக நான் அடைத்துக்கொண்டு வரும்போது, உள்ளறை திறக்கிறது.
நோன்பு இருக்கும்போது, நான் செய்யும் இச்செயல் என் மனத்தை கடவுளை நோக்கித் திருப்ப வேண்டும். நான் செய்யும் நோன்புச் செயலால் மற்றவர்களுக்கு நற்செயல் ஆற்ற வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தின் பின்புலத்தில், ஆன்மிகத் தளத்தில் மட்டுமல்ல, வாழ்வியல் தளத்திலும் ‘மறைவு’ போற்ற முயற்சி செய்வோம். நம்மிடம் உள்ளதை மற்றவர்களிடம் காட்ட வேண்டும் என்பது நம் உந்துணர்வாக இருந்தாலும், மற்றவர்கள் பார்வையில் அல்ல, நாம் நம் பார்வையிலும் கடவுளுடைய பார்வையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலே போதும் (‘வேலிடேஷன்’) என்னும் பக்குவம் பெற வேண்டும்.
நிற்க.
இன்றைய முதல் வாசகத்தில், எலியாவின் பணி முடிந்து எலிசாவின் பணி தொடங்குகிறது. ஆண்டவராகிய கடவுள் தம் உடனிருப்பை மக்களுக்கு வழங்கிக்கொண்டே இருக்கிறார். தாம் தேர்ந்துகொண்டவர்கள் வழியாகத் தொடர்ந்து அவர்களை வழிநடத்துகிறார். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 128).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: