இன்றைய இறைமொழி
புதன், 21 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 20-ஆம் வாரம் – புதன்
எசேக்கியேல் 34:1-11. மத்தேயு 20:1-16
நீங்களும் நானும்
மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்ற விண்ணரசு பற்றிய உவமை ஒன்றை இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம். காலையிலிருந்து மாலை வரை வேலை செய்த அனைவருக்கும் ஒரே கூலி கொடுக்கப்படுகின்றது. நமக்கு நெருடலான ஒரு வாசகம். ‘இது அநீதி!’ என்று குரல் எழுப்ப நம்மைத் தூண்டும் ஒரு வாசகம். ‘அநீதி எதுவும் நடக்கவில்லையே!’ என்று நம்மையே சாந்தப்படுத்த நம்மைத் தூண்டும் வாசகம். ‘நிலக்கிழார் அனைவருக்கும் இரக்கம் காட்டியிருக்கலாமே! முதலில் வந்தவர்களை நீதியோடும் கடைசியில் வந்தவர்களை இரக்கத்தோடும் அவர் அணுகுவது ஏன்?’ என்று கேட்கத் தூண்டும் வாசகம்.
இந்த வாசகத்தின் வரலாற்றுப் பின்னணி, மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில் நிலவிய வேறுபாடு அல்லது பிரிவினையாக இருக்க வேண்டும். இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர் நற்செய்தியை அறிவிக்கின்ற திருத்தூதர்கள் முதலில் யூதர்களுக்கும், பின்னர் புறவினத்தாருக்கும் அறிவிக்கின்றனர். ஆக, முதலில் கிறிஸ்தவராக மாறியவர்கள் நாங்கள், நீங்களோ கடைசியில் அல்லது பின்னர் வந்தவர்கள் என்ற, ‘நாங்கள்-நீங்கள்’ பாகுபாடு அங்கே எழுந்திருக்கலாம். ‘முதலில் வந்த நாங்கள் பெரியவர்களா? கடைசியில் வந்த நீங்கள் பெரியவர்களா?’ என்ற கேள்விக்கு விடையாக மத்தேயு நற்செய்தியாளர் இந்த உவமையை உருவாக்கியிருக்கலாம். அல்லது இயேசு இதைச் சொல்லியிருக்க, மற்ற நற்செய்தியாளர்கள் இதை எழுதாமல் விட்டிருக்கலாம்.
இந்த உவமையை நாம் பல கோணங்களில் பார்;த்திருக்கின்றோம். திராட்சைத் தோட்டம் என்பது பொதுவாக இஸ்ரயேல் மக்களைக் குறிக்கின்ற உருவகம். ஆக, புதிய இஸ்ரயேலாகிய திருச்சபை என்னும் திராட்சைத் தோட்டத்தை இது குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். வேலைக்கு முதலில் வந்தவர்களின் பார்வையில் நாம் இந்த உவமையைப் பார்த்தால், அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது போல நமக்குத் தெரிகிறது. கடைசியில் வந்தவர்களின் பார்வையில் பார்த்தால், கடவுள் அவர்களுக்கு இரக்கம் காட்டியது நமக்குத் தெரிகிறது. அவர்களின் தேவை அறிந்து அவர்களுக்குக் கூலி கொடுத்தது தெரிகிறது. நிலக்கிழாரின் பார்வையில் பார்த்தால், அவர் தன் திராட்சைத் தோட்டப் பணியையே முதன்மைப் படுத்துகின்றார். பணம் அவருக்கும் பெரிதாகத் தெரியவில்லை. ஆகையால்தான், குறைவான அளவு வேலை செய்தவர்களுக்கும் அவர் முழுமையான கூலியைக் கொடுக்கினின்றார். ஒரு சிலரை நீதியோடும் – பேசிய அளவு கூலி, இன்னும் சிலரை இரக்கத்தோடும் – குறைவான வேலைக்கும் நிறைவான கூலி என்று அவர் கொடுக்கின்றார்.
இரக்கத்திற்கும் நீதிக்குமான ஒரு பிரச்சினை தீர்க்க முடியாத பிரச்சினை.
எடுத்துக்காட்டாக, தேர்வில் ஒரு மாணவன் பார்த்து எழுதுகிறான் என வைத்துக்கொள்வோம். அந்த மாணவன் ஏழைப் பின்புலத்திலிருந்து வருபவன். அவன் நல்ல மதிப்பெண் வாங்கினால்தான் அவன் விரும்புகிற அல்லது இலவசமான படிப்பு அவனுக்குக் கிடைக்கும். அவன் ஏழை என்பதற்காக அவன்மேல் இரக்கப்பட்டு அவனைப் பார்த்து எழுதுமாறு அனுமதித்தால் அவன் இன்னொரு மாணவனின் இடத்தைப் பறித்துக்கொள்வான் அல்லவா! அல்லது அவன் செய்த செயலுக்கான தண்டனை என்று நீதியோடு தண்டித்தால் அவன் தன் எதிர்காலத்தையே இழந்துவிடக் கூடும் அல்லவா!
‘சாலையில் பச்சை விளக்கு எரிகிறது. உன் வாகனம் செல்லலாம்!’ என்கிறது நீதி.
‘முதியவர் ஒருவர் சாலையைக் கடந்துகொண்டிருக்கின்றார். பொறு!’ என்கிறது இரக்கம்.
இதே பிரச்சினைதான் லூக்கா நற்செய்தி 13-இல் நாம் காணும் காணாமல் போன மகன் உவமையிலும் வருகின்றது. ‘சொத்தை எல்லாம் அழித்தவனுக்கு அல்லது குற்றம் செய்தவனுக்குத் தண்டனையே தவிர, மன்னிப்பு அல்ல!’ என்கிறது நீதி கேட்டு நிற்கும் அண்ணனின் மனது. ‘அவனாவது வந்தானே! சொத்து போனா பரவாயில்லை!’ என்கிறது இரக்கம் காட்டி நிற்கும் அப்பாவின் மனது. இரண்டு பேரின் விவாதமும் அவரவரின் தளத்திலிருந்து பார்த்தால் சரி.
இந்த உலகத்தில் இரக்கம் மட்டுமே காட்டிக்கொண்டிருந்தால் எந்தவொரு ஒழுங்கும் இல்லாமல் போய்விடுமே!
நீதியைக் கொண்டு மட்டுமே நடத்த முயன்றால் எல்லாரும் இயந்திரங்கள் ஆகிவிடுமே!
‘நான் நல்லவனாய் இருப்பதால் பொறாமையா?’ எனக் கேட்கிறார் நிலக்கிழார்.
‘நான் நீதியைக் கேட்பதால் உனக்குக் கோபமா?’ என்று அந்த வேலைக்காரர் கேட்டிருந்தால் நிலக்கிழார் என்ன பதில் அளிப்பார்?
காலையிலேயே வந்தவர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக வெளியேறுகிறார். மாலையில் வந்தவர் தன் தலைவர் இரக்கம் காட்டியதாக மகிழ்ச்சியோடு வெளியேறுகிறார்.
வாழ்க்கை இப்படித்தான் குண்டக்க மண்டக்க நம்மை நடத்துகிறது. ‘இது ஏன்?’ என்ற கேள்வியை நம்மால் கேட்க முடிவதில்லை.
நீதியையும் இரக்கத்தையும் தாண்டி வாழ்க்கை தன் வழியில் நம்மை இழுத்துக்கொண்டே செல்கிறது.
‘நான் நல்லவனாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?’ என்று கடவுள் என்னவோ கேட்டுக்கொண்டே இருக்கிறார்.
‘உன்னை நல்லவன் என்று யார் சொன்னா?’ என்ற நம் புலம்பலும் திராட்சைத் தோட்டத்திற்குள் தோன்றி மறைகிறது.
‘எங்களை யாரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்னும் வார்த்தைகள் நம் உள்ளத்தில் ஓர் உருவகத்தைத் தூண்டுகின்றன.
சின்ன வயசுல பாம்புக் கட்டம் விளையாடியிருக்கிறீர்களா? 1 முதல் 99 வரை உள்ள கட்டங்களில், சில கட்டங்களில் ஏணிகள், சில கட்டங்களில் பாம்புகள் என சிறிய, பெரிய அளவுகளில் இருக்கும். நாம் தாயக்கட்டை அல்லது சோளிகளை அல்லது புளியங்கொட்டைகளை வீசி நகர நகர, சில நேரங்களில் ஏணிகளில் உயர்வோம், சில நேரங்களில் பாம்பு கடி பட்டு கீழே வருவோம். 98-வது எண்ணில் ஒரு பாம்புத் தலை இருக்கும். அந்தப் பாம்பு கொத்தியது என்றால், கீழே 3-ஆம் எண்ணுக்கு நாம் வந்துவிடுவோம். அதே போல 5-ஆம் எண்ணில் ஓர் ஏணி இருக்கும். அதில் ஏறினால் நாம் 96-வது கட்டத்திற்கு உயர்ந்திடுவோம்.
இந்தக் கட்டங்களில் விளையாடும் நமக்கு, இத்தனை எண்தான் விழும் என்று நம்மால் கணிக்க முடியுமா? கைகளை மடக்கி ஏமாற்றி விளையாண்டால் ஒரு வேளை கணிக்கலாம். ஏணியில் ஏறிக்கொண்டே ஒருவன் இருக்கிறான். மற்றவன் பாம்புக் கடிபட்டு கீழே உள்ள கட்டங்களில் இருக்கிறான். ஏணியில் ஏறியவன் பாம்புக் கடிபட்டவனைப் பார்த்து, ‘நீ தோற்றுவிட்டாய்!’ என்று சொல்ல முடியுமா?
‘முடியாது’
‘சொல்லக் கூடாது’ என்றே நான் சொல்வேன்.
ஒருவன் ஏணியில் ஏறுவதும், இன்னொருவன் பாம்புக் கடி படுவதும் இயல்பாக விளையாட்டில் நடக்கக் கூடியது. அங்கே எதுவும் தகுதியைப் பொருத்து நடப்பதில்லை. ஒருவர் உயர்ந்த பதவியில் இருக்கிறார் என்றால், இன்னொருவர் உயர்ந்த பதவிக்கு வர முடியவில்லை என்றால், உயர்ந்த பதவியில் இருப்பவர் மற்றவரை விடத் தகுதி வாய்ந்தவர் என்பது பொருள் அல்ல. அவர் கட்டத்தில் ஏணி இருந்தது, இவர் கட்டத்தில் பாம்பு இருந்தது, அவ்வளவுதான்!
இன்று நான் என் அறையில் அமர்ந்து இதை கணிணியில் தட்டச்சு செய்கிறேன். என் அறைக்கு வெளியே இன்னொருவர் சுத்தம் செய்துகொண்டிருக்கிறார். அவரை விட நான் மேலானவனா? இல்லை. அவரை விட எனக்குத் தகுதி கூடுதலா? இல்லை. இருவரும் வாழ்வின் பாம்புக்கட்டத்தில் அவரவருடைய எண்களில் இருக்கிறோம். அவ்வளவுதான்! நான் பெருமை கொள்ளவோ, அவர் சிறுமை கொள்ளவோ இடமே இல்லை.
ஆனால், பல நேரங்களில் ஏணிகளில் நாம் உயரும்போது, வாழ்வில் வெற்றிபெறும்போது, உயர் பதவிகளை அடையும் போது, ‘இது என்னால் நடந்தது! இதற்கு நான் தகுதி வாய்ந்தவன்!’ எனக் கருதி இறுமாப்பு அல்லது ஆணவம் கொள்கிறோம்.
இது தவறு எனக் காட்டுகிறார் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் நிலக்கிழார்.
ஆறு மணிக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டவர் தன் தகுதியால் தனக்கு வேலை கிடைத்தது என நினைத்துப் பெருமிதம் கொள்கிறார்.
மாலை ஐந்து மணிக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டவரை யாரும் அதுவரை வேலைக்கு அமர்த்தவில்லை. அவரும் காத்துக்கொண்டேதான் இருந்தார். எந்த விதத்திலும் அவருடைய தகுதி குறையவில்லை.
காலையில் வேலைக்கு வந்தவர் ஏணியில் வந்தார். மாலையில் வேலைக்கு வந்தவர் பாம்பு கொத்திக் காத்துக் கிடந்தார்.
இங்கேதான், தோட்டக்காரர் கட்டங்களைப் புரட்டிப் போடுகின்றார். பாம்புகளை அழித்து விட்டு ஏணிகள் என்றும், ஏணிகளை அழித்துவிட்டு பாம்புகள் என்றும் வரைகின்றார். பாம்புகளால் கடிபட்டவர்கள் மகிழ்கின்றனர். ஏணிகளில் ஏறியவர்கள் முணுமுணுக்கிறார்கள். கட்டங்கள் புரட்டிப் போடப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. கட்டங்கள் என்றென்றும் அப்படியே இருக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில், ஏணிகளில் ஏறியது தங்களது தகுதியால் என அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். பாவம் அவர்கள்! அறியாமையில் இருக்கிறார்கள்!
இரண்டு கேள்விகள் எனக்கு:
(அ) என் இருத்தலை நான் என் தகுதியின் பலன் எனக் கருதி பெருமை கொள்வதை விடுத்து, என் இருத்தல் இயல்பாக நடக்கிறது என்ற வாழ்வியல் பாடத்தைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேனா?
(ஆ) யாரும் வேலைக்கு அமர்த்தாத, யாரும் கண்டுகொள்ளாத, யாரும் உயர்பதவி அளிக்காத மற்றவர்களைப் பார்க்கும்போது, என் மனநிலை இரக்கம் சார்ந்ததாக இருக்கிறதா? அல்லது அவர்கள் சோம்பேறிகள், தகுதியற்றவர்கள் என நான் அவர்களைப் பழிக்கிறேனா?
பழித்தல் தவறு. பெருமிதம் கொள்தல் தவறு.
எது சரி?
அடுத்தவர் என்னைப் பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்கு நல்லவனாய் இருத்தலே சிறப்பு.
‘தோழா! நான் நல்லவனாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?’ என்று கேட்கிறார் நிலக்கிழார்.
‘நீ இருக்கிறவன்.நான் இல்லாதவன். நீ இடுகிறவன். நான் நீட்டுகிறவன்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டே மௌனமாக வெளியேறுகின்றான் பணியாளன்.
‘ஒரு மணி நேரம் வேலை செஞ்ச எங்களுக்கும் அதே கூலிதான்!’ என்று கேலி பேசுகிறான் உடன் ஊர்க்காரன்.
‘கஷ்டப்படாம வந்த காசு கையில ஒட்டாது’ என்று ஒப்புக்கு ஆறுதல் சொல்லிக் கொள்கிறான் இவன்.
இவன் இன்றும் நம்மிடையே இருக்கிறான். சில நேரங்களில் அவன் நீங்களாகவும் நானாகவும் இருக்கிறான்.
நிற்க.
இரக்கத்துக்கும் நீதிக்குமான போராட்டத்தின் நடுவே தன் வாழ்வை நகர்த்தத் தெரிந்தவரே எதிர்நோக்கின் திருப்பயணி. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 178).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: