இன்றைய இறைமொழி
புதன், 24 ஜூலை 2024
பொதுக்காலம் 16-ஆம் வாரம் – புதன்
எரேமியா 1:1, 4-10. மத்தேயு 13:1-9
ஒவ்வொரு நிலத்திலும் விதை!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ‘விதைப்பவர் எடுத்துக்காட்டை’ வாசிக்கிறோம். ஒத்தமைவு நற்செய்திகளில் (மாற்கு, மத்தேயு, லூக்கா) மட்டும் காணப்படுகிற இந்த எடுத்துக்காட்டை மூன்று நற்செய்தியாளர்களும் வௌ;வேறு விதமாக பதிவு செய்கிறார்கள். லூக்கா நற்செய்தியில் நல்ல நிலம் நூறு மடங்கு பலன் கொடுக்கிறது. மாற்கு நற்செய்தியில் முப்பது, அறுபது, நூறு என உள்ளது. மத்தேயு நற்செய்தியாளர் வரிசையை மாற்றி நூறு, அறுபது, முப்பது என எழுதுகிறார்.
‘விதைப்பவர் விதைக்கச் செல்கிறார்!’ – விதைப்பவர் வீட்டிற்குள்ளேயே அமர்ந்திருக்கக் கூடாது. அவர் விதைக்கச் செல்ல வேண்டும். வீட்டிற்குள் அவரால் விதைக்க இயலாது. வயலுக்கு அல்லது நிலத்திற்குச் சென்று விதைக்க வேண்டும். ‘நான் போகல!’ ‘நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்!’ என்று அவர் சொல்ல இயலாது. அவர் விரும்புகிறாரோ, இல்லையோ, விதைக்கச் சென்றே ஆக வேண்டும் அவர்!
தான் விதைக்கிற விதையை நல்ல நிலத்துக்கு மட்டும் எனச் சுருக்கிவிடவில்லை விதைப்பவர்! மாறாக, விதையை அள்ளித் தெளிக்கிறார். எண்ணிப் பார்த்து அல்ல, மாறாக, அள்ளி வீசி விதைக்கிறார். தலைவரின் நிறைவை இது காட்டுகிறது.
விதைகள் நான்கு வகைகளான நிலங்களில் அல்லது மண்ணில் விழுகின்றன: வழியோரம், பாறைப் பகுதிகள், முட்செடிகள், நல்ல நிலம்.
மனிதர்களும் கால்நடைகளும் நடந்து போகிற வழி இறுகிப்போகிறது. நிலம் நுழைவதற்கு ‘வழியில்லாமல்’ போக, பறவைகள் விதைகளைத் தின்றுவிடுகின்றன. கடின உள்ளம், பிடிவாத உள்ளம் இறைவார்த்தையை ஏற்றுக்கொள்வதில்லை.
பாறைப்பகுதி மண் கலந்தும் கலவாமலும் உள்ளது. அங்கே விழுகிற விதை வேகமாக வளர்கிறது. அதே வேளையில் வேகமாக மடிந்துவிடுகிறது. தொடக்கத்தில் வேகம் மற்றும் ஆர்வத்தைக் காட்டுகிற சிலர் நாள்கள் செல்லச் செல்ல வேலையை நிறுத்திக்கொள்கிறார்கள்.
முட்செடிகளுக்குள் நடுவே விழுகிற விதைகள் வளர்கின்றன. ஆனால், வளர்ச்சிக்கு ஏற்ற சூழல் இல்லை. முட்செடிகள் நெருக்கத் தொடங்குகின்றன. தவறான நட்புவட்டம், பிறழ்வுபட்ட நெறிமுறைகளால் நாம் சில நேரங்களில் நெருக்கப்படுகிறோம்.
நல்ல நிலத்தில் விளைகிற விதைகள் நூறு மடங்கு பலன் கொடுக்கின்றன. பலன் கொடுப்பது முக்கியம் மட்டுமல்ல. தொடர்பலன் கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அறுபது, முப்பது எனக் குறைந்துவிடும் அபாயம் இருக்கிறது.
சில பாடங்கள்:
(அ) நாம் அனைவருமே விதைப்பவர்கள். ‘விதைப்பவர்கள் விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.’ அன்றாடம் நம்மைவிட்டு வெளியே செல்ல வேண்டும்.
(ஆ) உவமையில் காணும் விதைப்பவர்போல நாம் தாராளமாக இருத்தல் வேண்டும். நிறைவு மனப்பான்மை வளர வேண்டும்.
(இ) விதை தன்னகத்தே ஆற்றல் கொண்டுள்ளது. அந்த ஆற்றல் முழுமையான பலன் தருவதற்கு அதை ஏற்கும் தளம் நல்லதாக இருத்தல் வேண்டும். கடின உள்ளம், ஆழமற்ற உள்ளம், நெருக்கடிநிறை உள்ளம் விதைகள் பலன் தருதலைத் தடை செய்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எரேமியாவின் அழைப்பு நிகழ்வை வாசிக்கிறோம். ஆண்டவராகிய கடவுள் தம் பணிக்காக அவரை அழைக்கிறார். ஒவ்வொரு நிலத்திலும் கடவுள் தன் விதையை விதைக்கிறார். விதைகளை விதைக்கின்ற அவர் அவற்றோடு நெருக்கமான உறவிலும் நிற்கிறார்.
நம் அனைவருக்குமே இரண்டு வாழ்க்கைகள் இருக்கின்றன. முதல் வாழ்க்கை நாம் பிறந்த அன்று தொடங்குகிறது. இரண்டாவது வாழ்க்கை நம் அழைப்பை உணர்ந்து நாளில் தொடங்குகிறது. ஒவ்வொரு நிலத்திலும் விதை உண்டு! நாம் எந்த நிலமாக இருந்தாலும் கடவுள் தெளிக்கும் விதை நம்மேல் விழுகிறது.
நிற்க.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் ஒவ்வொரு நிலத்திலும் விதைக்கிறார். தன் கைகளை அவர் சுருக்கிக்கொள்வதில்லை. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 155).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: