இன்றைய இறைமொழி
புதன், 25 செப்டம்பர் ’24
பொதுக்காலம் 25-ஆம் வாரம், புதன்
நீதிமொழிகள் 30:5-9. லூக்கா 9:1-6
சமநிலை தழுவுதல்
கடவுளோடும் பிறரோடும் இந்த உலகத்தோடும் நாம் கொள்ளும் உறவில் சமநிலை அவசியம் என்பதை விவிலியம் எடுத்துரைக்கிறது. கடவுளைச் சார்ந்திருத்தல் ஒருபக்கம், பொறுப்பான வாழ்வு மறுபக்கம், கடவுள் தருகிற கொடை ஒரு பக்கம், அதைத் தகுதியாக்கும் எளிமை மறுபக்கம் என சமநிலையைத் தழுவிக்கொள்ள அழைக்கின்றன இன்றைய வாசகங்கள்.
(அ) தேவைகளுக்கும் விருப்பங்களுக்குமான சமநிலை: நிறைவு மனப்பாங்குடன் வாழ்தல்
வரம் இரண்டு கேட்கிறேன் எனக் கடவுள் முன்னிலையில் நிற்கிற ஆசிரியர் (முதல் வாசகம்), ‘எனக்குச் செல்வம் வேண்டாம். வறுமையும் வேண்டாம். எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்!’ என இறைவேண்டல் செய்கிறார். செல்வம் இறுமாப்புக்கு இட்டுச் செல்லும், வறுமை மனச்சோர்வுக்கு இட்டுச் செல்லும். இரண்டுக்கும் இடையேயான சமநிலையே மேன்மையானது. அன்றாட உணவைக் கொண்டு நி;றைவு பெற வேண்டும் என்பதே ஆசிரியரின் ஆர்வமாக இருக்கிறது. ‘இன்னும் வேண்டும்! இன்னும் வேண்டும்!’ என்று ஆசைகளைக் கூட்டிக்கொண்டே இருப்பதற்குப் பதிலாக கடவுள் நமக்குத் தேவையானதைத் தருவார் என்று அமைதி காக்க வேண்டும் என்பது ஆசிரியரின் பாடம்.
பொருள்சார் தேடல்கள் எல்லையில்லாத நிலையில் நீண்டுகொண்டே செல்கின்றன. நம் கைகளில் இருப்பவற்றை நாம் பார்த்து மகிழ்ச்சி அடைவதற்கான நேரமும் வாய்ப்பும் நமக்கு இல்லை.
(ஆ) பணிக்கும் எளிமைக்குமான சமநிலை: கடவுளின் பராமரிப்பில் பற்றுறுதி கொள்தல்
தம் சீடர்களைப் பணி அனுபவத்துக்காக அனுப்புகிறார் இயேசு. ஒரு பக்கம் அவர்கள் தங்கள் பணிகளைச் செய்வதற்கான ஆற்றலை வழங்கினாலும், இன்னொரு பக்கம் அவர்கள் எதையும் தங்களோடு எடுத்துச்செல்லக்கூடாது என பணிக்கிறார். கடவுளின் பராமரிப்பின்மேல் நம்பிக்கை கொள்வதும், மற்றவர்களின் விருந்தோம்பலை ஏற்றுக்கொள்வதுமே அவர்கள் பெற வேண்டிய மனப்பாங்கு ஆகும்.
கடவுள் நமக்கு வழங்கியிருக்கும் திறன்கள், திறமைகள், ஆற்றல்கள் ஒருபோதும் தன்மைய எண்ணத்திற்கு இட்டுச் செல்லக்கூடாது. அவருடைய தொடர் பராமரிப்பில் பற்றுறுதி கொள்தல் அவசியம்.
(இ) இறைபக்திக்கும் அறநெறி வாழ்வுக்குமான சமநிலை: நம்பிக்கையின் வழி வாழ்தல்
இறைவேண்டலின் முதல் பகுதியாக, ‘வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச் செய்யும்’ என்கிறார் ஆசிரியர் (முதல் வாசகம்). நாம் இறைபக்தி கொண்டிருந்தால் மட்டும் போதாது. பொறுப்பான அறநெறி வாழ்வும் அவசியம். கடவுளை நன்றாக வணங்கிவிட்டு என் உள்ளத்தில் வஞ்சனையும் பொய்யும் சுமந்தால், என் பக்தியால் எனக்கு என்ன பயன்? பக்தியோடு கூடிய பொறுப்புணர்வு வாழ்வுக்கு அவசியம். சீடர்கள் தாங்கள் பெற்றிருக்கிற திறன்களை மட்டும் நம்பாமல், மற்றவர்கள் காட்டுகிற விருந்தோம்பலையும் ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். அவர்களிடமிருந்து வருகிற எதிர்ப்புகளுக்கும் பதிலிறுப்பு செய்ய வேண்டும்.
நம் வாழ்வு, பணி, குடும்பம் ஆகியவற்றில் சமநிலை போற்றுதல் நலம். ‘மதிப்பீடு நடுநிலையில் இருக்கிறது’ (‘Virtue stands in the middle’) என்கிறார் அரிஸ்டாட்டில். நடுநிலை பற்றுகிறவர் எந்தச் சூழலிலும் தன் மனத்தின் அமைதியையும் மகிழ்ச்சியையும் காத்துக்கொள்வார். செல்வத்தால் திளைக்கவும் மாட்டார், வறுமையால் வாட்டம் அடையவும் மாட்டார்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தங்கள் வாழ்வின் சமநிலையைக் காத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 208)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: