இன்றைய இறைமொழி
புதன், 26 ஜூன் 2024
பொதுக்காலம் 12-ஆம் வாரம் – புதன்
2 அரசர்கள் 22:8-13. 23:1-3. மத்தேயு 7:15-20
போலிகள் களைதல்
சின்ன வயசுல சினிமா பார்க்கும்போது நம் கண்முன் நடக்கிற சண்டை காட்சிகள் நமக்கு பிரமாண்டமானதாகத் தெரியும். ‘இது எப்படி?’ என்று கேட்கும்போது பெரியவர்கள் நமக்குக் கற்றுத் தந்த சொல்லாடல், ‘இது டூப்’ என்பது. ‘ஒன்றைப் போல இன்னொன்று இருப்பது’ டூப். கரடி போல, கதைமாந்தர்கள்போல, என நிறைய டூப்கள் உண்டு. வளர வளர நாம் பயன்படுத்தும் பொருள்கள் சிலவும் டூப்ளிகேட் எனக் கண்டுபிடிக்கிறோம். ஆடைகள், மின்சாதனங்கள், பயன்பாட்டுப் பொருள்கள், மருந்துகள், உணவு என பலவற்றில் டூப்ளிகேட்கள் வருகின்றன.
இந்த டூப்கள் அல்லது டூப்ளிகேட்கள் (போலிகள்) நான்கு பண்புகளைக் கொண்டிருக்கின்றன: (அ) இவற்றைச் செய்வது எளிது. ஏனெனில், ஏற்கெனவே ஒன்று இருப்பதால் இதை மற்றவர் ‘இமிடேட்’ (பிரதி எடுத்தால்) செய்தால் போதும். (ஆ) இவை தாங்கள் வெளியில் அடையாளப்படுத்துவது ஒன்று, உள்ளுக்குள் இயல்பாக இருப்பது வேறொன்று. (இ) இவற்றின் நோக்கம் வேலைகளை எளிதாகச் செய்வது – சரியாகச் செய்வது அல்ல. (ஈ) இவற்றின் பயன்பாட்டுக் காலம் – உண்மையானவற்றோடு ஒப்பிடும்போது – மிகவும் குறைவு.
நற்செய்தி வாசகத்தில், ‘போலி இறைவாக்கினர்கள்’ பற்றி எச்சரிக்கிறார் இயேசு. மேற்காணும் நான்கு பண்புகளோடு இணைத்துப் பார்த்தால், (அ) போலி இறைவாக்கினர்கள் உண்மையான இறைவாக்கினர்களை ‘இமிடேட்’ செய்கிறார்கள் – அதாவது, தாங்களும் கடவுளால் அனுப்பப்பட்டதாகச் சொல்கிறார்கள். (ஆ) இவர்கள் வெளிப்புறத்தில் கடவுளின் சொற்களைச் சொல்வதுபோல இருந்தாலும் உள்ளத்திலிருக்கும் தங்கள் சொற்களையே சொல்கிறார்கள். (இ) மக்கள் விரும்புவதைச் சொல்கிறார்களே தவிர, சரியானதை அவர்கள் சொல்வதில்லை. (ஈ) இவர்கள் நீடித்து நிலைப்பவர்கள் அல்லர்.
போலி இறைவாக்கினர்களை அவர்களுடைய கனிகளை (செயல்களை) கொண்டு அடையாளப்படுத்த முடியும் எனச் சொல்கிற இயேசு, ‘மரம்-கனி’ உருவகத்தை வழங்குகிறார். கனி என்பது மரத்தின் நீட்சியே. மரத்தின் இயல்பையே அது கொண்டிருக்க வேண்டும்.
இன்றைய வாசகத்தை நம் வாழ்வோடு பொருத்திப் பார்ப்போம்:
(அ) போலிகள் ஏமாற்றுவதற்குப் பயன்படுகின்றன. நாம் மற்றவர்களால் ஏமாற்றப்பட்டோம் என்றால் அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், நாம் பல நேரங்களில் மற்றவர்களை ஏமாற்றுகிறோம். நம் சொற்களும் செயல்களும் பொய்யுரைக்காமல், மற்றவர்களை ஏமாற்றாமல் பார்த்துக்கொள்வது நலம். சொற்களுக்கும் செயல்களுக்குமான இடைவெளி குறைய வேண்டும்.
(ஆ) நம் வெளிப்புறச் செயல்கள் என்பவை நம் உள்ளாந்த இயல்பின் வெளிப்பாடாக இருக்கின்றன. இயல்பு மாற்றமே செயல்கள் மாற்றத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது.
(இ) போலிகளை அடையாளம் காணக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆன்மிகத் தளத்திலும், அரசியலிலும், சமூகத்திலும் போலிப் போதகர்களை, தலைவர்களை, வழிகாட்டிகளைக் காண்கிறோம். அவர்கள் மக்களின் நலம் விரும்புவதுபோலத் தெரிந்தாலும் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் அவர்கள் தாங்கள் விரும்புவதையே, தங்களுக்கு உகந்ததையே செய்கிறார்கள். கூர்ந்து கவனித்தல் என்னும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நிற்க.
இன்றைய முதல் வாசகத்தில், திருச்சட்டத்தின் ஏட்டுச்சுருள் எருசலேம் ஆலயத்தில் கண்டுபிடிக்கப்படுகிறது. கடவுளிடமிருந்து வரும் அறிகுறி என இதைக் கருதுகிற அரசர் யோசியா மக்களை மறுமலர்ச்சிக்குக் கொண்டு செல்கிறார். ஆன்மிக மறுமலர்ச்சியே சமூக அல்லது அரசியல் மறுமலர்ச்சி என அறிந்துகொள்கிறார். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 134).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: