இன்றைய இறைமொழி
புதன், 28 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 21-ஆம் வாரம் – புதன்
புனித அகுஸ்தினார், நினைவு
2 தெசலோனிக்கர் 3:6-10, 16-18. மத்தேயு 23:27-32
உழைப்பும் ஒழுக்கமும்
இன்றைய நற்செய்தி வாசகத்தில், மூன்றாவது நாளாகத் தொடர்ந்து! – மறைநூல் அறிஞர்களையும் சாடுகிறார் இயேசு. அவர்களுடைய வெளிவேடத்தனத்தைக் கடிந்துகொள்கிற இயேசு, அவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்போல இருப்பதாக எச்சரிக்கிறார்.
முதல் வாசகத்தை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். இவ்வாசகம் இன்று நான் நினைவுகூர்கிற புனித அகுஸ்தினார் பற்றிச் சிந்திக்கவும் நம்மைத் தூண்டுகிறது.
‘முறைமை தவறி நடக்கும்’ குழுமத்தாரிடமிருந்து விலகி நிற்குமாறு தம் குழுமத்துக்கு அறிவுரை வழங்குகிற பவுல், அவரும் அவருடைய உடனுழைப்பாளர்களும் காட்டிய முன்மாதிரியை எடுத்துரைக்கிறார்: ‘உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித் திரியவில்லை. எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி இராப் பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம்.’ உழைப்பின் மாண்பு பற்றியும், மற்றவர்களுக்கு எந்த நிலையிலும் சுமையாக இராமல் நடந்துகொள்வது பற்றியும் அறிவுறுத்துகிறார் பவுல்.
வேலை அல்லது உழைப்பு என்பது நம் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கான வழி மட்டுமல்ல, மாறாக, சமூகத்துக்கு நாம் அளிக்கும் பங்களிப்புக்கான வழி என்கிறார் பவுல். சோம்பித் திரிதல் என்பது தனிப்பட்ட பொறுப்புணர்வுப் பிறழ்வு மட்டுமல்ல, மாறாக, கிறிஸ்தவச் சான்று வாழ்வுக்கு முரணானது ஆகும். ‘உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது!’ என்னும் பவுலின் சொற்கள், உழைக்கிற ஒவ்வொருவரும் குழமத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறார் என்று நினைவூட்டுகின்றன.
வேலை, உழைப்பு, பொறுப்பு பற்றிய நம் இன்றைய புரிதல் என்ன? பல நேரங்களில் உழைப்பு என்பது தவிர்க்கமுடியாத தீமை என்றும், பொருளீட்டுவதற்கான வழி என்றும் கருதப்படுகிறது. உழைப்பின் வழியாக நாம் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் பணிவிடை ஆற்றுகிறோம் என்பது பவுலின் புரிதல். நம் அன்றாடச் செயல்பாடுகள் வழியாக நாம் கடவுளை மாட்சிப்படுத்துகிறோம், நம் குடும்பத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் உயர்த்துகிறோம். சமூகங்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறோம்.
உழைப்பின் வழியாக நாம் ஒருவர் மற்றவரைத் தாங்கி நிற்கிறோம். உழைப்பையும் ஒழுக்கத்தையும் நாம் மேன்மையானவை எனக் கருதுகிறோமா? தேவையில் இருப்பவர்களுக்குத் துணையாக நிற்கும் பொருட்டு நம் பொறுப்புணர்வை ஏற்று நடக்கிறோமா?
இறுதியில், பவுல், ‘அமைதியை அருளும் ஆண்டவர்தாமே எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்கு அமைதி அளிப்பாராக! ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக!’ என வாழ்த்துகிறார். உழைப்பு மற்றும் ஒழுக்கத்தின் இலக்கு அமைதியைக் கண்டடைவதே.
இன்று நாம் நினைவுகூர்கிற புனித அகுஸ்தினார் ‘முறைமை தவறி நடந்த’ நிலையிலிருந்து தன்னையே மாற்றிக்கொண்டவர். இவருடைய உழைப்பும் ஒழுக்கமும் பாராட்டுதற்குரியவை. ‘ஒப்புகைகள்,’ ‘கடவுளின் நகரம்’ என்னும் இவருடைய படைப்புகளும், மற்ற எழுத்துகளும் இன்றைய இறையியல், உளவியல், மெய்யியல், சமூகவியல் மற்றும் மானுடவியல்மேல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவர் எக்காலத்துக்கும் எல்லா இடத்துக்கும் எல்லா நபர்களுக்கும் பொருந்துகிறார்.
நிற்க.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் தங்கள் அன்றாடக் கடமைகளை அமைதியுடனும், அக்கறையுடனும், ஒழுங்குடனும் நிறைவேற்றுகிறார்கள். தாங்கள் செய்யும் யாவற்றிலும் கடவுளை மாட்சிப்படுத்துவதோடு, தங்களையும் தங்கள் சமூகத்தையும் உயர்த்துகிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 184).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: