இன்றைய இறைமொழி
புதன், 31 ஜூலை 2024
பொதுக்காலம் 17-ஆம் வாரம் – புதன்
லொயோலா நகர் புனித இஞ்ஞாசியார், நினைவு
1 கொரிந்தியர் 10:31-11:1. லூக்கா 14:25-33
கடவுளின் மாட்சிக்காகவே!
இயேசு சபையின் நிறுவுனரும், ‘ஆன்மீகப் பயிற்சிகள்’ என்னும் ஆன்மீகப் பெட்டகத்தை திருஅவைக்கு வழங்கியவருமான, இனிகோ என்னும் லொயோலா நகர் புனித இஞ்ஞாசியாரின் திருநாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். இந்தப் புனிதரைப் பற்றி எண்ணும்போது என்னுள் எழும் சில கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறேன்.
நான் என்னையே வழிநடத்த இயலாதபோது எனக்கு அடுத்திருப்பவரை வழிநடத்த முயற்சி செய்தல் கூடாது. தன்னாளுகை அல்லது தன்னை வெல்தல் என்பது இனிகோவின் எழுத்துக்களில் அதிகம் தெரியக்கூடிய கருத்துரு. இவர் ஒரு படைவீரராய் இருந்ததால், வெற்றி கொள்தல் என்பதன் பொருள் இவருக்கு நன்றாகவே தெரிந்தது. என் கட்டுக்குள் அடங்காத எதுவும் என் ஆற்றலை விரயமாக்கிக்கொண்டே இருக்கும். அது என் உடலின் ஆற்றலை எடுப்பதோடு, நிறைய எண்ணங்களால் மனத்தை நிரப்பி என் கவனத்தைச் சிதறடிக்கும். இன்று, நான் என்னில் ஆளுகை செய்ய வேண்டியது எது? என் ஆற்றல் விரயமாகும் இடம் எது?
அவசரம் அறவே கூடாது. இனிகோ ஒருபோதும் தன்னுடைய உணர்வுகள் அல்லது உணர்ச்சிகள் அடிப்படையில் செயல்படவே இல்லை. எல்லாவற்றையும் தன் அறிவுக்கேள்விக்கு உட்படுத்தி, பார்வையை அகலப்படுத்தி, நிறுத்தி, நிதானமாக முடிவு செய்தார். நான் செய்கின்ற எல்லாவற்றிலும், ‘நான் ஏன் இதைச் செய்கிறேன்?’ என்ற கேள்வியே நிதானத்தின் தொடக்கம். இன்று நான் அவசரப்பட்டு முடிவெடுத்து பதறி நிற்கும் நிலைகள் இருக்கின்றனவா?
தலைமைத்துவம் என்பது நான் மற்றவர்மேல் ஏற்படுத்தும் தாக்கம். சாதாரண படைவீரரான இவர், கல்லூரிப் பேராசிரியரான சவேரியாருக்குச் சவால் விடுகின்றார். எப்படி? உறவால். நட்பால். தொடர்புகள் இல்லாமல் வாழ்க்கை இயலாது என்பதை அறிந்தவர் இனிகோ. தன்னுடைய சபையைச் சார்ந்தவர்கள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும், அவர்களுடன் கடிதத் தொடர்பில் இருந்தார். இதுவே, தொடர்புகளுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இன்று நான் என் தொடர்புகளை எப்படி முதன்மைப்படுத்துகிறேன்?
‘எக்ஸாமென்’ (examen) அல்லது ‘ஆன்ம சோதனை’ என்பது இவருடைய ஆன்மீகப் பயிற்சிகளில் ஒன்று. மதிய உணவுக்கு முன்னும், இரவு உணவுக்குப் பின்னும் தன்னாய்வு செய்வது. என்னுடைய உடல், மனம், இதயம், எண்ணம், ஏக்கம், உணர்வு, தாக்கம் என அனைத்தையும் ஆய்வு செய்வது. நேரம் கடக்க கடக்க நானும் கடந்தால் நான் மிருகம். ஆனால், கடக்கும் நேரத்திலும் நான் நிற்க முடிந்து, பின்னால் சென்று யோசிக்க முடிந்தால் நான் மனிதன். தன்னாய்வு செய்யும் நேரம் என்னையே புதுப்பிக்கும் நேரம். நான் எத்தனை முறை தன்னாய்வு செய்கிறேன் ஒரு நாளில்?
‘தெரிவு செய்தல்’ (discernment) என்பது இவருடைய இன்னொரு பயிற்சி. இதை பவுல் இப்படி எழுதுகிறார்: ‘அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். தீமையை விலக்குங்கள்’ (காண். 1 தெச 5:21-22). இதுதான் தெரிவு செய்தல். என் வாழ்வின் முக்கிய முடிவுகள் உள்பட, எல்லா நேரங்களிலும் நான் தெரிவு செய்தல் அவசியம். இன்று நான் தெரிவு செய்கின்றேனா? அல்லது வருவதை அப்படியே ஏற்றுக்கொண்டு அலைக்கழிக்கப்படுகிறேனா?
வாழ்க்கையை அன்பு செய்பவர்கள் நேரத்தை வீணாக்கமாட்டார்கள். ஏனெனில், வாழ்க்கை என்ற ஓவியம் வரையப்பட்டிருப்பதே நேரம் என்ற துணியில்தான். தன் வாழ்வின் எல்லா நேரங்களையும் கற்றல், செபித்தல், கடிதம் எழுதுதல், என எதையாவது செய்துகொண்டே இருந்தார். அவரின் செயல்கள் அவருடைய வாழ்வையும், மற்றவர்களின் வாழ்வையும் புதுப்பித்தன. என் ஓய்வு அல்ல, என் செயலே நான் யார் என்பதை எனக்கும் மற்றவர்களுக்கும் உணர்த்தும். இன்று என் நேர மேலாண்மை எப்படி இருக்கிறது?
‘நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள்’ என கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகிறார் பவுல் (முதல் வாசகம்). இப்படி வாழும்போது இயல்பாகவே தன்னலம், தன்மையம், தற்சார்பு என்னும் நிலைகளிலிருந்து நாம் இறைவன் நோக்கி நகரத் தொடங்குகிறோம். போட்டி, பொறாமை, ஒப்பீடு போன்றவிற்றிலிருந்து விடுபடத் தொடங்குகிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘கோபுரம் கட்டும் நபர்,’ ‘போருக்குச் செல்லும் அரசர்’ எடுத்துக்காட்டுகள் வழியாக, திட்டமிடுதலும் திறன்கள் அறிதலும் சீடத்துவத்துக்கான படிநிலைகள் எனக் கற்பிக்கிறார் இயேசு. சீடத்துவம் என்பது ஆன்மீகம் சார்ந்த தேடல் அல்ல. மாறாக, அது வாழ்க்கையின் மேலாண்மை சார்ந்தது.
நிற்க.
வாழ்வின் திருப்பயணம் நமக்கு வெளியே பயணம் செய்வதில் அல்ல, மாறாக, நமக்கு உள்ளே பயணம் செய்வதில் உள்ளது என அறிந்திருக்கிறார் ‘எதிர்நோக்கின் திருப்பயணி.’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 161).
இயேசு சபையைச் சார்ந்த அனைவருக்கும், குறிப்பாக நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் திருநாள் வாழ்த்துகள்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: