இன்றைய இறைமொழி
புதன், 4 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 22-ஆம் வாரம், புதன்
1 கொரிந்தியர் 3:1-9. லூக்கா 4:38-44
கடவுளின் உடனுழைப்பாளர்கள்
கடவுள் முன்னிலையில் நான் யார்? கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவு என்ன? நாம் செய்யும் வேலைகளுக்கான பரிசை எதிர்பார்க்கிறோமா? இன்றைய வாசகங்கள் கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவின் தான்மையை (அடையாளத்தை) மறுவரையறை செய்வதோடு, கடவுளோடு உடனுழைக்கும் பணியை நாம் செய்யுமாறு நம்மை அழைக்கின்றன. கடவுளின் அரசை இந்த உலகில் கட்டியெழுப்பும் பணியைப் பெற்றிருக்கிற நாம் அவருடைய உடனுழைப்பாளர்களாக இருக்கிறோம். கடவுளோடு இணைந்து உழைப்பதன் தன்மையையும் நம் உழைப்பு அவருடைய திட்டத்தில் அடங்கியுள்ள நிலையையும் எடுத்துரைக்கிறது.
(அ) கடவுளுடைய பணியில் ஒன்றிப்பு
இன்றைய முதல் வாசகத்தில், பவுல், அப்பொல்லோ எனப் பிரிந்து நின்ற கொரிந்து நகர மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார் பவுல். தானும் அப்பொல்லோவும் கடவுளின் நற்செய்தியை அவர்களுக்குக் கொண்டுவந்த பணியாளர்கள் மட்டுமே என நினைவூட்டுகிறார். கடவுள் ஒருவரே வளர்ச்சியைத் தருகிறார். திருஅவையில் நாம் பல்வேறு நிலைகளில் இருந்தாலும், பல்வேறு அருள்வரங்களையும் கொடைகளையும் பெற்றிருந்தாலும், இவை அனைத்தும் ஒரே இலக்கு நோக்கிச் செயலாற்றுகின்றன: கடவுளுடைய அரசாட்சியின் வளர்ச்சி.
கடவுளின் உடனுழைப்பாளர்களாக நாம் ஒன்றிப்பை வளர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தனிப்பட்ட அளவில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவி செய்வதைப் பாராட்ட வேண்டும். நாம் நம்பிக்கையின் விதைகளை விதைத்தாலும், தண்ணீர் ஊற்றினாலும், அவற்றை வளரச் செய்பவர் ஆண்டவரே என்பதை உணர வேண்டும். இத்தகைய ஒன்றிப்பு நம்மில் வளரும்போது பிரிவினை எண்ணங்களும் செயல்பாடுகளைவும் மறைகின்றன. நம் வேறுபாடுகளுக்கு நடுவில் கடவுள் தாமே செயலாற்றுகிறார் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம்.
(ஆ) பரிவு நிறைந்த பணி
சீமோனின் மாமியாரையும் நோயுற்ற பலரையும் நலமாக்குகிறார் இயேசு (நற்செய்தி வாசகம்). நோயுற்றோருக்கு நலம் தருதல், பேய்களை ஓட்டுதல் என்னும் நீ;ண்ட பணிகளுக்குப் பின்னர் தனிமையான இடத்திற்குச் செல்கிறார் இயேசு. மக்கள் அவரைத் தேடி வருகிறார்கள். அவர்களுக்குப் பரிவு காட்டுகிற இயேசு தம் பணியைத் தொடர்கிறார்.
கடவுளுடைய உடனுழைப்பாளர்கள் பரிவுநிறைந்தவர்களாக இருக்கிறார்கள். பணிச்சுமை தங்களை அழுத்தினாலும் பணியில் அர்ப்பணத்தோடு இருக்கிறார்கள். மற்றவர்களின் தேவையை முன்நிறுத்துகின்ற தற்கையளிப்பு நிறை அன்பை இயேசு நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். இயேசுவைப் பின்பற்றுகிற நாம், நம்மைச் சுற்றிருயிருப்பவர்களுக்கு நலமும் நம்பிக்கையும் தர வேண்டும். நம் பணிவிடைச் செயல்கள் வழியாக நாம் கடவுளின் மீட்புத் திட்டத்தில் பங்கேற்கிறோம்.
(இ) கடவுளின் திட்டமும் நேரமும்
பவுலைப் பொருத்தவரையில் நட்டவரும் நீர் பாய்ச்சியவரும் அல்ல, மாறாக, வளரச் செய்கிற கடவுளே முதன்மையானவர். இந்தப் புரிதல் நமக்கு தாழ்ச்சியைக் கற்றுத் தருகிறது. நம் பணிகள் முதன்மையானவை என்றாலும், பணிகளின் விளைவை ஏற்படுத்துகிறவர் கடவுளே. கடவுளின் பணிக்குப் பிரமாணிக்கமாக இருப்பதே நமக்கு அவசியம். கடவுள் தமக்குரிய நேரத்தில் தம் திட்டத்தை நிறைவேற்றுகிறார்.
கடவுளுடைய திட்டத்திற்கும் நேரத்திற்கும் நாம் நம் பணியை விட்டுவிடம்போது கவலை மற்றும் சோர்விலிருந்து நாம் விடுதலை பெறுகிறோம். நம் பணி உடனடியான விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்ற வருத்தம் நமக்கு வருவதில்லை. கடவுள் நம் பணியை அதற்கான நேரத்தில் வெற்றிபெறச் செய்வார் என்னும் நம்பிக்கையில் நாம் விடாமுயற்சியோடு பணி செய்கிறோம்.
நிற்க.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் தாங்கள் கடவுளின் உடனுழைப்பாளர்கள் என்பதை உணர்ந்தவர்களாய், ஒன்றிப்பு, பரிவு, பற்றுறுதியோடு பணி செய்து, இந்த உலகுக்கு நலமும் நம்பிக்கையும் தருகிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 190).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: