• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. புதன், 5 ஜூன் 2024. எந்நாளும் வாழ்வு

Wednesday, June 5, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
புதன், 5 ஜூன் 2024
பொதுக்காலம் 9-ஆம் வாரம் – புதன்
1 திமொத்தேயு 1:1-3, 6-12. மாற்கு 12:18-27

 

எந்நாளும் வாழ்வு

 

‘இறப்பிலும் வாழ்வு தொடர்கிறது. ஏனெனில், கடவுள் நிரந்தரமானவர்.’

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் சதுசேயர்கள் இயேசுவிடம் விவாதிக்கிறார்கள். தாவீது, சாலமோன் அரசர்களின் ஆட்சிக் காலத்தில் தலைமைக்குருவாக இருந்த சாதோக்கின் வழிமரபினராகத் தங்களைக் கருதுகிற இக்குழுவினர் அரசியலிலும் சமூக நிலையிலும் மேம்பட்டு நின்றார்கள். எபிரேய விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களை மட்டுமே ஏற்றுக்கொண்டவர்களாகவும், உயிர்ப்பு, வானதூதர்கள், இறப்புக்குப் பின் வாழ்வு போன்றவற்றை மறுப்பவர்களாகவும் இருந்தனர்.

 

இயேசுவிடம் அவர்கள் முன்மொழியும் நிகழ்வு நேரிடையாக திருமணம் சார்ந்ததாக இருந்தாலும், மறைமுகமமாக உயிர்ப்பை மையப்படுத்தியதாக இருக்கிறது.

 

அவர்களுடைய இரண்டு தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு: ‘உங்களுக்கு மறைநூலும் தெரியாது,’ ‘கடவுளின் வல்லமையும் தெரியாது.’

 

திருமணத்தின் தேவை இந்த உலகத்தில் மட்டுமே எனச் சொல்கிறார் இயேசு. தொடர்ந்து, தோரா நூல்களின் பின்புலத்தில் இறப்புக்குப் பின் வாழ்வு என்பது உண்மையானது என எடுத்துச் சொல்கிறார். கடவுள் என்றும் வாழ்வதால், அவரில் இறப்பவர்கள் அனைவரும் தொடர்ந்து வாழ்கிறார்கள்.

 

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் எவை?

 

(அ) நம் நிலைத்தன்மை கடவுளில்!

 

கடவுள் நிரந்தரமாக இருக்கிறார். திருமணம் கூட நிரந்தரத்துக்கான ஒரு வழியே. ஏனெனில், திருமண உறவின் வழியாக மனிதர்கள் தங்கள் தலைமுறையைப் பெருக்கி அவற்றில் வாழத் தொடங்குகிறார்கள். இறப்புக்குப் பின் நம் வாழ்க்கை நிலை மாறுகிறது. தொடர்ந்து நாம் அவரில் நிலைக்கிறோம்.

 

(ஆ) கடவுளின் வல்லமை

 

கடவுள் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றல் கொண்டவர். ஆக, நம் ஆற்றல் மறைகிற இடத்தில் கடவுளின் ஆற்றல் தொடங்கித் தொடர்கிறது.

 

(இ) இறவாநிலை

 

இறவாநிலை என்பது நாம் அன்றாடம் முயற்சி செய்ய வேண்டிய ஒன்று. நேற்று வரை நடந்த அனைத்தையும் இறந்தகாலம் எனக் கருதிவிட்டு, புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கும்போது நாம் இறவாநிலைக்குப் பிறக்கிறோம்.

 

நிற்க.

 

‘நான் யாரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அறிவேன். அவர் என்னிடம் ஒப்படைத்ததை இறுதிநாள்வரை காத்திட வல்லவர் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு’ என எழுதுகிறார் பவுல் (முதல் வாசகம்). பவுல் கொண்டிருந்த இந்த எதிர்நோக்கே அவர் அனைத்துத் துன்பங்களையும் எதிர்கொள்ள அவருக்கு உதவி செய்தது. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 116).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: