இன்றைய இறைமொழி
புதன், 7 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 18-ஆம் வாரம் – புதன்
எரேமியா 31:1-7. மத்தேயு 15:21-28
நம்பிக்கை பெரிது!
இயேசு இஸ்ரயேல் மக்களின் எல்கையைத் தாண்டிச் செல்கிறார். அனைவரையும் உள்ளடக்கிய அவருடைய பணி தொடங்குகிறது. கானானியப் பெண் ஒருவர் தன் மகளுக்கு நலம் வேண்டி இயேசுவிடம் நிற்கிறார். எல்கையைத் தாண்டி தன் எல்கைக்குள் வந்த இயேசுவை நாடி வருகிறார் பெண். ஆனால், இயேசுவோ தம் பணி இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமே உரியது என வரையறுக்கிறார்.
‘உணவு பிள்ளைகளுக்கு மட்டுமே’ என இயேசு மொழிகிறார். ஆனால், அப்பெண்ணோ, ‘உணவு பிள்ளைகளுக்கு மட்டும்தான். ஆனால், மேசையும் உணவறையும் அனைவருக்கும் உரியது. பிள்ளைகள், பெரியவர்கள், நாய்க்குட்டிகள் என அனைவருக்கும் அங்கே இடம் உண்டு. அனைவருடைய வயிறுகளும் ஏதோ ஒரு வழியில் நிரப்பப்படும்!’ எனப் பதில் மொழிகிறார்.
தம் உள்ளத்தில் தம் பணி இஸ்ரயேல் மக்களுக்கு என இயேசு வரையறுத்தாலும், தம் பயணத்தால், புறவினத்தாரின் எல்கைகளுக்குள் நுழைவதால் தம் பணியின் கதவுகளை அனைவருக்கும் திறக்கிறார்.
‘அம்மா, உமது நம்பிக்கை பெரிது!’ என்று இளவலைப் பாராட்டுகிறார் இயேசு.
நம்பிக்கை பெரிது. எனவே, அவருடைய பார்வை பெரிது!
இந்தப் பெண்ணின் பார்வையே பிரபஞ்சப் பார்வை என அழைக்கப்படுகிறது. கடற்கரையில் நிற்கிற அனைவரும் கடலில் எவ்வளவு தண்ணீர்த் துளிகள் என்று பார்க்க, ஒரே ஒரு ஞானி மட்டும், என்ன ஒரு பெரிய தண்ணீர்த் துளி என்று மொத்தக் கடலையும் ஒரே தண்ணீர்த் துளியாக பார்ப்பது போல! இத்தகைய பார்வை கொண்டிருக்கிற நபர் தனக்கு நேர்கிற அனைத்தையும் எந்தவொரு முணுமுணுப்பும் கோபமும் இன்றி ஏற்றுக்கொள்கிறார். அவருக்கென்று எந்தவொரு எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. இத்தகையோரின் உளப்பாங்கு கடவுளையும் பேச வைக்கிறது. இத்தகைய உளப்பாங்கு நமக்கும் நமக்கு அருகில் இருப்பவர்களுக்கும் நலம் தருகிறது. பேய்களும் பிணிகளும் நீங்குகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள், ‘இஸ்ரயேலின் குடும்பங்கள் எல்லாவற்றுக்கும் நான் கடவுளாய் இருப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்!’ என மொழிகிறார். பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களை விடுவிக்கிற ஆண்டவராகிய கடவுள், அனைத்து உலகத்தாரையும் தம் மக்களாக ஏற்றுக்கொள்கிறார்.
ஒருங்கிணைந்த பிரபஞ்சப் பார்வை (unitive consciousness) கொண்டிருப்பவர் பாலின, இன, மொழி, ரீதி, சாதி, மதம் போன்ற வேற்றுமைகள் பாராட்டுவதில்லை. ஏனெனில், அவர்கள் ‘நம்பிக்கை பெரிது.’
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ விடாமுயற்சியோடு இறைவனைத் தொடர்ந்து வழிநடப்பார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 167).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: