இன்றைய இறைமொழி
புதன், 8 மே 2024
பாஸ்கா காலம் 6-ஆம் வாரம் – புதன்
திப 17:15, 22 – 18:1. யோவா 16:12-15
தட்டித் தடவியாவது
இன்றைய முதல் வாசகத்தில் பவுல் ஏதென்ஸ் நகரில் ஆற்றிய உரையை வாசிக்கின்றோம்.கிரேக்க மெய்யியலின் தொட்டில் ஏதென்ஸ். சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் என்னும் மேற்கத்தேய மெய்யியலின் பிதாமகன்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, உரையாற்றிய ஊர் ஏதென்ஸ்.
ஏதென்ஸ் நகர மக்கள் நிறையக் கற்றவர்கள், புதிய கருத்துக்களை வரவேற்பவர்கள், ஆழ்ந்து கேட்பவர்கள், நன்றாகப் பேசுபவர்களை உற்சாகப்படுத்தக்கூடியவர்கள், மீண்டும் வரவேற்றுக் கேட்கும் எண்ணம் உடையவர்கள், மற்றும் மாற்றத்தை அறிவுசார்நிலையில் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள்.
இங்கே, நாம் முதலில் ஏதென்ஸ் நகர மக்களிடமிருந்து மேற்காணும் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
தொடர்ந்து, பவுல் இன்று நமக்குச் சில பாடங்களைச் சொல்லித் தருகின்றார்:
(1) பவுலின் அறிவுத்திறன்
பவுலுக்கு எபிரேயம், அரமேயம், கிரேக்கம், சிரியம், மற்றும் இலத்தீன் தெரிந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், பவுலுக்குத் திருச்சட்டமும் யூத இறையியலும் அவரின் சம காலத்து மெய்யியல் சிந்தனைகளைகளும் நன்றாகத் தெரியும். இந்த அறிவுத்திறன் அவருக்கு நிறைய தன்மதிப்பையும் தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்கும். நாம் வாழ்வில் அறிந்துகொள்ளும் ஒவ்வொன்றும் இன்னொரு நாள் எங்கேயோ பயன்படும். நிறையத் திறன்களை வளர்த்துக்கொள்தல் நலம்.
(2) பவுலின் துணிச்சல்
பவுல் இங்கே தனிநபராக மக்கள் கூட்டத்தை, புதிய மக்கள் கூட்டத்தை எதிர்கொள்கின்றார். கடவுளின் துணை உள்ள ஒருவருக்கே இத்துணிச்சல் வரும். ஒவ்வொரு முறையும் நமக்கு இந்த அனுபவம் உண்டு. பேருந்தில் செல்லும்போது, திருமண விழாவிற்குச் செல்லும்போது, பணி மாற்றம் அடைந்து செல்லும்போது என நாம் ஒவ்வொரு முறையும் புதிய புதிய நபர்களைப் பார்க்கிறோம். பழகுகிறோம். உறவுகளை உருவாக்குகிறோம். பணிகளைச் சிறந்த முறையில் செய்கிறோம். காரணம், கடவுளின் உடனிருப்பு. இதை நாம் உணர்தல் அவசியம்.
(3) சமயோசிதப் புத்தி
எந்த நேரத்தில் எதை எப்படிச் சொல்ல வேண்டுமோ, செய்ய வேண்டுமோ, அந்த நேரத்தில் அதை அப்படிச் சொல்லும் பக்குவம். கூட்டத்தைப் பற்றிய அச்சமோ, புதிய இடத்தைப் பற்றிய கலக்கமோ இல்லாத பவுல், தன் கண்முன் நடக்கின்ற ஒன்றை அப்படியே எடுத்துப் பேசுகிறார். ‘நீங்கள் அறியாத தெய்வத்துக்கு’ என்று அங்கே இருந்த ஒரு பீடத்தை மையமாக வைத்து தொடங்குகிறார். என்ன ஆச்சர்யம்!
விளைவு, மக்களின் மனத்தைக் கவர்கின்றார் பவுல்.
கடவுளைப் பற்றி பவுல் அறிவிக்கும் விதம் நமக்கு இன்னும் வியப்பாக இருக்கிறது. ‘நீங்கள் அறியாத தெய்வத்துக்கு’ எனத் தொடங்குகிற பவுல், கடவுளை அறிதல் என்றால் எப்படி எனக் கற்றுத் தருகிறார். நம் அறிவால் அனைத்தையும் அறிந்துவிடலாம் என்னும் எண்ணத்தில் இருந்தனர் கிரேக்கர்கள். ஆனால், வெளிப்பாட்டின் வழியாகவே இறைவனைக் கண்டுகொள்ள முடியும் எனக் கற்பிக்கிறார் பவுல்.
இறைவெளிப்பாடு நிகழ வேண்டும் எனில் நாம் கடவுளைத் தேட வேண்டும். ‘தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார்’ என்கிறார் பவுல். திடீரென இரவில் மின்சாரம் தடைபடும்போது தட்டுத் தடவி தீப்பெட்டியைக் கண்டுபிடித்தவுடன் நமக்கு வரும் மகிழ்ச்சி போல, கடவுளைக் கண்டுபிடித்தவுடன் நம் உள்ளம் மகிழ்கிறது. தேடலின் நிறைவு ஒரு தற்செயல் நிகழ்வாக இருந்தாலும் அது நமக்கு மகிழ்ச்சி தருகிறது. தட்டுத் தடுமாறித் தொட்ட பொருள் நமக்கு அருகிலேயே இருந்தது என உணரும்போது நம் மகிழ்ச்சி கூடுகிறது. ‘அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம்’ என்னும் வாக்கியம் பவுலின் ஆழ்ந்த நம்பிக்கையை நமக்கு எடுத்துரைக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், தூய ஆவியாரின் வருகை பற்றிப் பேசுகிற இயேசு, ‘உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்’ என மொழிகிறார். நம்பிக்கையாளர்களாகிய நாம் தட்டுத் தடவிக் கடவுளைக் கண்டுகொள்ள வேண்டியதில்லை. தூய ஆவியார்தாமே நம் கரம் பிடித்துக் கடவுள் நோக்கி அழைத்துச் செல்கிறார். இவ்வாறாக, தூய ஆவியாரில் கடவுள் இன்னும் நமக்கு நெருக்கமாகிறார்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் கரங்களை விரித்து அவரிடம் கொடுப்பது மட்டுமே.
நிற்க.
புதிய இடம், புதிய நபர், புதிய வேலை போன்ற எதார்த்தங்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்? தன் இலக்கு, இருத்தல், மற்றும் இயக்கம் பற்றி அறிந்த பவுல் போன்றவர்களுக்கு எல்லா இடமும், எல்லா நபர்களும், எல்லா வேலையும் ஒன்றே. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 92)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: