இன்றைய இறைமொழி
வியாழன், 1 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 17-ஆம் வாரம் – வியாழன்
எரேமியா 18:1-6. மத்தேயு 13:47-53
தகுதியாக்குதல்!
இன்றைய நற்செய்தி வாசகத்தில், விண்ணரசு பற்றிய ஓர் உருவகத்தைத் தருகிறார் இயேசு. கடலில் வீசப்படும் வலையாக இருக்கிறது விண்ணரசு. இந்த உவமையின் உட்கருத்து ஏறக்குறைய ‘வயலில் தோன்றிய களைகள்’ உவமையை ஒத்திருக்கிறது. வலையைக் கடலில் வீசுகிற மீன்பிடிப்பவர், மீன்கள் விழ விழ அவற்றை எடுத்துப் பார்ப்பது கிடையாது. மாறாக அனைத்து மீன்களும் விழும்வரை காத்திருக்கிறார். பின்னர் கரைக்கு வலையை இழுத்து மீன்களைப் பிரிக்கிறார். மீன்பிடிப்பவர் தான் சுமக்க வேண்டிய சுமையைப் பொருட்படுத்தாமல் அனைத்து மீன்களையும் கரைக்குக் கொண்டுவருகிறார். அவசரப்பட்டு உடனுக்குடன் கெட்ட மீன்களை அப்புறப்படுத்தியிருந்தால் ஒருவேளை நல்ல மீன்களையும் தூக்கி எறியும் நிலை வரலாம்.
தங்களையே தகுதியாக்கிக்கொள்கிற மீன்கள் தலைவருடைய இல்லம் சேர்கின்றன. மற்ற மீன்கள் மீண்டும் கடலில் மூழ்குகின்றன அல்லது மிதக்கின்றன.
நம் இயல்பை நன்மைத்தனத்தால் அழகுசெய்யும்போது நம் தகுதிநிலை உயிர்கிறது.
உவமைகளின் இறுதியில், ‘விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்’ என மொழிகிறார் இயேசு. இங்கே மத்தேயு நற்செய்தியாளர் தன்னையே உருவகமாகப் பதிவு செய்வதாக எடுத்துக்கொள்ளலாம். தன் நற்செய்தியில் ‘பழையவற்றையும்’ (‘பழைய ஏற்பாட்டை) ‘புதியவற்றையும்’ (‘இயேசு பற்றிய கருத்துருக்களையும்) ஒரே நேரத்தில் வெளிக்கொணர்கிறார்.
முதல் வாசகத்தில், குயவன் வீட்டுக்கு அருகில் இறைவாக்குரைக்கிறார் எரேமியா. குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போல இஸ்ரயேல் மக்கள் தம் கையில் இருப்பதாக உரைக்கிறார் கடவுள். தாம் விரும்பியவாறு மக்களை மாற்றிக்கொள்ளவும், தம் உரிமைப்பொருளாக வைத்துக்கொள்ளவும் நினைக்கிறார் கடவுள்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ கடவுளால் உருப்பெறுமாறு தங்களையே கடவுளின் கைகளில் கொடுக்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 162).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: