இன்றைய இறைமொழி
வியாழன், 11 ஜூலை 2024
பொதுக்காலம் 14-ஆம் வாரம் – வியாழன்
ஓசேயா 11:1-4, 8-9. மத்தேயு 10:7-15
பணிக்கான விதிமுறைகள்
இந்த நாள்களில் நற்செய்தி வாசகத்தை, மேலாண்மையியல் கண்ணோட்டத்தில் புரிந்துகொண்டு வருகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில், தம் பன்னிரு சீடர்களைப் பணிக்கு அனுப்புகிற இயேசு, அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை முன்மொழிகிறார். அவர்களுடைய இருத்தல் மற்றும் இயக்கத்தை வரையறுப்பனவாக இருக்கின்றன விதிமுறைகள். இவை நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) இலக்கு மற்றும் கவனக்குவியங்களை தெளிவாக்குதல்
‘நீங்கள் சென்று விண்ணரசு நெருங்கிவந்துவிட்டது என அறிவியுங்கள்’ (வ. 7)
சீடர்களுடைய பணியின் இலக்கு மற்றும் கவனக்குவியங்களைத் தெளிவாக விளக்குகிறார் இயேசு. எந்த நிலையிலும் எந்த நேரத்திலும் சீடர்களின் எண்ணத்தில் விண்ணரசு மட்டுமே பதிந்திருக்க வேண்டும். ‘விண்ணரசு நெருங்கிவிட்டது’ என்னும் சொல்லாடல் இயேசுவின் உடனிருப்பையும் இயேசு முன்மொழிகிற மாற்றுச் சமூகத்தையும் குறிக்கிறது.
நம் இலக்கு மற்றும் கவனக்குவியங்கள் தெளிவாக இருக்கின்றனவா? ஆண்டு இலக்கு, மாத இலக்கு, வார இலக்கு, நாள் இலக்கு என நாம் நிர்ணயித்து அவற்றை அடைய முயற்சி செய்கிறோமா?
(ஆ) பற்றுறுதியும் ஆற்றல்படுத்துதலும்
‘பொன், வெள்ளி, செப்புக்காசு … வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே!’ (வவ. 9-10)
சிறுநகர் வாழ்வையும் (minimalism) அவசியநுகர் வாழ்வையும் (essentialism) தம் சீடர்களுக்குக் கற்றுத் தருகிறார் இயேசு. அவர்கள் தங்களைச் சார்ந்தவர்களாக அல்லாமல், கடவுளைச் சார்ந்தவர்களாகவும் ஒருவர் மற்றவரைச் சார்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
நாம் இன்று பெருநுகர்வாழ்வு (consumerism) வாழ்கிறோமா?
(இ) வளங்கள் மேலாண்மை
‘தங்கியிருங்கள் … வாழ்த்துங்கள் … இல்லத்தை விட்டு நீங்குங்கள்’ (வவ. 11-14)
தங்கியிருத்தல் வழியாகவே நாம் வேரூன்ற முடியும். வேரூன்றுதல் வழியாகவே கனிதர இயலும். கனிதர இயலாத சூழல் நிலவும்போது நாம் நகர வேண்டும். இவ்வாறாக, நம் ஆற்றலும் நேரமும் விரயமாவதைத் தடுக்க முடியும். எதிர்மறையான ஆற்றல்களிடமிருந்து தப்பிக்க இயலும்.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் தம் உடனிருப்பையும் பராமரிப்பையும் பரிவையும் இஸ்ரயேல் மக்களுக்கு வாக்களிக்கிறார். கனிவுநிறை தந்தையாக தம்மையே முன்மொழிகிறார் கடவுள்.
நிற்க.
கடவுள் கனிவும் கருணையும் நிறைந்தவர் என அறிவிப்பதே நம் பணி (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 145).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: