இன்றைய இறைமொழி
வியாழன், 13 ஜூன் 2024
பொதுக்காலம் 10-ஆம் வாரம் – வியாழன்
பதுவை நகர் புனித அந்தோனியார் – நினைவு
எசாயா 61:1-3. லூக்கா 10:1-9
நற்செய்தியின் பணியாளர்
(இன்றைய வாசகங்களும் சிந்தனையும் புனித அந்தோனியார் நினைவுக்கு உரியவை)
‘அன்பின் கோடி அற்புதர்’ என அழைக்கப்படும் பதுவை நகர் புனித அந்தோனியாரின் வாழ்க்கையில் நிகழ்ந்த வல்ல செயல்கள் நாம் அறிந்தவையே. மீன்களும் இவருடைய சொற்களுக்குக் கீழ்ப்படிந்தன. கழுதையும் இவர் சுமந்து வந்த நற்கருணையின் முன் முழந்தாளிட்டது. குழந்தை இயேசு இவருடைய கரங்களில் தவழ்ந்தார். இவருடன் விளையாடி மகிழ்ந்தார். காணாமற்போனதைக் கண்டுபிடித்துத் தருகிறார் இவர். இவருடைய வாழ்வியல் நிகழ்வுகள் நமக்குத் தரும் பாடங்களை இன்று சிந்திப்போம்.
(அ) பாதை மாறுவதே பயணம்
ஃபெர்னான்டோ ஃபுல்காம் என அழைக்கப்பட்ட நம் புனிதர் தன் 15-ஆவது வயதில் அகுஸ்தினார் சபைத் துறவற வாழ்வைத் தழுவினார். ஏறக்குறைய 8 ஆண்டுகள் கழித்து அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றார். 1220-இல் மொரோக்கோவில் மறைசாட்சியம் தழுவிய ஐந்து பிரான்சிஸ்கன் துறவியர்களின் உடல்கள் சாந்தா குருஸ் என்னும் நகருக்குக் கொண்டுவரப்பட்டபோது, அவர்களுடைய மறைசாட்சியத்தால் ஈர்க்கப்பட்ட இவர் அதே இடத்திற்குப் பணிக்குச் செல்ல வேண்டும் என்னும் நோக்கத்துடன், அகுஸ்தினார் துறவற சபையிலிருந்து பிரான்சிஸ்கன் துறவற சபைக்குச் சென்றார். துறவற வாழ்வின் தந்தை எனப் போற்றப்பட்டுகின்ற பெரிய அந்தோனியாரின் பெயரைத் தன் பெயராக ஏற்றார்.
வாழ்வின் அழைப்புகளைப் பொருத்து நம் பாதைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.
(ஆ) வலுவின்மை ஏற்றல்
‘உள்ளம் ஊக்கமுடையதுதான், ஊனுடலோ வலுவற்றது’ என்னும் இயேசுவின் சொற்கள் நம் புனிதருக்கு மிகவும் பொருந்துகின்றன. ஊக்கத்துடன் மொரோக்கோ நோக்கி இவர் சென்றாலும், இவருடைய உடல்நலம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில், போர்த்துகல் திரும்பும் வழியில் சிசிலி செல்கிறார். அசிசி நகர் புனித பிரான்சிஸ் தலைமையேற்ற ‘மேட்ஸ் பொது அமர்வில் பங்கேற்கிறார்.’ அரெட்சோவுக்கு அருகில் உள்ள துறவற இல்லத்தில் பணியாற்றுகிறார். திருப்பலி நிறைவேற்றுதல், பாத்திரங்கள் கழுவுதல், அறைகளைச் சுத்தம் செய்தல் என்பவை இவருடைய பணிகள். எளிமையான உள்ளத்தோடு இப்பணிகளை ஏற்று, அர்ப்பணத்தோடு அவற்றை நிறைவேற்றினார்.
உடல்நலக்குறைவு உட்பட அனைத்து வலுவின்மைகளையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
(இ) வாய்ப்பு பற்றிக்கொள்ளல்
1222-ஆம் ஆண்டு வரை இவருடைய கூர்மதியும், விவிலிய அறிவும் யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஃபோர்லி என்னும் இடத்தில் நடைபெற்ற குருக்கள் அருள்பொழிவுத் திருப்பலியில் மறையுரை வைக்க யாரும் முன்வராதபோது உடனடியாக முன்வருகிற நம் புனிதரின் சொற்கள் அனைவரையும் கவர்ந்தன. அன்றுமுதல் அவருடைய மறைவுப் பணி முடிந்து, புதிய பணியான நற்செய்தி அறிவிப்புப் பணியை ஏற்றுக்கொண்டார். ‘மறையுரை ஆற்றுபவர் அதைக் கேட்கிற மக்களுக்கு தம் சொல்லாலும் செயலாலும் கதிரவன்போல இருக்க வேண்டும்’ என்கிறார் நம் புனிதர்.
வாழ்வில் வருகிற வாய்ப்புகளைத் துணிவோடும் திறந்த மனத்தோடும் பற்றிக்கொள்ள வேண்டும்.
(ஈ) ‘நான் என் ஆண்டவரைக் காண்கிறேன்’
சபையின் மாநில நிர்வாகப் பணி, தப்பறைக் கொள்கைகளை எதிர்க்கிற பணி, ஊர்கள்தோறும் நற்செய்திப் பணி என நகர்ந்த நம் புனிதரின் வாழ்க்கை 13 ஜூன் 1231 அன்று நிறைவுபெறுகிறது. தன் 36 வயதில் மறைகிற நம் புனிதரின் இறுதிச் சொற்கள், ‘நான் என் ஆண்டவரைக் காண்கிறேன்.’ ‘என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன்’ (தொநூ 16) என்னும் ஆகாரின் இறையனுபவச் சொற்களை ஒத்திருக்கின்றன நம் புனிதரின் சொற்கள்.
தொடர்ந்த வந்த ஆண்டில் திருத்தந்தை 9-ஆம் கிரகொரி அவரைப் புனிதர்நிலைக்கு உயர்த்துகிறார். ‘ஓ மேன்மைமிகு மறைவல்லுநரே’ என வாழ்த்திப்பாடினார். திருத்தந்தை 12-ஆம் பயஸ் இவரை, ‘திருஅவையின் மறைவல்லுநர்’ நிலைக்கு உயர்த்தினார்.
ஆண்டவராகிய கடவுளின் இரக்கத்தையும் நன்மைத்தனத்தையும் அனுபவித்த உணர்ந்த புனித அந்தோனியார் அவற்றை மற்றவர்களும் அனுபவிக்கத் துணை செய்தார். கடவுளுடைய இரக்கத்தை நாமும் உணர்ந்து வாழ்தல் வேண்டும்.
நிற்க.
‘இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய தன் தலைவரின் ஆவி தன்மேல் உள்ளதை உணர்கிற இறைவாக்கினர் தன் பணியைக் கூர்மைப்படுத்துகிறார். நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் பணிக்குத் துணையாக எழுபத்திரண்டு பேரை நியமிக்கிறார்.’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 123).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: