இன்றைய இறைமொழி
வியாழன், 16 மே 2024
பாஸ்கா காலம் 7-ஆம் வாரம் – வியாழன்
திப 22:30. 23:6-11. யோவா 17:20-26
ஒற்றை உணர்வுநிலை
நம் வாழ்க்கை இரட்டை துருவங்களைக் கொண்டதாக இருக்கிறது. இரட்டைத் துருவங்கள் எதிரெதிர் என்றாலும், அவை ஒன்றை ஒன்று நிரப்பக்கூடியதாகவும் இருக்கின்றன. துருவநிலைக்குத் தள்ளுதல் (polarisation) என்பது இன்று அதிகமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. மற்றவர்களையும் நம்மையும் எது இணைக்கிறது என்று பார்ப்பதற்குப் பதிலாக, அவர்களிடமிருந்து நம்மை எது பிரிக்கிறது என்று பார்ப்பதுதான் துருவநிலைக்குத் தள்ளுதல். துருவநிலைக்குத் தள்ளப்பட்ட ஒருவரை நாம் ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது.
துருவநிலைக்குத் தள்ளுதலை விடுத்து ஒற்றை உணர்வுநிலையைப் பெற்றுக்கொள்ள நம்மைத் தூண்டுகின்றன இன்றைய வாசகங்கள். தம் சீடர்களுக்காக இறைவேண்டல் செய்கிற இயேசு (நற்செய்தி வாசகம்), ‘எல்லாரும் ஒன்றாக இருப்பார்களாக – நாம் இருப்பதுபோல!’ என்கிறார். தந்தையும் மகனும் வேறு வேறு என்றாலும் அவர்களுக்குள் துருவநிலைக்குத் தள்ளுதல் இல்லை. தம் சீடர்களுடைய மனப்பாங்கை அறிந்திருக்கிற இயேசு, அவர்களிடையே உள்ள வேறுபாடுகளை உணர்ந்திருக்கிற இயேசு, அவர்கள் தங்கள் துருவநிலைகளை விடுத்து ஒருவர் மற்றவரை இணைத்துப்பார்க்க அழைக்கிறார்.
ஒற்றை உணர்வுநிலை பெறுவது எப்படி?
(அ) நம் அனைவரையும் கடவுளின் மாட்சி நிரப்பியுள்ளது என்பதை உணர்வதன் வழியாக.
(ஆ) இயேசுவைப் பற்றிய அறிதல் கொண்டிருப்பதன் வழியாக.
(இ) இயேசுவுக்கும் தந்தைக்கும் உள்ள உறவை நினைவுகூர்வதன் வழியாக.
ஒற்றை உணர்வுநிலை நம்மிடம் இல்லாதபோது அதை இன்னொருவர் தன் வசதிக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என முதல் வாசகம் எச்சரிக்கிறது.
எருசலேமில் விசாரிக்கப்படுகிற பவுல், தன்னைச் சுற்றி நிற்பவர்கள் யூதர்களாக இருந்தாலும், அவர்கள் பரிசேயர்கள்-சதுசேயர்கள் எனப் பிரிந்து நிற்கிறார்கள் என உணர்ந்துகொண்டு, அச்சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்.
வாழ்வின் இருதுருவநிலைகள் நம்மைத் தொடர்ந்து வந்தாலும், அவற்றை இணைத்துப் பார்க்கிற ஒற்றை உணர்வுநிலை பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.
நிற்க.
‘கடவுளுடைய அருளில் எதிர்நோக்கைக் கண்டுகொள்வதோடு, ஆண்டவர் அருளும் காலத்தின் அறிகுறிகளிலும் எதிர்நோக்கைக் கண்டுணர நாம் அழைக்கப்படுகிறோம். காலத்தின் அறிகுறிகள் எதிர்நோக்கின் அறிகுறிகளாக மாற வேண்டும்.’ திருத்தந்தை பிரான்சிஸ், யூபிலி அறிவிப்பு ஆணை, 9 மே 2024, எண். 7 (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 99)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: