இன்றைய இறைமொழி
வியாழன், 19 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 24-ஆம் வாரம், வியாழன்
1 கொரிந்தியர் 15:1-11. லூக்கா 7:36-50
நம்பிக்கையின் செயல்பாடுகள்
‘நம்பிக்கை’ என்பது வெறும் சரணாகதி மனப்பான்மையும் கடவுள்மேல் பற்றுறுதியும் மட்டுமல்ல. மாறாக, நம்பிக்கை பல செயல்பாடுகளாக நம் வாழ்வில் வெளிப்படுகிறது. நம்பிக்கையின் மூன்று செயல்பாடுகளை நம்முன் கொண்டுவருகிறது இன்றைய வாசகங்கள்.
(அ) நம் பார்வையை அகலப்படுத்தும் நம்பிக்கை
கொரிந்தியருக்கு எழுதுகிற திருமடலை நிறைவுசெய்கிற பவுல், தன் பழைய வாழ்க்கையை அறிக்கையிடுகிறார். கடவுளுடைய வெளிப்பாட்டையும் அந்த வெளிப்பாட்டுக்கு பவுல் தந்த பதிலிறுப்பையும் எடுத்துரைக்கிறார். அவர் கொண்டிருந்த நம்பிக்கையை அவர் அறிக்கையிடுகிறார். அவருடைய அறிக்கையிடுதல் பலரை இயேசுவை நோக்கி இழுக்கிறது. கடவுளுக்கு எதிராக வாள் எடுத்தவர், கடவுளுக்காக வாள் எடுத்துப் புறப்படுகிறார். நற்செய்தி வாசகத்தில், சீமோனின் இல்லத்தின் விருந்து நிகழ்வுக்குள் நுழைகிறார் பெண் ஒருவர். நாசரேத்து இயேசுவில் தன் சமகாலத்து ரபியைக் காண்கிறார் சீமோன். இயேசுவில் தன் ஆண்டவரைக் காண்கிறார் பெண். பெண்ணின் பார்வையை அகலப்படுத்துகிற அவருடைய நம்பிக்கை.
(ஆ) துணிச்சலைக் காட்டும் நம்பிக்கை
பவுலும் திருத்தூதர்களும் தங்களுடைய நம்பிக்கையைத் தங்களுக்குள் வைத்திருக்கவில்லை. மாறாக, அவற்றை மற்றவர்களுக்கு வழங்குகிறார்கள். நம்பிக்கை என்பது ஒரு மெழுகுதிரி. அது தொடர்ந்து மற்ற திரிகளை ஏற்றுகிறது. நற்செய்தி வாசகத்தில், பெண்ணின் துணிச்சல் வெளிப்படுகிறது. தன் ஆண்டவரைச் சந்திக்கக் கிடைத்த அந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்துகிறார்.
(இ) விருந்தோம்பும் நம்பிக்கை
பரிசேயராகிய சீமோன் தான் காட்ட வேண்டிய விருந்தோம்பலை மறக்கின்றார். நறுமணத் தையல் காட்டிய விருந்தோம்பலோடு ஒப்பிடுகிற இயேசு, குறைவாக மன்னிப்பு பெறுபவர் குறைவாக அன்பு காட்டுகிறார் என்கிறார். நிகழ்வின் இறுதியில், ‘உன் நம்பிக்கை உனக்கு நலம் தந்தது’ என்று சொல்லி பெண்ணை அனுப்புகிறார் இயேசு. நம்பிக்கையின் செயல்பாடுகள் நமக்கு நலமும், மன்னிப்பும், வாழ்வும் தருகின்றன.
நிற்க.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் தங்கள் நம்பிக்கையைச் செயல்பாடுகளாக வெளிப்படுத்துகிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 203)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: