இன்றைய இறைமொழி
வியாழன், 20 ஜூன் 2024
பொதுக்காலம் 11-ஆம் வாரம் – வியாழன்
சீராக்கின் ஞானம் 48:1-15. மத்தேயு 6:7-15
இறை-வேண்டல்
கடவுள் பற்றிய இரண்டு விடயங்களை இரண்டு நபர்களிடமிருந்து இன்று நான் கேட்டேன்.
ஒன்று, அருள்தந்தை ராஜ்குமார் சச, சென்னை, ‘கடவுளை உள்ளடக்காத எதுவும் கரைந்து போகும்! பாபேல் கோபுரம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கோபுரம் கட்டத் தொடங்கியவர்களிடம் திட்டம் இருந்தது, தெளிவான நோக்கம் இருந்தது, மனித வளம் இருந்தது, செங்கற்களை அறுக்கும் திறன் இருந்தது, வரைபடக் கலைஞரும் பொறியாளர்களும் இருந்தார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சியில் கடவுள் இல்லை. ஆகையால், அந்த முயற்சி முற்றுப்பெறவில்லை. கடவுளை உள்ளடக்காத எதுவும் கரைந்து போகிறது!’ என்றார்.
இரண்டு, சகோ. பால் ப்ரதீஷ், சென்னை, ‘என்னுடைய நாள் கடவுளோடு தொடங்கும், கடவுளோடு முடியும். கடவுளின் வார்த்தையை நான் விவிலியத்திலிருந்து வாசிப்பேன். பின், அவரை நோக்கி இறைவேண்டல் செய்வேன். இறைவார்த்தையில் அவர் என்னோடு பேசுகிறார். இறைவேண்டலில் நான் அவரோடு பேசுகிறேன். கடவுளை மையப்படுத்தாத எந்த நாளும் என்னும் வாழ்வின் வீணான நாள்களே!’
கடவுளை நம் வாழ்வுக்குள் கொண்டுவரவும், கடவுளை மையப்படுத்தி வாழவும் நமக்குத் துணை செய்வது இறைவேண்டல். இறைவேண்டல் செய்வது என்பது எனத் தம் சீடர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார் இயேசு (நற்செய்தி வாசகம்). ‘மிகுதியான வார்த்தைகள்’ குறைத்து ‘மிதமான வார்த்தைகள்’ சொல்ல அழைக்கிறார்.
இயேசு கற்றுத்தந்த இறைவேண்டலின் இன்னொரு முதன்மையான கூறு என்னவெனில், ‘நான்’ என்பதை ‘நாம்’ என மாற்றுகிறார்: ‘எங்கள் தந்தையே!’ ‘எங்களுக்குத் தாரும்!’ ‘எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்!’
கடவுளை, ‘எங்கள்’ தந்தையே என அழைப்பதன் வழியாக, நாம் ஒருவர் மற்றவரை சகோதர, சகோதரிகள் என அழைக்க அறிவுறுத்தப்படுகிறோம்.
அன்றாட உணவு என்பது ‘எனக்கு’ மட்டும் அல்ல, மாறாக, ‘எங்களுக்கு’ என்று சொல்வதன் வழியாக சமநிலையான பகிர்வுக்கும் கூட்டு வாழ்வுக்கும் ஒருவர் மற்றவருடைய தேவைகளை நிறைவு செய்யும் தாராள உள்ளத்துக்கும் அழைப்பு பெறுகிறோம்.
‘எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்’ எனச் செபிப்பதன் வழியாக, ஒட்டுமொத்த மானுடகுலத்தின் நன்மையை நாடுகிறோம்.
ஆக, ‘நான்’ என்னும் நிலை விடுத்து ‘நாம்’ எனும் நிலைக்குச் செல்லும்போது அது இறைவேண்டலாக மாறுகிறது. இறைவனே நம் நடுவில் இருந்து நமக்காக வேண்டுகிறார்.
இதன் பின்புலத்தில் இன்றைய நம் இறைவேண்டல்களை எண்ணிப்பார்ப்போம். திருப்பலியில் நாம் வாசிக்கும் ‘நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்’ தவிர மற்ற அனைத்து இறைவேண்டல்களும், ‘நான்,’ ‘எனக்கு,’ ‘என்னை’ என்று தன்மை ஒருமையிலேயே இருப்பதை நாம் அறிவோம். இறைவேண்டல் என்பது நம் தேவைகளைக் கடவுளிடம் ஒப்புவிக்கும் இடம் என்னும் குறுகிய மனப்பாங்கும் வளர்ந்துவருகிறது.
நம் வாழ்வுக்குள் கடவுள் நுழைய அனுமதிக்கும் ஒரு நிகழ்வே இறைவேண்டல். நம் வாழ்வுக்குள் நுழையும் அவர் நம் தனிப்பட்ட வாழ்வை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தக் குடும்ப வாழ்வையே மாற்றுகிறார்.
நிற்க.
சீராக்கின் ஞானநூல் ஆசிரியர், எலியா மற்றும் எலிசா என்னும் இறைவாக்கினர்களுக்குப் புகழஞ்சலி செலுத்துகிறார். கடவுளின் ஆவியார்தாமே அவர்களை வழிநடத்துகிறார். தங்கள் சமகாலத்து மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் அன்பையும் வழங்குகிறார்கள் இறைவாக்கினர்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 129).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: