இன்றைய இறைமொழி
வியாழன், 22 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 20-ஆம் வாரம் – வியாழன்
அரசியான தூய கன்னி மரியா, நினைவு
எசாயா 9:2-4, 6-7. லூக்கா 1:26-38
அடிமை வழி அரசி
மேன்மை பற்றி எழுதுகிற ஷேக்ஸ்பியர் (‘பன்னிரண்டாம் இரவு’), ‘சிலர் மேன்மையாகவே பிறக்கிறார்கள், சிலர் மேன்மையை அடைகிறார்கள், சிலர்மேல் மேன்மைநிலை புகுத்தப்படுகிறது’ என்கிறார்.
அன்னை கன்னி மரியாவின் விண்ணேற்புத் திருவிழாவின் எட்டாம் நாளில், அன்னை கன்னி மரியாவை விண்ணரசி (விண்ணக-மண்ணக அரசி) எனக் கொண்டாடி மகிழ்கின்றோம். இதையே செபமாலையில், மாட்சிநிறை மறைபொருளில் ஐந்தாவதாகவும் சிந்திக்கின்றோம்.
கன்னி மரியாவின் மேன்மை அவருடைய பிறப்பாலும் – தொடக்கநிலைப் பாவம் இல்லாமல், கடவுளுடைய அருளாலும், எல்லாவற்றுக்கும் மேலாக, இறைத்திருவுளம் நிறைவேற்றிய அவருடைய செயலாலும் வருகிறது.
‘நான் ஆண்டவரின் அடிமை’ என்று இறைவனிடம் தன்னையே அடியாராகச் சரணடைந்த மரியாவின் தாழ்ச்சியே அவரை அரசி நிலைக்கு உயர்த்துகின்றது. மேலும், அனைத்துலக அரசராம் கிறிஸ்துவைப் பெற்றெடுத்த நிலையிலும் அன்னை கன்னி மரியா அரசியாகக் கருதப்படுகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயாவின் முன்னுரைத்தலையும், நற்செய்தி வாசகத்தில், இயேசு பிறப்பு முன்னறிவிப்பையும் வாசிக்கிறோம்.
எதிர்நோக்கு மற்றும் ஒளியின் செய்தியைத் தாங்கி நிற்கிறது இன்றைய முதல் வாசகம்: ‘காரிருளில் வாழ்ந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்.’ அடிமைத்தளையைக் களைகிற ஆண்டவராகிய கடவுள் நீதியும் அமைதியும் நிறைந்த அரசை ஏற்படுத்துகிறார். வரப்போகிற அரசரை, ‘வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்’ என முன்மொழிகிறார் எசாயா. கிறிஸ்தவ வாசிப்பில், இந்த இறைவாக்கு கன்னி மரியா பெற்றெடுத்த கடவுளின் மகனாம் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறுகிறது.
இந்த இறைவாக்குக்கும் மரியாவின் அரசிநிலைக்கும் தொடர்பு இருக்கிறது. கிறிஸ்து அரசரின் தாய் என்னும் நிலையில், அவருடைய மகனின் மாட்சியில் பங்கேற்கிறார் மரியா. அவருடைய அரசிநிலை பணிவிடை மற்றும் அன்பு சார்ந்ததாக இருக்கிறது. தாழ்ச்சி, தியாகம் வழியாக இயேசுவின் அரசாட்சி நடந்தேறியதுபோல, அன்னை கன்னி மரியாவின் அரசிநிலையும் இருக்கிறது.
நற்செய்தி வாசகத்தில், ‘நான் ஆண்டவரின் அடிமை’ என்று தன்னையே இறைத்திருவுளத்திற்குக் கையளிக்கிறார் மரியா. இத்தகைய தற்கையளிப்பில் ஒரு வகையான சுதந்திரம் (கட்டின்மை) இருக்கிறது. இறைவனால் ஆளுகை செய்யப்படுமாறு தன்னையே அர்ப்பணிக்கிறார் மரியா.
நாம் நம் வாழ்வில் அரசர் அல்லது அரசி என்ற நிலையில் வாழ்வது எப்படி? இன்றைய திருநாள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) அரசர்கள் மையம் கொண்டிருப்பர்
மையம் கொண்டிருத்தல் (ஃபோகஸ்) என்பது முதன்மைகளை நெறிப்படுத்துதலில் தொடங்குகின்றது. முதன்மைகளை நெறிப்படுத்தியபின், தாங்கள் தேர்ந்துகொண்ட முதன்மையை மையமாகக் கொண்டு தங்கள் எண்ணம், விருப்பம், ஆற்றல் அனைத்தையும் அதன்மேல் குவிப்பர் அரசர். கன்னி மரியாவைப் பொருத்தவரையில் இறைவனின் திருவுளம் நிறைவேற்றுதல் என்பது அவர் தேர்ந்துகொண்ட மையம். அந்த மையத்தின் குவியத்தையே தன் வாழ்வாகக் கொண்டார் அவர். இன்று நான் என் முதன்மைகளை நெறிப்படுத்தி வாழ்கிறேனா? என் முதன்மைகளைக் கலைக்கின்ற கவனச்சிதறல்கள் எவை? அவற்றை நான் எப்படி அகற்றுகிறேன்?
(ஆ) அரசர்கள் தேர்ந்து தெளிவர், தேர்ந்து தெளிந்தபின் உறுதியாக இருப்பர்
மனிதர்களில் இரு வகையினர் உண்டு. முதல் வகையினர் தேர்ந்து தெளிவதற்கு நேரம் எடுப்பர். இரண்டாம் வகை மனிதர் தேர்ந்து தெளிந்தபின்னரும் தங்கள் மனத்தில் குழம்பிக்கொண்டே இருப்பர். இந்த இரு நிலைகளுமே ஆபத்தானவை. அரசர்கள் உடனடியாகத் தேர்ந்து தெளிவர். தன் தேர்வில் உறுதியாக இருப்பர். முதன்மைகள் தெளிவானால் தெரிவுகள் எளிதாகும். அன்னை கன்னி மரியா தன் வாழ்வின் இயக்கத்தை இறைவனின் கைகளில் ஒப்படைத்துவிட்டதால் அவரின் விரல் பிடித்து உறுதியாக நடந்தார்.
(இ) அரசர்கள் தமக்கு அடுத்திருப்பவர்களின் வாழ்வின் ஆசீராக இருப்பர்
இயேசுவின் பிறப்புச் செய்தி கேட்ட மரியா தன் உறவினர் எலிசபெத்து நோக்கி ஓடுகின்றார். காணாமல் போன இளவல் இயேசுவைக் கண்டுபிடிக்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றார். கானாவில் திராட்சை இரசம் தீர்ந்தபோது இயேசுவை நோக்கி ஓடுகின்றார். தன் மகன் மதிமயங்கி இருப்பதாக ஊரார் சொல்லக் கேட்டு அவரைத் தேடி ஓடுகின்றார். தன் முதன்மைகளின்பின்னேயே ஓடினார் மரியா. தன் வாழ்வில் முதன்மையாகத் திகழ்ந்தவர்களுக்கு ஆசீராகத் திகழ்ந்தார்.
நிற்க.
சின்னஞ்சிறு அடிகள் எடுத்து வைத்தாலும் அரசநிலை அடைவது சாத்தியமே எனக் கருதுவர் எதிர்நோக்கின் திருப்பயணிகள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 179).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: