இன்றைய இறைமொழி
வியாழன், 26 செப்டம்பர் ’24
பொதுக்காலம் 25-ஆம் வாரம், வியாழன்
சபை உரையாளர் 1:2-11. லூக்கா 9:7-9
புதியது எதுவும் இல்லை
இன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு நாம் சபை உரையாளர் நூலிலிருந்து முதல் வாசகம் வாசிக்கின்றோம்.
‘வீண் முற்றிலும் வீண்!’ எனத் தன் நூலைத் தொடங்குகிறார் ஆசிரியர். ‘வீண்’ என்பதற்கு எபிரேயத்தில் ‘ஹபேல்’ என்னும் சொல் பயன்படுத்துகிறது. ‘ஹேபல்’ என்றால் ‘காற்று’ அல்லது ‘ஆவி’ அல்லது ‘நிலையற்றது’ அல்லது ‘வெறுமையானது’ என்பது பொருள். இந்த வார்த்தையின் மூலம் நமக்கு ஆச்சரியம் தரக்கூடியது. ஆதாம்-ஏவாளின் இரண்டாம் மகனது பெயர் ‘ஹாபேல்’ (தமிழில், ‘ஆபேல்’). எபிரேய விவிலியம் முதலில் உயிர் எழுத்துக்கள் இல்லாமலே எழுதப்பட்டன. உயிரெழுத்துகளை நீக்கிவிட்டால், ‘ஆபேல்’ மற்றும் ‘வெறுமை’ என்னும் சொல்லின் மெய்யெழுத்துகள் ‘ஹபல’ என்னும் மூன்று எழுத்துக்களே. சபை உரையாளர், ‘ஆபேல்’ என்ற வார்த்தையை எடுத்து விளையாடுகிறார். அதாவது, ஆபேல் கடவுளுக்கு உகந்தவராய் இருந்தார். அவருடைய பலி கடவுளுக்கு ஏற்புடையதாக இருந்தது. ஆனால், அவரது கடவுளோ அல்லது அவரது பலியோ அவரை அவருடைய அண்ணன் காயினிடமிருந்து காப்பாற்ற இயலவில்லை. பரிதாபமாக இறந்து போகிறார் ஆபேல்.
ஆக, தான் கடவுளுக்குப் பயந்து நடந்தாலும், கடவுளுக்கு உகந்த பலி செலுத்தினாலும், ஏதோ ஒரு கயவன் கையால் இறப்பு வரும் என்றால், கடவுளுக்கு ஏன் பயப்பட வேண்டும்? கடவுளுக்கு ஏன் பலி செலுத்த வேண்டும்? என்னும் கேள்விகள் சபை உரையாளருக்கு எழுகின்றன. ஆக, ‘நற்செயல்’ என்பது வீண் என முடிவு செய்கிறார். இந்தப் பின்புலத்தில்தான் இவர் விதிக்கொள்கையை உறுதியாகப் பற்றிக்கொள்கின்றார்: ‘விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் எல்லாம் நேரிடும். நேர்மையானவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும், நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும், மாசற்றவர்களுக்கும் மாசுள்ளவர்களுக்கும், பலி செலுத்துகிறவர்களுக்கும் பலி செலுத்தாதவர்களுக்கும் விதித்துள்ளபடிதான் நேரிடும்’ (காண். சஉ 9:2).
இரண்டாவதாக, மனிதரின் உழைப்பை வீண் என்கிறார் சபை உரையாளர். இரண்டு நிலைகளில்: ஒன்று, இன்று காலையில் நான் என் அறையைச் சுத்தம் செய்கிறேன். மாலையில் அது மீண்டும் அழுக்காகிவிடுகிறது. ஆக, என் உழைப்பு ஒரு நாளைக்குரிய பயனைக்கூட எனக்குத் தருவதில்லை. இரண்டு, என் உழைப்பின் பயனை நான் அதற்காக உழைக்காத ஒருவருக்கு விட்டுச் செல்ல வேண்டும். ஆனால், அவர்கள் என்னை நினைவில் வைக்கமாட்டார்கள்.
மூன்றாவதாக, யாருடைய நினைவும் எப்போதும் நிலைப்பதில்லை. நம் வீட்டிலேயே பார்க்கலாம். எனக்கு என் அப்பா மற்றும் அவரது அப்பா தாண்டி எந்த நினைவும் இருக்காது. ஆக, இரத்த உறவு, திருமண உறவு, மற்றும் உடன்படிக்கை உறவு என்னும் மூன்று உறவுகளுமே வீண் சபை உரையாளருக்கு.
நான்காவதாக, சலிப்பு (disenchantment) என்று அழைப்பார்கள். சலிப்பு இரண்டு நிலைகளில் வருகிறது: ஒன்று, ஒரு செயலைத் தொடர்ந்து செய்வதால். தினமும் எழ வேண்டும், பல் துலக்க வேண்டும், பசித்தால் சாப்பிட வேண்டும், கழிவுகளை அகற்ற வேண்டும், ஆடை அணிய வேண்டும், அணிந்து அழுக்கானதைத் துவைக்க வேண்டும், வேலை செய்ய வேண்டும், உறங்க வேண்டும். மறுபடியும் சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும். இரண்டு, நிறைவு கிடைக்காததால் வரும் சலிப்பு. நாம் எவ்வளவு சுவையாகச் சாப்பிட்டாலும் நாக்கு இன்னும் சுவையானதையே தேடுகிறது. அப்படியே கண்களும், காதுகளும் தேடுகின்றன. யூட்யூப் பார்க்கிறவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். ஒரு வீடியோ பார்ப்போம் என்று தொடங்குவது, அடுத்து, அடுத்து எனத் தொடர்ந்துகொண்டே இருக்கும். கொஞ்ச நேரத்தில் இனிமையாகத் தொடங்கியது சோர்வாக முடியும். ஆக, இதுவும் வீண் என்கிறார் சபை உரையாளர்.
ஐந்தாவதாக, ‘புதியது என்று இந்த உலகத்தில் எதுவும் இல்லை!’ என்கிறார் சபை உரையாளர். யாரோ ஒருவர் எங்கோ செய்ததை நாம் மீண்டும் செய்கிறோம். அவ்வளவுதான்! ‘ஐஃபோன் புதியதுதானே! இணையம் புதியது தானே!’ என நாம் கேட்டால், சபை உரையாளர் சொல்வார், ‘ஆம்! அவை புதியவைதான். ஆனால், தகவல் பரிமாற்றம் என்பது பழையதுதானே!’ புதியது எதுவும் இந்த உலகில் எதுவும் இல்லை என்பதால், நம் தேடல் அனைத்தையும் வீண் என்கிறார் சபை உரையாளர்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 9:7-9) சபை உரையாளரின் கருத்துகளை உறுதிசெய்வதாக அமைந்துள்ளது. இயேசுவின் அரும்பெரும் செயல்களை நினைவுகூர்கின்ற ஏரோது, ‘யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யார்?’ என்று மனம் குழம்புகின்றார். இறையாட்சி பற்றி அறிவித்தாலும், நீதியானதையே பேசினாலும் நம்மை முன்பின் தெரியாத ஒருவன் நம் தலையை எடுத்துவிட முடியும் என்றால், இறையாட்சி பற்றி அறிவித்து என்ன பயன்? நீதியானதைப் பேசி என்ன பயன்? – எனக் கேட்கிறார் சபை உரையாளர். இருந்தாலும், ஏரோது இயேசுவைக் காணத் தேடுகின்றார்.
சபை உரையாளரை எப்படிப் புரிந்துகொள்வது?
ஞானியர் வாழ்வின் இரட்டைத்தன்மையை உணர்ந்தவர்கள். பிறக்கின்ற குழந்தையில் அதன் இறப்பைப் பார்க்கிறவர்கள். ஒரு குச்சியின் ஒரு புறத்தை எடுக்கும்போது அதன் மறுபுறத்தையும் சேர்த்துப் பார்க்கிறவர்கள்.
ஆனால், பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ள வாழ்க்கை இனிது என்கிறார் சபை உரையாளர். அதுதான் நாளைய முதல் வாசகம்.
நிற்க.
பயனற்ற உலகிலும் உலகின் செயல்பாடுகள் நடுவிலும் தங்கள் வாழ்வின் பொருளைக் கடவுளில் கண்டுகொள்கிறார்கள் ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்.’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 209)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: