இன்றைய இறைமொழி
வியாழன், 28 மார்ச் 2024
பெரிய வியாழன் – ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி
விடுதலைப்பயண நூல் 12:1-8, 11-14. 1 கொரிந்தியர் 11:23-26. யோவான் 13:1-15
மூன்று அடையாளங்கள்
இன்றைய நாள் நான்கு நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது: (அ) இந்த இரவில்தான் இயேசு, ‘இது என் உடல், இது என் இரத்தம்!’ என்று சொல்லி, நற்கருணையை ஏற்படுத்துகின்றார். (ஆ) ‘இதை என் நினைவாகச் செய்யுங்கள்’ என்று பணிக்குருத்துவத்தை ஏற்படுத்துகின்றார். (இ) ‘இதை நீங்கள் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்’ என்று தன் சீடர்களின் பாதங்கள் கழுவி அன்பு பாராட்டும் தலைமைத்துவத்தைக் கற்றுக்கொடுக்கின்றார். (ஈ) ‘நான் உங்களுக்கு அன்பு செய்தது போல நீங்கள் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்’ என்று அன்புக் கட்டளையை புதிய கட்டளையாக வழங்குகின்றார்.
இந்த நாளில் மூன்று அடையாளங்களை நாம் கொண்டாடுகிறோம்: ‘இரத்தம்,’ ‘அப்பம்,’ ‘தண்ணீர்.’ இந்த மூன்று அடையாளங்களையும் இவை நமக்கு விடுக்கும் பாடங்களையும் சிந்திப்போம்.
இன்றைய முதல் வாசகம் விடுதலைப்பயண நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரயேல் மக்கள் கொண்டாடுகிற முதல் பாஸ்கா (‘கடத்தல்’) விழாவுக்கான அறிவுரைகளை ஆண்டவராகிய கடவுள் மோசே வழியாக அவர்களுக்கு வழங்குகிறார். இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தளையைக் கடந்து பாலும் தேனும் பொழியும் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு கடந்து செல்லும் நிகழ்வுக்கான தயாரிப்பாகவும், பார்வோன் மற்றும் எகிப்தியர் முன்னால் தம் வல்ல செயல்களைக் காட்டிய ஆண்டவராகிய கடவுள் ஆற்றிய பத்தாவது கொள்ளை நோயான தலைமகன் சாவை முன்னறிவிக்கும் நிகழ்வாகவும் இருக்கிறது அவர்கள் கொண்டாடிய முதல் பாஸ்கா.
நாள், ஆடு தெரிவு, உண்ணும் ஆள்கள் எண்ணிக்கை, உண்ணும் முறை என விதிமுறைகளைத் தருகிற ஆண்டவராகிய கடவுள், இரண்டு கட்டளைகளைத் தருகிறார்:
ஒன்று, ‘இரத்தத்தில் சிறிதளவு எடுத்து வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும்.’ ஏனெனில், இது ஆண்டவரின் பாஸ்கா. ‘நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது!’
இரண்டு, ‘இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறைதோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!’
இரண்டாவது கட்டளையை நிறைவேற்றும் முகமாகவே இயேசு தம் சீடர்களோடு பாஸ்கா உணவை உண்பதற்காக எருசலேம் செய்கிறார். பாஸ்கா விழா கொண்டாடுகிற இரவே அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவாக மாறுகிறது. பாஸ்கா விருந்துக்கொண்டாட்டத்தில்தான் (புளியாத அப்பப் பெருவிழாவுடன் இணைந்த கொண்டாட்டம்) நற்கருணையை ஏற்படுத்துகிறார். பாஸ்கா ஆடு போல இயேசு பலியிடப்படுகிறார். திராட்சை இரசத்தை அவருடைய இரத்தமாக நமக்குத் தருகிறார். அவருடைய இரத்தத்தால் நாமும் இறப்பிலிருந்து விடுதலை பெறுகிறோம்.
‘இரத்தம்’ என்னும் முதல் அடையாளம் ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தம் மக்கள் எனத் தேர்ந்துகொண்டதன் முன்னடையாளமாகவும், ஆண்டவர் அவர்களுக்குத் தருகிற பாதுகாப்பு, விடுதலை, வெற்றி ஆகியவற்றைக் குறிப்பதாகவும் அமைகிறது.
தொடக்கத் திருஅவை நம்பிக்கையாளர்களின் நான்கு அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது ‘அப்பம் பிடுதல்’ (மற்றவை, திருத்தூதர்களிடம் கற்றல், நட்புறவு, இறைவேண்டல்) (காண். திப 2:42). இல்லங்களில் கூடி வந்து அப்பம் பிடுதல் நிகழ்வு வழிபாட்டு நிகழ்வாகத் தொடங்கினாலும் காலப்போக்கில் உண்டு குடித்து மகிழும், செல்வந்தர்-ஏழைகள் வேறுபாடு பாராட்டும் இடமாக மாறிவிடுகிறது. இப்படிப்பட்ட சூழலில் கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகிற பவுல் – இரண்டாம் வாசகம் – ஆண்டவராகிய இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வை அவர்களுக்கு எடுத்துரைப்பதோடு, அப்பம் பிடுகிற கொண்டாட்டத்தின் நோக்கத்தையும் எடுத்துரைக்கிறார்: ‘நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும் வரை அறிவிக்கிறீர்கள்.’
அப்பம் பிடுதலில் மூன்று காலங்களும் ஒன்று சேர்கின்றன. இயேசு கடந்த காலத்தில் செய்த நிகழ்வை நினைவுகூருதல். நிகழ்காலத்தில் அதைக் கொண்டாடுதல். எதிர்காலத்தில் நிகழவிருக்கிற அவருடைய வருகையை எதிர்நோக்கியிருத்தல். கொரிந்து நகர மக்கள், இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் மறந்துவிட்டு, அதை வெறும் நிகழ்கால உண்டு-களித்தல் கொண்டாட்டமாக மாற்றியிருந்ததைக் கடிந்துகொள்கிறார் பவுல்.
தொடக்கத் திருஅவையினர் பெறுகிற அப்பம் ஆண்டவருடைய இறப்பை – வெறுமையை, தாழ்ச்சியை, தனிமையை, நொறுங்குநிலையை – அறிவிப்பதாக அமைகிறது.
காலடிகளை (பாதங்களை) கழுவுதல் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும், உரோமை-கிரேக்க எழுத்துகளிலும் மொழிந்துள்ளபடி, மூன்று பொருள்களைத் தாங்கி நிற்கிறது: (அ) வழிபாடு சார்ந்த தூய்மைப்படுத்துதல் (காண். விப 30:17-21. 40:30-32. 2 குறி 4:6. லேவி 16:24). வழிபாட்டுத் தளத்துக்குள் அல்லது நிகழ்வுக்குள் செல்கிற தலைமைக்குரு, குரு, நபர்கள் தங்கள் கைகளையும் கால்களையும் தூய்மைப்படுத்துகிறார்கள். வழிபாட்டுக்கு உதவி செய்யும் நோக்கத்திற்காகவும், கடவுளின் தூய்மைக்கு முன் செல்லும்போது நாமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்னும் அடையாளத்திற்காகவும் தூய்மைச் சடங்கு நடக்கிறது. (ஆ) வீடுகளில் தூய்மை அல்லது வசதிக்காக கழுவுதல். வெளியில் சுற்றிவிட்டு வரும் நபர் தன் இல்லம் நுழையுமுன் தன் பாதங்களையும், கைகளையும், சில நேரங்களில் முழு உடலையும் சுத்தம் செய்கிறார். தனிநபர் சுத்தம் அல்லது நோய்எதிர்ப்புக்காக இவ்வகை தூய்மை பேணப்படுகிறது. (இ) விருந்தோம்பலின் அடையாளம் (காண். தொநூ 18:4. லூக் 7:36-50. யோவா 12:2-8). விருந்து உண்பதற்கு முன்னதாக உடல் சுத்தம் செய்தல் என்னும் நோக்கமாக இருந்தாலும், வரவேற்பு, ஏற்றுக்கொள்ளுதல், நட்பு ஆகிய பொருள்களும் இங்கே ஒளிந்துள்ளன. பாதங்களைக் கழுவுதல் ஒருவர் தனக்குத் தானே செய்யும் செயலாகவும், அடிமைகள் மற்றவர்களுக்குச் செய்யும் செயலாகவும் இருக்கிறது. ஒருவருடைய பாதங்களைக் கழுவுகிற இன்னொருவர் அவருக்குத் தன்னையே அடிமையாக்கிக்கொள்கிறார்.
கிரேக்க-உரோமைக் கலாச்சாரத்தின் பின்புலத்தில், பாதம் கழுவுதல் நற்செயல்களில் ஒன்று எனக் கருதப்பட்டது. கைம்பெண்களின் பணிகளில் ஒன்றாக இது பரிந்துரைக்கப்படுகிறது (காண். 1 திமொ 5:9-10). ‘நம்மோடு உணவருந்துபவராகவும் நம் பாதங்களைக் கழுவுபவராகவும் கிறிஸ்து இருக்கிறார்’ என்று தெர்த்தூலியனும், ‘ஆயர் தன் அருள்பணியாளர்களின் பாதங்களைக் கழுவ வேண்டும்’ என்று அத்தனாசியுஸூம், ‘ஒருவர் மற்றவருடைய காலடிகளை, அடிமைகளின் காலடிகளையும் சேர்த்து, கழுவுவது அனைத்துக் கிறிஸ்தவர்களின் கடமை’ என்று கிறிஸோஸ்தமும் கூறுகிறார்கள்.
இயேசு தம் சீடர்களின் பாதங்களைக் கழுவுவதை எப்படிப் புரிந்துகொள்வது? பாஸ்கா கொண்டாட்டத்தில் இந்நிகழ்வு நடந்தாலும் வழிபாடு சார்ந்த பாதம் கழுவுதல் அல்ல இது. சுத்தம் அல்லது தனிநபர் தூய்மை சார்ந்ததும் அல்ல. ஏனெனில், விருந்தின் பாதியில் இது நடந்தேறுகிறது. விருந்தோம்பல் சார்ந்ததும் அல்ல. ஏனெனில், இயேசுவே இங்கு விருந்தினராக இருக்கிறார். இந்நிகழ்வு ஓர் அடையாளம். தாழ்ச்சியின், வெறுமையின், தற்கையளிப்பின் அடையாளம். ஆண்டவரும் போதகருமாக இருக்கிறவர் அடிமையாக மாற வேண்டும் என்று செயல்களால் பாடம் கற்பிக்கும் நிகழ்வு. இதைக் கற்றுக்கொள்கிற சீடர்கள் ஒருவர் மற்றவர்களுடைய காலடிகளைக் கழுவ வேண்டும். இதுவே இயேசு அவர்களுக்குக் கொடுக்கும் கட்டளை.
இயேசு சீடர்களின் காலடிகளைக் கழுவுதலுக்குப் பின்வரும் பொருள்களும் தரப்படுகின்றன: (அ) நற்கருணைக் கொண்டாட்டத்திற்கான தயாரிப்பு. (ஆ) திருமுழுக்கின் அடையாளம். (இ) பாவமன்னிப்பின் அடையாளம். (ஈ) திருமுழுக்கையும் நற்கருணையையும் தாண்டிய ஓர் அருளடையாளம். (உ) குருத்துவ திருநிலைப்பாடு. (ஊ) இயேசு மனுவுருவாதலின் அடையாளம்.
காலடிகளைக் கழுவும் நிகழ்வு வழியாக தாழ்ச்சியையும் பணிவிடை புரிதலையும் கற்பிக்கிறார் இயேசு.
இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் நாம் காண்கிற, ‘இரத்தம்,’ ‘உணவு,’ ‘தண்ணீர்’ என்னும் அடையாளங்கள் நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?
முதலில், அடையாளங்கள் அவற்றைக் கொண்டாடுபவர்களை, ஏற்றுக்கொள்பவர்களைப் பொருத்தே வடிவமும் அழகும் அர்த்தமும் பெறுகின்றன. அடையாளங்களை நாம் சடங்குகள் என்று குறைத்துக்கொள்ளக் கூடாது.
(அ) நம் நற்கருணைக் கொண்டாட்டம்
திருஅவையின் ஊற்று, மையம், உச்சமாக இருக்கிறது நற்கருணை. நற்கருணைக் கொண்டாட்டமே இறைமக்கள் குழுமத்தை ஒன்றுசேர்க்கிறது. இந்த நற்கருணைக் கொண்டாட்டத்திற்காகவே அருள்பணியாளர்கள் அருள்பொழிவு பெறுகிறார்கள். கடவுளின் உடனிருப்பை நமக்குக் காட்டுகிற இந்நற்கருணைக் கொண்டாட்டம் நாம் ஒருவர் மற்றவருக்கு, குறிப்பாக வலுவற்றவர்களுக்கு, நம் உடனிருப்பைக் காட்ட நம்மைத் தூண்ட வேண்டும். தகுந்த தயாரிப்புடன் நற்கருணைக் கொண்டாட்டத்தில் நாம் பங்கேற்க வேண்டும். நாம் உண்ணும் நற்கருணை, நம் உணவை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள நம்மைத் தூண்ட வேண்டும். ஒவ்வொரு முறையும் நாம் அப்பக் கிண்ணத்தையும் இரசக் கிண்ணத்தையும் கடந்துபோகிறோம். கிறிஸ்துவின் இரத்தத்தை நாம் அணிந்துகொள்வதன் (அருந்துவதன்) வழியாக இறப்பிலிருந்து விடுதலை பெறுகிறோம்.
(ஆ) பாதம் கழுவும் பணிக்குருத்துவம்
‘உங்களை நான் நண்பர்கள் என்று சொன்னேன்’ என மொழிந்த இயேசு, அடிமை போல சீடர்களின் பாதங்களைக் கழுவியபின், ‘நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்’ என்கிறார். பாதம் கழுவும் நிகழ்வில் இயேசு செய்த ஒவ்வொரு செயலுமே அருள்பணியாளர்களுக்கான பாடமாக இருக்கிறது. ‘இயேசு பந்தியிலிருந்து எழுதல்’ – ‘அருள்பணியாளர் தன் அருள்பொழிவு நிலையிலிருந்து எழுதல்.’ ‘மேலுடையைக் கழற்றுதல்’ – ‘திருவுடையை – மக்களிடமிருந்து தம்மை வேறுபடுத்துகிற நிலையை – களைதல்.’ ‘துண்டை இடுப்பில் கட்டுதல்’ – ‘மக்களுக்கும் நமக்கும் பொதுவான வலுவின்மையை, மானுட நொறுங்குநிலையை ஏற்றல்’. ‘தண்ணீர் எடுத்து சீடர்களின் பாதங்களைக் கழுவுதல்’ – ‘மக்களுக்குப் பணி செய்தல்.’ அதிகாரம் செலுத்துவதற்கு அல்ல, மாறாக, பணிவிடை செய்வதற்கே தன் அருள்பொழிவு என்பதை அருள்பணியாளர் உணர வேண்டும். தாமாகவே விரும்பி ஏற்று, அதற்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அருள்பணியாளர், ஒவ்வொரு நிலையிலும் கிறிஸ்துவை ஒத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.
(இ) தாழ்ச்சியில் கனியும் அன்பு
‘நான் உங்களுக்கு அன்பு செலுத்தியதுபோல, நீங்கள் ஒருவர் மற்றவருக்கு அன்பு செலுத்துங்கள்’ என்பதே இயேசு வழங்கிய புதிய அன்புக் கட்டளை. பாதம் கழுவும் சடங்கு அன்புக் கட்டளைக்கான முன்மாதிரியாகவும் உள்ளது. கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளை, குழும, சமூக உறவுகளில் அன்பு மேலோங்கி நிற்க வேண்டுமெனில், ஒருவர் மற்றவர்க்குத் தன்னையே கீழ்ப்படுத்த வேண்டும்.
இன்றைய நாளில் நாம் கொண்டாடுகிற மூன்று அடையாளங்களும் – ‘இரத்தம்,’ ‘உணவு,’ ‘தண்ணீர்’ – உடனிருப்பு, தற்கையளிப்பு, அன்பு போன்ற செயல்பாடுகளுக்கு நம்மை அழைத்துச் செல்வனவாக!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: