இன்றைய இறைமொழி
வியாழன், 4 ஜூலை 2024
பொதுக்காலம் 13-ஆம் வாரம் – வியாழன்
ஆமோஸ் 7:10-17. மத்தேயு 9:1-8
மனிதருக்கு அதிகாரம்!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் முடக்குவாதமுற்ற ஒருவருக்கு நலம் தருகிறார் இயேசு. ‘உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்லி நலம் தருகிறார் இயேசு. இயேசுவின் இச்சொற்களை மூன்று நிலைகளில் புரிந்துகொள்ளலாம்:
(அ) ‘பாவங்களுக்கும்’ ‘நோய்களுக்கும்’ உள்ள தொடர்பு. ஒருவர் செய்த நோய்க்குக் காரணம் அவருடைய பாவங்களே என்னும் புரிதல் இயேசுவின் சமகாலத்தில் இருந்தது.
(ஆ) பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு கொண்டவராக இருந்தார். பாவங்களை மன்னித்தல் கடவுளுக்குரிய அதிகாரம் என்றும் அன்று கருதப்பட்டது.
(இ) தம் சமகாலத்து மக்களின் நடுவில் சலனத்தை ஏற்படுத்துகிறார் இயேசு.
நிகழ்வின் இறுதியில், ‘இத்தகைய அதிகாரத்தை மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர் மக்கள்’ எனப் பதிவுசெய்கிறார் மத்தேயு.
பாவங்களை மன்னித்தல் என்பதை நம் வாழ்வியல் சவாலாக எடுத்துக்கொள்வோம்.
கடந்த காலத்தின் காயங்களையும் வடுக்களையும் நாம் மன்னிக்காதபோது அவை நம்மை முடக்கிவிடுகின்றன. உள்ளத்து அளவில் நாம் முடக்குவாதமுற்ற நிலையில் இருக்கிறோம்.
நம் அனுமதி இல்லாமல் யாரும் நம்மைக் காயப்படுத்த இயலாது என்ற நிலையில், நம் வாழ்வின்மேல் நாம் முழுமையான பொறுப்புணர்வு ஏற்கும்போது மன்னிப்பு சாத்தியமாகும்.
இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் ஆமோசுக்கும் குரு அமட்சியாவுக்கும் இடையே நடக்கும் உரையாடலை வாசிக்கிறோம். தெற்கு நாட்டைச் சார்ந்த ஆமோஸ் வடக்கு நாட்டில் இறைவாக்குரைப்பதை விரும்பாத அமட்சியா அவரைக் கடிந்துகொள்கிறார். இந்த நிகழ்வில் ஆமோஸ் தான் இறைவாக்கினராக அழைக்கப்பட்ட நிலையை எடுத்துரைக்கிறார். அழைத்தலின் பொருட்டே தான் வந்ததாகவும், பிழைத்தலின் பொருட்டு அல்ல என்றும் மொழிந்து தன் இறைவாக்குப் பணியை உறுதி செய்கிறார். ஆண்டவர் நம்மை அழைத்தாலன்றி அவருடைய பணியை நாம் செய்ய இயலாது.
நிற்க.
ஒருவர் மற்றவரை நாம் மன்னிப்பதும் இறைவனின் கொடையே. இத்தகையை மன்னிப்பை நாம் மற்றவர்களுக்கு வழங்கும்போதே கடவுளின் மன்னிப்பையும் பெற்றுக்கொள்கிறோம். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 139).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: