இன்றைய இறைமொழி
வியாழன், 5 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 22-ஆம் வாரம், வியாழன்
கொல்கத்தா நகர் (அன்னை) தெரசா, நினைவு
ஆசிரியர்கள் தினம்
1 கொரிந்தியர் 3:18-23. லூக்கா 5:1-11
கடவுளின் வழிகாட்டுதலில் பற்றுறுதி
நம் அனைவருக்கும் வரையறை அனுபவங்கள் உண்டு. வாழ்வின் ஒரு கட்டத்தில் சுவரை முட்டியவர்களாக, கிணற்றின் அடிப்பகுதியைத் தொட்ட வாளியாக உணர்கிறோம். இம்மாதிரியான நேரங்களில் கடவுளை ஏறெடுத்துப் பார்க்கிற நாம் அவரையே பற்றிக்கொண்டு வழிநடக்க வேண்டும் எனக் கற்பிக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. நம் புரிதலும் அறிதலும் அல்ல, மாறாக, கடவுளின் வழிகாட்டுதலே நமக்கு அவசியமாக இருக்கிறது. கடவுளின் விரல் பற்றுதலே மேன்மையான ஞானம்.
(அ) கடவுளின் ஞானமும் இவ்வுலகின் ஞானமும்
இவ்வுலகின் ஞானத்தால் ஏமாற்றப்படாதவாறு எச்சரிக்கையாக இருக்குமாறு கொரிந்து நகர மக்களை எச்சரிக்கிறார் பவுல் (முதல் வாசகம்). கொரிந்து நகர மக்களும் – நாமும் – இவ்வுலகின் பார்வையில் ‘மடமையை’ தழுவிக்கொள்ளும்போது கடவுளின் பார்வையில் ஞானிகளாக மாறுகிறோம். நுண்ணறிவு, ஆளுமை, தற்சார்பு, சமூக மேன்மை ஆகியவற்றைக் கொண்டு உலகம் நம்மை மதிப்படுகிறது. ஆனால், கடவுளைப் பற்றிக்கொள்வதற்கான தடைக்கற்களாக இவை மாறிவிடும் எனப் பவுல் நினைவூட்டுகிறார்.
கடவுளின் வழிகாட்டுதலைப் பற்றிக்கொள்வது என்றால், அவருடைய ஞானம் நம் ஞானத்தைவிட மேன்மையானது என அறிந்துகொள்வது. தாழ்ச்சியும், நம் வரையறை பற்றிய அறிதலும், கடவுளின் வழிகள் நம் வழிகளைவிட மேன்மையானவை என்னும் புரிதலும் அவசியம். கடவுளின் ஞானத்தை நோக்கிச் செல்வதன் வழியாக, நாம் இறைத்திட்டம் நோக்கியும் வாழ்வும் நோக்கியும் நகர்கிறோம்.
(ஆ) புரிந்துகொள்ள முடியாத நிலையிலும் கீழ்ப்படிதல்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காண்கிற பேதுரு இயேசுவின் சொற்கள்மேல் பற்றுறுதி கொண்டு வலைகளை வீசுகிறார். தச்சர் அறிவாரா தண்ணீரின் ஓட்டம்? என்னும் தயக்கம் அவரிடம் இருந்தாலும், இரவு முழுவதும் உழைத்தும் மீன் ஒன்றும் கிடைக்கவில்லை என்றாலும், இயேசுவின் சொற்களுக்குக் கீழ்ப்படிகிறார் பேதுரு. விளைவாக, மிகுதியான மீன்பாடு கிடைக்கிறது.
நம் அனுபவத்திற்கும் அறிவுக்கும் முரணாகத் தெரிந்தாலும் நம்பிக்கை கொள்ளும்போது வாழ்வின் முடிச்சுகள் அவிழத் தொடங்குகின்றன. பேதுருவின் தயக்கம் விரைவாக மறைகிறது. கடவுள் நம் சூழல்களையும் தாண்டிய பார்வையைக் கொண்டிருக்கிறார். அவருக்குக் கீழ்ப்படிதலே நலம்.
(இ) கடவுளின் வழிகாட்டுதல் நிறைவை நோக்கியும் பணி நோக்கியும் நம்மை இட்டுச் செல்கிறது
பேதுரு மிகுதியான மீன்பாட்டைப் பெற்றதோடு தன் வாழ்வின் புதிய பாதையையும் – மனிதர்களைப் பிடிப்பது – தெரிந்துகொள்கிறார்.
நாம் கடவுளின் வழிகாட்டுதலில் நடக்கும்போது அவருடைய ஆசீரைப் பெற்றுக்கொள்வதோடு, வாழ்வின் புதிய வழித்தடங்களில் நடக்கத் தொடங்குகிறோம். இவ்வுலகை மாற்றும் அழைப்பைப் பெறுகிறோம். அவருக்கும் அவருடைய மக்களுக்கும் பணி செய்யத் தொடங்குகிறோம்.
கொல்கத்தா நகர் (அன்னை) தெரசா
இன்று நாம் நினைவுகூறும் அன்னை தெரசா ஆசிரியப் பணி செய்வதற்காக இந்தியா வருகிறார். ஆனால், சேரிகளில் வாழ்ந்த மக்களைக் கண்டவுடன் அவருடைய பணி மாற்றம் பெறுகிறது. அன்பின் தூதுவராக மாறுகிறார். ஐயம், கடினமான பணிச்சூழல், உள்ளார்ந்த இருள், சோர்வு என எதிர்மறைக் காரணிகள் இருப்பினும் கடவுளின் கரம் பற்றித் தொடர்ந்து வழிநடந்தார். அன்புச் செயல்களாலும் பணியாலும் வறியவர்கள், முதியவர்கள், குழந்தைகள் நலம் பெற உழைத்தார். கடவுளில் வேரூன்றியவராக இருந்தார்.
ஆசிரியர்கள் தினம்
ஆசிரியர்கள் நம் இரண்டாவது பெற்றோர்கள். அறிவோடு சேர்த்துத் தங்கள் ஞானத்தையும் நமக்குத் தருபவர்கள். அவர்களின் கரம் பற்றியே நாம் இந்த உலகத்தை அறிந்துகொண்டோம். ‘மீன்கள்’ பிடிக்கக் கற்றுத் தந்ததோடு, மனிதர்களையும் பிடிக்கும் மேன்மையான இலக்கை நமக்கு அவர்கள் உருவாக்கித் தந்தார்கள். நன்றியோடு அவர்களை நினைவுகூர்தல் நலம்.
நிற்க.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் கடவுளின் வழிகாட்டுதலில் பற்றுறுதி கொள்கிறார்கள். ஏனெனில், அதுவே ஞானம், ஆசீர், இலக்கு என்பதை அவர்கள் அறிந்துள்ளார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 191).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: