இன்றைய இறைமொழி
வியாழன், 8 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 18-ஆம் வாரம் – வியாழன்
எரேமியா 31:31-34. மத்தேயு 16:13-23
நம்பிக்கையும் செயலும்
நற்செய்தி நூல்களில் நெருடலான பகுதிகளில் ஒன்றுதான் இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி. பேதுருவை போற்றிப் பாராட்டுகிற இயேசு, சட்டென மாறி அவரைக் கடிந்துகொள்கிறார். ‘எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை’ என்று சொல்கிற இயேசு, ‘நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்’ என மொழிகிறார்.
கடவுளர்கள் இப்படித்தான்! அவர்களுடைய எண்ண ஓட்டங்களை நம்மால் புரிந்துகொள்ளவோ, கணிக்கவோ இயலாது! சொற்களால் அவர்களை நம் வயப்படுத்திவிட முடியாது. அவர்கள் தங்கள் போக்கில் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.
இயேசு மெசியா என்ற பேதுருவின் நம்பிக்கை அறிக்கை பாராட்டுதற்குரியதாக இருந்தது. ஆனால், மெசியாவுக்கான வழி அல்லது செயல்பாடு பாடுகள் நிறைந்தது என்பதை அவர் ஏற்றுக்கொள்வதாக இல்லை, அல்லது அவருக்குப் புரியவில்லை.
இந்த நிகழ்வு நமக்கு மூன்று பாடங்களைக் கற்றுத் தருகிறது:
(அ) பேதுருவின் சரணாகதி
மெசியா எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த அந்தக் காலத்தில், இயேசுவை மெசியா என்று அறிந்ததோடு, ‘வாழும் கடவுளின் மகன்’ என அறிக்கையிடுகிறார் பேதுரு. கடவுள் மனுவுருவான மறைபொருள் முழுமையாக புரிந்ததோ இல்லையோ, இயேசுவே கடவுளின் மகன் என சரணடைகிறார் பேதுரு. ‘நீங்கள் நான் யாரெனச் சொல்கிறீர்கள்?’ என்பது இன்றும் நம்மை நோக்கிக் கேட்கப்படும் ஒரு கேள்வி. நம் ஒவ்வொரும் நம் உள்ளத்தில் இதற்கான விடை தர வேண்டும்.
(ஆ) பேதுரு பெற்ற பேறு
மீன்பிடித்துக் கொண்டிருந்தவரை மனிதரைப் பிடிக்குமாறு அழைத்த இயேசு, அவர் விண்ணகத்தின் திறவுகோல்களைத் தாங்குவார் என வாக்குறுதி தருகிறார் இயேசு. நம் நம்பிக்கைப் பார்வை அகலமாகும்போது கடவுள் நமக்கு வழங்கும் பேறுகளின் எண்ணிக்கையும் அதிகமாகிறது.
(இ) பேதுருவின் துணிச்சல்
இயேசுவின் நலம் விரும்பியாக இருக்கிறார் பேதுரு. தீமையும் துன்பமும் இயேசுவுக்கு நேரக்கூடாது என விரும்புகிறார். கடவுளுக்கே நலம் விரும்புகிறார்கள் மனிதர்கள்! துன்பத்தையும் தாண்டிய மாட்சியைக் காணுமாறு பேதுருவை அழைக்கிறார் இயேசு. பேதுருவின் துணிச்சல் பாராட்டுதற்குரியது.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா புதிய உடன்படிக்கை பற்றிப் பேசுகிறார். இறைவன் தம் வார்த்தைகளை மாந்தர்களின் உள்ளத்தில் எழுதி வைக்கிறார். கடவுளின் நெருக்கமே புதிய உடன்படிக்கையின் முதன்மையான கூறு.
நிற்க.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் கடவுள்மேல் உள்ள நம்பிக்கையை அறிக்கையிடுவதோடு, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தங்களுடைய செயல்களை அமைத்துக்கொள்கிறார்கள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 168).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: